டைட்டானிக், அவதார் திரைப்படங்களின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் புதிய அறிவியல் புனைவு, ஆக் ஷன் திரைப்படம் ’அலிடா:பேட்டில் ஏஞ்சல்’.
நவீன அறிவியல் சரிவு காணும் எதிர்காலமொன்றில் கதை நடக் கிறது. விஞ்ஞானி ஒருவர் இயந்திரக் குப்பையில் கிடைக்கும் சிதிலமடைந்த அலிடாவுக்கு ‘சைப்ராக்’ பாணியில் முழு உருவம் கொடுக்கிறார். தன்னைப் பற்றிய முந்தைய நினைவுகள் அழிந்த அலிடா, ஒரு கட்டத்தில் தனது முழுத் திறனையையும் உணருகிறாள்.
அதுவரை தேவதையென வலம் வந்தவள் புதிய போராளியாகிறாள். தீய சக்திகளுக்கு எதிரான யுத்தத்தையும் தொடங்குகிறாள். சொல்வதற்குச் சுலபமான கதையின் காட்சிகளை ‘அவதார்’ பட பாணியில் பிரம்மாண்டமாக அமைத்து மிரட்டியுள்ளனர். அலிடாவுக்குத் திரைக்கதை அமைத்து தயாரிப்பில் இணைந்திருக்கும் ஜேம்ஸ் கேமரூனே இவையனைத்துக்கும் காரணம்.
உண்மையில் அவதாருக்கு முன்பாகவே அலிடாவைப் படமாக்கும் முயற்சியில் ஜேம்ஸ் கேமரூன் இருந்தார். ஜப்பானிய காமிக்ஸான ‘மங்கா’வின் தீவிர ரசிகரான கேமரூன், யுகிடாகி ஷிரோவின் ‘அலிடா’ என்ற சாகச நாயகியை ஹாலிவுட்டுக்குக் கடத்தும் முயற்சியில் புதிய திரைப்படத்துக்கான பணிகளை 2000-ல் தொடங்கினார். 2003-ல் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியானது.
ஆனால், உலகின் உச்சக்கட்ட சூழலியல் சீர்கேடு அவரை ‘அவதார்’ கதையை முதலில் படமாக்க உந்தியது. ‘அவதா’ரின் பெரும் வெற்றி, அதன் அடுத்த பாகங்களில் கேமரூனை மூழ்கடிக்க, அலிடாவை இயக்கும் பொறுப்பை ராபர்ட் ரோட்ரிக்ஸ் (Robert Rodriguez) வசம் ஒப்படைத்தார். கூடவே ‘அவதார்’ பட வரிசைக்கான அனைத்துத் தொழில்நுட்பப் பாய்ச்சல்களையும் அலிடாவில் களமிறக்கியுள்ளார்.
லைவ் ஆக்ஷனுடன் இணைந்த சிஜிஐ தொழில்நுட்பத்திலான காட்சிகளில் 3டி மற்றும் ஐமாக்ஸ் பதிப்புகளாக அலிடா உருவானது. அலிடா அனிமேஷன் உருவுக்கு ’ரோஸா சலஸார்’ தனது நடிப்பால் உயிர் கொடுத்துள்ளார். கிறிஸ்டோஃப் வால்ட்ஸ், ஜெனிஃபர் கானலி, மகெர்ஷலா அலி உள்ளிட்ட பலர் உடன் நடித்துள்ளனர். தமிழில் அலிடா பிப்ரவரி 8 அன்று வெளியாகிறது.
ட்ரெய்லரைக் காண:https://bit.ly/2Fv2u6Q