மனோஜ் நைட் சியாமளனின் ‘அன்பிரேக்கபிள்’ (2000), ‘ஸ்பிளிட்’ (2017) படங்களின் தொடர்ச்சியாக மூன்றாவது பாகமாக வெளியாகிறது ‘கிளாஸ்’ (Glass) திரைப்படம்.
ரயில் விபத்து ஒன்றில் சக பயணிகள் அனைவரும் இறந்துபோக, உடலில் சிறு கீறல் கூட விழாமல் அதில் பயணித்த ஒருவன் மட்டும் உயிர் பிழைக்கிறான். அந்த விபத்தின் மூலமாக அவனைக் கண்டடையும் ஒரு
மாற்றுத் திறனாளியால் சூப்பர் ஹீரோவாகவும் அவன் முன்மொழியப்படுகிறான். அந்த இருவரின் பின்னணி, இருவருக்கும் இடையிலான ஊடாட்டம் ஆகியவற்றை மைய மாக வைத்து 2000-ல் உருவான ‘அன்பிரேக்கபிள்’ (Unbreakable) ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படம்.
சந்திரமுகி, அந்நியனுக் கெல்லாம் அண்ணனாக 23 பர்சனாலிட்டிகளைத் தனக்குள் கொண்ட இளைஞன் ஒருவன், மேலதிகமாக 24-வது பர்சனா லிட்டியைத் தனக்குள் பலமாகக் கட்டமைக்க முயல்கிறான். அதற்கான முயற்சியில் 3 இளம் பெண்களையும் கடத்துகிறான். இந்தப் பின்னணியில் 2016-ல் வெளியாகிப் பெரும் வெற்றியடைந்தது ‘ஸ்பிளிட்’ (Split) திரைப்படம்.
இந்த இரண்டின் தொடர்ச்சியாக 2019, ஜனவரி 18 அன்று வெளியாகவிருக்கும் மூன்றாவது திரைப்படம்தான் ‘கிளாஸ்’. இரண்டாம் படத்தின் மல்டிபிள் பர்சனாலிட்டி சூப்பர் வில்லனை, முதல் படத்தின் சூப்பர் ஹீரோ எதிர்கொள்வதுதான் மூன்றாவது திரைப்படத்தின் கதை.
‘நமக்கான வில்லன் எங்கோ ஒளிந்திருப்பதில்லை; நம் மத்தியில் இருந்துதான் வெளிப்படுவார். அதேபோல நம்மைக் காப்பாற்றும் ஹீரோ வேறெங்கிருந்தும் வருவதில்லை; நமக்குள்ளிருந்துதான் வெளிப்படுவார்’ ‘கிளாஸ்’ திரைப்படம் சொல்ல வருவது இவைதான்.
முதலிரண்டு படங்களைப் போன்றே ‘கிளாஸ்’ திரைப்படத்தையும் எழுதி, இயக்கியதுடன் தயாரிப்பிலும் இணைந்திருக்கிறார் புதுச்சேரியில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்த மனோஜ் நைட் சியாமளன். சூப்பர் ஹீரோவாக புரூஸ் வில்லிஸ், சூப்பர் வில்லனாக ஜேம்ஸ் மெக்அவாய் (James McAvoy) ஆகியோர் தோன்ற, இருவரையும் பிணைக்கும் முக்கோணத்தின் மூன்றாவது பக்கமாக ‘மிஸ்டர்.கிளாஸ்’ பாத்திரத்தில் சாமுவேல் ஜாக்சன் தோன்றுகிறார். ‘அன்பிரேக்கபிள்’ சுமாரான வெற்றி; ‘ஸ்பிளிட்’ ஆண்டின் அதிகம் வசூலித்த திரைப்படம். இந்த வரிசையில் ‘கிளாஸ்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.