இந்து டாக்கீஸ்

திரைப் பள்ளி 26: கதைச் சுருக்கம் என்பது…

ஆர்.சி.ஜெயந்தன்

கோடம்பாக்கத்தை நீங்கள் கடந்து செல்ல நேர்ந்தால் ‘கதைப் பஞ்சம்’, ‘கதைத் திருட்டு’ ஆகிய இரண்டு பதங்களைக் கேட்கலாம். செவிவழிக் கதைகள், நாட்டார் கதைகள் தொடங்கி, நமது சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம்வரை இரண்டாயிரமாண்டு தமிழ் இலக்கியப் பரப்பில் ஆயிரக்கணக்கான சிறந்த கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், இலக்கியத்திலிருந்து தனக்கான கதைகளைத் தமிழ் சினிமா எடுத்துக்கொள்ளாமல் தாழ்வு மனப்பான்மையுடன் தவழ்ந்துகொண்டிருக்கிறது. இருப்பினும், சினிமா வரலாற்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இலக்கியத்திலிருந்து எடுத்தாளப்பட்ட கதைகள் திரைப்படங்களாகிப் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியிருக்கின்றன.

இயக்குநரே கதையை எழுதிவிட வேண்டும் என்று எண்ணும் நோய்தான் திரைக்கதை எழுத்தாளர்கள் தமிழ் சினிமாவில் இல்லாமல்போனதற்கு முக்கியக் காரணம். காலந்தோறும் திரையுலகில் நுழைந்த சில இலக்கியவாதிகளைப் போல் தற்காலத்தில் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற நவீன இலக்கிய ஆளுமைகள் தமிழ் சினிமாவில் திரைக்கதை எழுத்தாளர்களாகவும் இருக்கிறார்கள்.

ஆனால், படமாக்கத் தகுதியான அவர்களது படைப்புகளை நாடாமல், நாயகனுக்காக இயக்குநர் உருவாக்கும் ‘டெம்பிளேட்’ கதைகளுக்குத் திரைக்கதையிலும் உரையாடலிலும் பணியாற்றுகிறவர்களாக அதிகமும் அவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். மலையாளம், கன்னடம், இந்தி, வங்காளம் ஆகிய மொழிகளைப் போல் திரைக்கதை எழுத்தாளர்கள் முதன்மை பெரும் சூழல் தமிழ் சினிமாவில் உருவாகும் என்ற நம்பிக்கையுடன், ‘சஞ்சாரம்’ என்ற நாவலுக்காக 2018-ம்

ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுபெற்ற எஸ்.ராமகிருஷ்ணனின் ‘புத்தனாவது சுலபம்’ சிறுகதையைத் தழுவி, ஒரு குறும்படத்துக்கு எப்படித் திரைக்கதை எழுதுவது என்பதைப் பயிற்சியாக வைத்துக்கொள்ளலாம்.

எப்படி இருக்க வேண்டும் கதைச் சுருக்கம்?

 திரைப்பள்ளியின் கடந்த பகுதியில் ‘புத்தனாவது சுலபம்’ சிறுகதையை வாசிக்கும்படி இணையத்தில் வாசிக்கக் கிடைக்கும் அதன் இணைப்பை வெளியிட்டிருந்தோம். இன்னும் படிக்காதவர்கள் இந்த இணைப்பில் https://bit.ly/2QpSkdw ஒரு சொடுக்கில் தாவிச்சென்று அதை வாசித்துவிட்டுக் கட்டுரையைத் தொடருங்கள். இணைய இணைப்பு இல்லாதவர்களுக்காக அந்தச் சிறுகதையின் கதைச் சுருக்கத்தை இப்போது காண்போம். அதற்குமுன் கதைச் சுருக்கம் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிக் கொஞ்சமாகத் தெரிந்துகொள்ளலாம்.

கதைச் சுருக்கம் என்பதை ஆங்கிலத்தில் ‘சினாப்சிஸ் அல்லது நாரெட்டிவ் ஆர்க்’ (synopsis or narrative arc) என்று கூறுவார்கள். கதைச் சுருக்கத்தில், உங்கள் திரைக்கதையின் முக்கியக் கதாபாத்திரங்கள் யார், அவர்களுக்கு என்ன பிரச்சினை, அதை அவர்கள் எப்படிக் கடந்து வருகிறார்கள், அதற்காக அவர்கள் என்ன செய்கிறார்கள், முடிவு என்னவாக ஆனது என்ற சாராம்சம் இடம்பெற வேண்டும்.

பத்து நிமிடக் குறும்படத்துக்கான திரைக்கதையின் கதைச் சுருக்கத்தை 150 வார்த்தைகளில் எழுதிப் பழகுங்கள். 70 பக்கத்துக்கான ஒரு முழு நீளத் திரைப்படத்தின் கதைச் சுருக்கத்தை 500 வார்த்தைகளுக்குள் அடங்குமாறு எழுதிப் பழகுங்கள். மிக முக்கியமாக, கதைச் சுருக்கத்தில் உங்கள் முக்கியக் கதாபாத்திரத்தின் முக்கியச் செயல் அல்லது கதையை நகர்த்திச் செல்லும் அதன் முக்கியச் செயல்கள் (Key actions), அந்தச் செயல்களுக்கான நோக்கம் ஆகியவற்றை மறக்காமல் குறிப்பிடுவதுடன் கதை யாரிடமிருந்து தொடங்கி யாரிடம் முடிகிறது என்பதையும் குறிப்பிடத் தவறாதீர்கள். இப்போது ‘புத்தனாவது சுலபம்’ சிறுகதையின் கதைச் சுருக்கத்துக்கு வருவோம்.

அப்பாக்களின் தோளைத் தொடும் வரையில்தான் மகன்கள் அவரது விரலைப் பற்றிக்கொண்டு திரிகிற பையன்களாக இருக்கிறார்கள். பதின் பருவத்தைக் கடந்துவிட்டால் அப்பா அவர்களின் பார்வையில் ‘பழைய பஞ்சாங்கம்’ ஆகிவிடுகிறார். வளர்ந்து, கல்லூரியில் பயிலும் மகன்களுக்கும் அப்பாக்களுக்குமான இடைவெளியை அதிகரித்துவிடுவதில் நவீன வாழ்க்கைமுறைக்குப் பெரிய பங்கிருக்கிறது.

‘புத்தனாவது சுலபம்’ சிறுகதையில் ஒரு அப்பாவுக்கும் கல்லூரிப் படிப்பைத் தொடராமல் விட்ட அவருடைய மகனுக்கும் இடையில், பூதாகரமாக உருப்பெற்று வளர்ந்துவிட்ட தலைமுறை இடைவெளியும் அது உருவாக்கிய மன அழுத்தத்தில் புழுங்கும் ஒரு தந்தையின் புலம்பல் உருவாக்கும் சித்திரங்களும் மகன் பற்றிய பயத்தில் இருக்கும் எல்லா அப்பாக்களையும் நம் கண்முன்னால் கொண்டுவருகின்றன.

கதை நாயகன் அருணுடைய வாழ்க்கை முறையும் அதை அவனுடைய அப்பா எப்படி எடுத்துக்கொண்டு மனப்போராட்டம் நடத்துகிறார் என்பதையும் எளிய வர்ணனைகளால் சித்தரித்துச் செல்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அச்சிறுகதையை ஒரு குறும்படத்துக்கான திரைக்கதையாக்கும் நோக்கத்துடன் கீழ்க் கண்டவாறு கதைச் சுருக்கம் எழுதிக்கொள்ளலாம்.

கழுகு

அருண் 24 வயது இளைஞன். கல்லூரியின் இறுதியாண்டை டிஸ்கண்டினியூ செய்தவன். ஸ்டைலுக்காகத் தாடியும் கடுக்கன் அணிந்த காதுக்குச் சற்று மேலே சுமார் ஐம்பது அறுபது முடிகளுக்கு மட்டும் வெளிர் பிங் வண்ணத்தில் பிளீச்சும் செய்திருப்பவன். பல நண்பர்கள், ஒரு பெண் தோழி, சிகரெட், பீர் பழக்கம் உண்டு. 17 வயது வரை அப்பாவின் கட்டுக்குள் இருந்த அருண், கல்லூரியில் சேர்ந்தபின் மாமா வாங்கிக்கொடுத்த பைக் அவனது உலகத்தையே மாற்றிவிடுகிறது.

அருண் பைக் ஓட்டுவதை விரும்பாத அப்பா, அதனால் அவனது வாழ்க்கை முறையே மாறிப்போய்விட்டதாக நினைத்து தனக்குள் வைத்துக் கலங்குகிறார். அம்மாவோ மகனின் மாற்றங்களுக்காக அலட்டிக்கொள்கிறவள் அல்ல. சாகச உணர்வுடன் அவன் பைக் ஓட்டும் விதத்தைக் கண்டு அஞ்சும் அப்பா, பின்னிரவுகள் வரை வீட்டுக்கு வராத மகனை நினைத்து மனம் புழுங்குகிறார். நள்ளிரவில் தூக்கம் கெட்டுத் தண்ணீர் குடிக்க எழுந்த அவர், அருண் பைக் நிறுத்தும் இடம் காலியாக இருப்பதைப் பார்த்துப் பயப்படுகிறார்.

அவரது பார்வையில் அருணின் பைக் உயர உயரப் பறந்து வானிலிருந்து இந்த உலகை வேடிக்கை பார்த்து மகிழும் ஒரு கழுகாகத் தெரிகிறது. அப்பாவைவிட அம்மாவுக்குக் கொஞ்சம் அடங்கிப்போகும் அருண், அப்பாவைப் பழைய ஆளாகப் பார்க்கிறான். அவருடன் மிகக் குறைவாகப் பேசுகிறான். ஒரு தந்தையாக அவரது உணர்வுகளில் இருக்கும் தவிப்பை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லையா, அல்லது புரிந்தும் புரியாமல் அவனுக்கான சுதந்திரத்தை அவனே எடுத்துக்கொண்டானா; முடிவுதான் என்ன? -

இவ்வளவுதான் கதைச்சுருக்கம்.

குறும்படத்துக்கு ‘கழுகு’ என்று தலைப்பிட்டு கதைச் சுருக்கத்தை எழுதிவிட்டோம். இனி ஒரு நவயுக இளைஞனின் வாழ்க்கை முறையையும் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தூக்கம் இழந்து தவிக்கும் ஒரு தந்தையின் உணர்வுகளையும் காட்சிகளாக எப்படி எழுதப்போகிறோம், குறும்படமாக இதைப் பார்ப்பவர்களின் உணர்வுவைத் தொடும் தருணத்தை அதற்குள் எப்படி உருவாக்குவது என்பதைப் பார்ப்போம். காட்சிகளை எழுதத் தொடங்கும் நாம் ஏற்கெனவே தெரிந்துகொண்ட இடம் மற்றும் காலத்தையும் குறிப்பிட்டுக் காட்சிகளில் நடக்கும் செயல்களைக் காட்சிக் கோணங்களுடன் எப்படி விவரித்து எழுதுவது என்பதை அடுத்துப் பார்ப்போம்.

தொடர்புக்கு:jesudoss.c@thehindutamil.co.in

SCROLL FOR NEXT