இந்து டாக்கீஸ்

திரைக்குப் பின்னால்: உலக சினிமாவின் உள்ளூர் மனிதர்!

செய்திப்பிரிவு

சென்னையின் மிகச் சுறுசுறுப்பான பகுதிகளில் ஒன்று அண்ணா மேம்பாலத்தை ஒட்டியிருக்கும் ஜெமினி பார்சன் அடுக்குமாடி குடியிருப்பு. உள்ளே நுழைந்து ‘இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் அலுவலகத்துக்கு எப்படிச் செல்ல வேண்டும்’ என்று விசாரித்தால் ‘யாரு தங்கராஜ்சார்  ஆபீஸா?’ என்று கேட்டார்கள்; அங்கே கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த சிறு பையன்கள். அவர்களுக்கு மட்டுமல்ல; அங்கு பணிபுரியும் பாதுகாவலர் முதல் பெரியவர்கள்வரை அத்தனை பெருக்கும் அது தங்கராஜ் ஆபீஸ்தான்!

சென்னையின் புகழ்பெற்ற திரைப்படச் சங்கத்தின் அலுவலகம், அதன் செயலாளராகப் பொறுப்பு வகித்துவரும் தங்கராஜின் ஆபீஸ் ஆக மாறியதில் அவரது தோழமை பிடிபட்டுவிடுகிறது. இரண்டாவது மாடியில் ஏறி அலுவலத்துக்குள் நுழைந்தால், சுவர் நெடுகப் பொருத்தப்பட்டிருக்கும் அலமாரிகளில் நூற்றுக்கணக்கான டிவிடிக்கள் வரவேற்கின்றன.

மேஜை, நாற்காலி இருந்த இடங்களைத் தவிர தரையெங்கும் உலக சினிமா டிவிடிக்கள் குவிந்து கிடக்கின்றன. ஒரு குழந்தையைப் போல் தரையில் அமர்ந்து அவற்றைப் பிரித்துச் சரிபார்த்து அடுக்கிக்கொண்டிருந்தவரிடம் ‘தங்கராஜ் சாரைப் பார்க்கணும்’ என்றோம். ‘நான் தான் தங்கராஜ்.. வாங்க உட்காருங்க’ என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். நெற்றியில் பூசப்பட்ட சந்தனத்தின் நடுவில் சிறு தீற்றலாகக் குங்குமம் டாலடிக்க உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.

வளர்க்கப்பட்ட ரசனை

“கடந்த சில ஆண்டுகளோட ஒப்பிடும்போது டிசம்பர்ல நடந்து முடிஞ்ச பதினாறாவது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவுக்குப் பெரிய வெற்றி கிடைச்சது. அதுக்கு முதல் காரணம் கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பெரும்பாலான படங்களை இந்த முறை சென்னைக்குக் கொண்டு வந்ததுதான். திரையிடப்பட்ட 150 படங்கள்ல, 120 படங்கள் சிறந்த திரை அனுபவமா அமைஞ்சுதுன்னு கூர்மையா மதிப்பிடுற பல சினிமாஆர்வலர்கள் சொன்னாங்க. இதுக்குப் படங்களை அலசி ஆராய்ந்து தேர்வு செய்துகொடுத்த தேர்வுக் குழுவோட அக்கறைதான் காரணம்.

முக்கியமா இந்த முறை 18 - 40 வயசுக்கு உட்பட்ட இளைஞர்கள் அதிக அளவுல குவிஞ்சிட்டாங்க. அண்ணாசாலையில ஒதுக்கியிருந்த நான்கு திரையரங்குகள்ல காட்சி நேரத்துக்கு முன்னாடியே வந்து, வரிசையில நின்னு இடம்பிடிக்க வேண்டிய சூழ்நிலை கடந்த 15 வருஷத்துல இப்போதான் நடந்திருக்கு. இளைஞர்கள் படம் பார்த்து முடிச்சிட்டு உடனே டிஸ்கஸ் பண்றதைப் பார்த்தேன். பல ஊர்கள்லேர்ந்து வந்திருந்த ரசிகர்களோட ரசனை எவ்வளவு உயர்ந்திருக்குன்னு அந்த விவாதங்களுக்குக் காதுகொடுத்தப்போ தெரிஞ்சுகிட்டேன்.

இந்த ரசனை உயர்வுக்கு இணையம் மட்டுமே காரணம்னு சொல்லிட முடியாது. ‘இந்து தமிழ்’ மாதிரியான பத்திரிகைகள் உலக சினிமாவுக்குத் தொடர்ந்து தர்ற தரமான அறிமுகம், இந்தப் பட விழாவோட அன்றாட நிகழ்வுகளை மீடியா பர்ட்னரா இருந்து கொண்டுபோய்ச் சேர்க்கிற அர்ப்பணிப்பு, சிற்றிதழ்களோட பங்களிப்பு, சிறிய அளவுல ஊர்தோறும் நடத்தப்படுற படவிழாக்கள்னு கடந்த ஐந்து வருஷத்துல நிறைய மாற்றங்கள் நடந்துருக்கு. இப்போ திரையரங்குகள்ல குறைந்தது 2கே, அதிகபட்சம் 4கே  தரத்துல திரையிடல் வசதி இருக்கிறதும் சினிமா பார்க்கிற அனுபவத்தை மாத்தியிருக்கு.

ஆச்சரியமான பிளாஷ்-பேக்

திரும்பிப் பார்த்தா ஆச்சரியமா இருக்கு. சினிமாமேல இருந்த காதலா, பைத்தியமான்னு தெரியல. என்னோட சின்ன வயசுல ராயப்பேட்டையில இருந்த பைலட் தியேட்டர்லதான் அடிச்சிப் புடிச்சி ஆங்கிலப் படங்கள் பார்ப்பேன். ஹாலிவுட் சண்டைப் படங்கள், கௌபாய் படங்கள்ல இருந்த ஆர்வம் அப்படியே உலக சினிமா பக்கம் திரும்பினதுக்குக் காரணம் அப்போ இருந்த சினிமா சங்கம் ஒன்றில் சேர்ந்து படங்கள் பார்க்கத் தொடங்கினதுதான்.

ஒரு கட்டத்துல என்னோட நண்பர்கள் ஸ்வைன், மகோபத்ராவோட இணைந்து 2003-ல் இன்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேசன் சங்கத்தைத் தொடங்கினப்போ, எங்க கையில சில ஆயிரங்கள்தான் இருந்தது. பல நேரம் சங்க அலுவலகத்துக்கு வாடகை கொடுக்கவும் மின்கட்டணம் செலுத்தக்கூட சந்தாத் தொகை கைகொடுக்காது. கடன்வாங்கிக்கூட சினிமா கலையக் கொண்டாடணும்னு நினைக்க வெச்சது தரமான சினிமாக்கள் மேல இருந்த ஈர்ப்புதான்.

பிறகு கான் திரைப்பட விழாவுக்குப் போய்வந்த அனுபவம், அங்கே திரையிடப்படுற சிறந்த படங்களைச் சென்னைக்கும் கொண்டுவரணும்கிற ஏக்கமா மாறிடுச்சு. அப்படித்தான் 16 வருஷத்துக்கு முன்னாடி கையிலிருந்த சொற்பப் பணத்தையும் நண்பர்களோட உதவியையும் வெச்சுகிட்டு முதல் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவை நடத்திமுடிச்சோம்.

அதன்பிறகு எல்லாமே தானா நடக்கத் தொடங்கிடுச்சு. அதற்குக் காரணம் எங்க குழுமேலயும் சங்கத்துமேலயும் எல்லாரும் வெச்சிருக்கிற நம்பிக்கை. உலக சினிமாக்களை அந்தந்த நாட்டுத் தூதரகங்களின் ஏற்பாட்டோடு பெற்றுத் திரையிட்டோம். ஆறாவது சென்னை சர்வதேசப் படவிழாவுக்கு அப்போஆட்சியிலிருந்த திமுக அரசாங்கத்துகிட்டேயிருந்து உதவி கிடைச்சது.

அப்போ தொடங்கி இப்போ வரைக்கும் தமிழ்நாடு அரசின் உதவிதான் பெரிய பக்கபலம். அரசு தரும் மானிய உதவி விழாவுக்கு முன்னதாகக் கிடைத்தால் இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும். இப்போதைக்குத் தமிழ்ப் படங்களுக்கான போட்டி சிறப்பா நடந்துகிட்டு இருக்கு. இதைத் தாண்டி உலக சினிமாக்களுக்கான போட்டிப் பிரிவு தொடங்குகிறதுதான் எதிர்கால இலக்கா இருக்கு. அதுக்கும் வழி பிறக்கும்னு நினைக்கிறேன்” என நம்பும் தங்கராஜ், இந்த 75 வயதிலும் சுறுசுறுப்பாகச் சுற்றிவரும் சினிமா தேனீயாகத் திகழ்கிறார்.

 - யாழினி - ஜான்சி ராணி அப்பு (பயிற்சி இதழாளர்)

SCROLL FOR NEXT