நட்சத்திரங்கள் ஒருவரை ஒருவர் கலாய்ப்பதெல்லாம் ஒன்றுமே இல்லை: நட்சத்திரங்களைக் கூலாக ரசிகர்கள் கலாய்ப்பது டிவிட்டரில் முன்பைக் காட்டிலும் அதிகரித்திருக்கிறது.
த்ரிஷா, ராய் லட்சுமி இருவருக்கும் 'மங்காத்தா' படத்தின்போது ஆரம்பித்த சண்டை இப்போது வரை தொடர்கிறது என்ற செய்திக்கு டிவிட்டர் மூலம் த்ரிஷா, ராய் லட்சுமி இருவருமே முற்றுப்புள்ளி வைத்தார்கள். “எங்களுக்குள் சண்டையா.. அய்யோ.. அய்யோ!” என்பதில் ஆரம்பித்து, “எப்போது த்ரிஷா சென்னை வருகிறாய்?” என்று ராய் லட்சுமி கேட்க, அதற்கு த்ரிஷா பதிலளித்திருந்தார்.
லிங்குசாமியின் பழைய தொலைக்காட்சிப் பேட்டியான, “கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கி இருக்கிறேன்” என்ற பேட்டியை மறுபடியும் பகிர்ந்து, லிங்குசாமியை மொத்தமாகக் கலாய்த்துவந்தார்கள். இதற்கு முற்றுப்புள்ளியே இல்லாத வகையில் இன்னும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு செய்துவரும் கலாய்ப்புகளுக்கு, இயக்குநர் வெங்கட்பிரபு தனது ட்விட்டர் தளத்தில் பதிலளித்திருந்தார். உடனே அவரையும் தங்களது கலாய்ப்பில் இணைத்துக் கொண்டார்கள் டிவிட்டர்வாசிகள்.
மகேஷ் பாபுவின் 'ஆகடு' படத்திற்கு ராம் கோபால் வர்மாவின் ட்வீட்டுகள், மகேஷ் பாபுவின் ரசிகர்களை அதிகமாகக் கோபப்படுத்தியது. “'ஆகடு' படத்தின் வசனங்களையும், வசன உச்சரிப்புகளையும் சிறப்பு விருதுக்காக ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும். உலக சினிமாவில் தனித்து தெரியக்கூடியவை அவை” என்று டோலிவுட்டின் நம்பர் ஒன் நாயகனை வெளுத்து வாங்கியிருக்கிறார் வர்மா.