இந்து டாக்கீஸ்

சிகை: அவசிய அலங்காரம்

எஸ்.எஸ்.லெனின்

‘நாங்களும் பொங்கலுக்கு வர்றோம்’ எனப் பேட்ட, விஸ்வாசத்துடன் கோதாவில் குதித்திருக்கும் திரைப்படம் சிகை. போதுமான திரையரங்குகள், பெரிய படங்களுடனான போட்டி என நடைமுறைத் தடைகளுடன் படம் முடித்த 2 வருடப் பிரசவ வலியைக் கடைசியில் இணையத்தில் இறக்கி வைத்திருக்கிறார்கள். இணையவழி சேவையாக ‘ஜீ5’, தனது ஒரிஜினல்ஸ் வரிசையில் முதல் தமிழ்த் திரைப்படம் என்ற அறிவிப்புடன் ஜனவரி 9 அன்று தொடங்கி நேரடியாக ரசிகர்களைச் சென்று சேர்ந்திருக்கிறது ‘சிகை‘ திரைப்படம்.

பாலியல் தொழிலாளர்கள், அவர்களை நிர்வகிக்கும் தரகர்கள், இச்சையுடன் அலையும் ஆண்கள் என பாலியல் சந்தையில் அல்லாடும் நபர்களே திரைப்படத்தின் பிரதானப் பாத்திரங்கள். சதையை முன்னிறுத்தி உழலும் இந்த நபர்களின் மத்தியில், மனத்தில் பூத்த நேசத்துடன் தவிக்கும் ஒரு திருநங்கை குறுக்கிடுகிறார். இவர்களை உள்ளடக்கிய திரில்லர் திரைக்கதையில் மூன்றாம் பாலினத்தவரின் வலி மிகுந்த குரலையும் பதியும் முயற்சியே ‘சிகை’.

திரில்லருக்கு தோதான 24 மணி நேரக் கதை. பாலியல் சேவைக்கு இரவு சென்ற பெண் காலை வரை வீடு திரும்பவில்லை; அவளுக்கு அழைப்பு விடுத்த ஆண் வேறு கொலை செய்யப்பட்டு கிடக்கிறான். இந்தச் சூழலில் மாயமான பெண்ணைஅவளை நிர்வகிக்கும் புரோக்கர்கள் இருவரும் திகிலுடன் தேடுவதாகக் கதை தொடங்குகிறது.

புரோக்கர்கள் ராஜ்பரத், ராஜேஷ்சர்மா ஆகியோருடன் அப்பெண்ணை ஏற்றிச் சென்ற வாடகை கார் ஓட்டுநர் மயில்சாமியும் சேர்ந்துகொள்கிறார். இந்தத் தேடலின் ஊடாகச் சதைச் சந்தையில் புழங்கும் ஆண் பெண் இடையே முகிழும் நேசம், பாலியல் உலகின் விளிம்பு அவலங்கள், துரோகமிழைக்கும் கணவனை வித்தியாசமாகப் பழிவாங்கும் மனைவி எனப் பல இழைகள் வந்து பிணைகின்றன. படத்தின் இடைவேளை தருணத்தில்தான் நாயகன் கதிர் பிரவேசிக்கிறார். அதன் பின்னர் படம் தனி வேகமெடுக்கிறது.

திருநங்கை வேடமேற்று நடித்ததுடன், திரைப்படத்தைத் தயாரித்த வகையிலும் கதிரின் முனைப்புக்கு ஒரு கூடை மலர்கொத்துத் தரலாம். ‘மதயானைக் கூட்டம்’, ‘பரியேறும் பெருமாள்’ வரிசையில் கதிரின் திரைப்பயணத்தில் ‘சிகை’க்கு முக்கிய இடமுண்டு. அதிலும் ஆணாகப் பிறந்து பெண்ணாக மறுபிறவியெடுக்கும் திருநங்கையின் நடை, நளினம், ஆற்றாமை, தவிப்பு உள்ளிட்டவற்றை வெளிப்படுத்துவது அருமை. “நான் சொல்றது உனக்கேன் புரியலை. எனக்கு உடம்புதான் இப்படி; ஆனா, நானும் பொண்ணுதான். உனக்கு வர்ற எல்லா ஃபிலிங்க்ஸும் எனக்கும் வரும். பொண்ணுங்குறதால உனக்கு உடம்பு கிடைச்சிருச்சு, எனக்குக் கிடைக்கல. அதுக்கு ஏன் இப்படி ஒதுக்குறீங்க” என்பதான குமுறல்கள் பொதுச் சமூகத்தின் மனசாட்சியை உலுக்க வேண்டியவை. முகத்தில் அறையும் சம்பவங்களுடன் நகரும் கதைக்குச் சமரசம் செய்யாத ‘நறுக்’ வசனங்கள் படைத்தவர்களைப் பாராட்டலாம். அவற்றை உச்சரிப்பதிலும் அதையொட்டிய நடிப்பிலும் கதிர் பிரகாசிக்கிறார். கண்ணாடியில் தன்னை ரசிப்பதாகட்டும், தனது நேசம் குறித்து கிஞ்சித்தும் அபிப்ராயம் இல்லாதவனிடம் அதை விளங்க வைக்க முயன்று தோற்பதாகட்டும்.. கதிர் கூடு பாய்ந்திருக்கிறார்.

பாலியல் தொழிலில் ஈடுபடும் இரு பெண்களை அவர்களின் விருப்ப உலகம் சார்ந்து வேறுபடுத்தியிருப்பது அருமை. அதிலும் மிதக்கும் கண்களுடன் வரும் மீராநாயர் போதையேற்றிக்கொண்டு மயக்குவதும் மூன்றாம் பாலினத்தவர்மீது மூன்றாந்தர எள்ளல்களை உச்சரிப்பதுமாகக் கவனம் ஈர்க்கிறார். மற்றொரு பெண்ணான ரித்விகா வாடிக்கையாளனிடம் காயம் பெற்று வருவதும் தான் நேசிப்பவன் அதைக் கவனித்தானா என மருகுவதுமாக அமைதியாக ஸ்கோர் செய்கிறார். மலையாளத் தமிழுடன் இரண்டாவது புரோக்கராக வரும் ராஜேஷ் சர்மாவை முன்னிறுத்தி பாலியல் சந்தையின் கோர முகத்தைக் காட்டுகிறார்கள். காமெடி எடுபடாவிட்டாலும் பெண்கள் மீதான வழிசலில் மயில்சாமியும் பால்ய நண்பனின் திடீர் மாற்றங்களை வெற்றுப் புலம்பலாக உதாசீனப்படுத்தும் மால் முருகனும் தேறுகிறார்கள்.

சக உயிரான பெண்ணையே மதிக்கத் தெரியாதது உட்பட ஆணாதிக்க உலகில் அகற்றப்பட வேண்டிய ஆணிகள் நிறைய இருக்கின்றன. அதிலும் மூன்றாம் பாலினத்தவரின் உரிமைகள் குறித்த போதாமை சூழ் சமூகத்தில் அவர்களின் சொல்லப்படாத நேசத்தையும் பதிவு செய்ததற்காக இயக்குநர் ஜெகதீசன் சுபு உள்ளிட்ட படக்குழுவுக்கு வாழ்த்துகள்! ஒரு திரில்லராகப் படத்தின் சொதப்பல்களை அடையாளம் காணலாம். ஆனால், சதையை மீறி இதயம் பார்க்கும் மனிதத்தைக் கோரியதற்கும் பேசாப்பொருளைப் பேசியமைக்கும் வரவேற்பு சொல்லியாக வேண்டும்.

தொடர்புக்கு: leninsuman4k@gmail.com

SCROLL FOR NEXT