‘பச்சை என்கிற காத்து’, ‘மெர்லின்’ ஆகிய படங்களின் மூலம் கவனிக்கவைத்தவர் பத்திரிகையாளராக இருந்து இயக்குநரான கீரா. தங்கர்பச்சானின் உதவியாளரான இவர், தற்போது இயக்கிவரும் மூன்றாவது படம் ‘பற’. அவருடன் உரையாடியதிலிருந்து…
குறுகிய காலத்தில் மூன்று படங்களை இயக்கிவிட்டு நான்காவது படத்துக்கு வந்துவிட்டீர்கள். எப்படிச் சாத்தியமானது?
திட்டமிடல்தான் காரணம். தேவைக்கு அதிகமாகத் தயாரிப்பாளருக்குச் செலவை இழுத்துவிடுவது கிடையாது. காட்சிக்கு என்ன தேவையோ அதற்கு மட்டுமே செலவழிப்பேன். 50 நாள் படப்பிடிப்பு என்றால் 40 நாட்களில் முடித்துவிடுவேன். ‘பச்சை என்கிற காத்து’ படத்துக்கு விமர்சனரீதியாகக் கிடைத்த பாராட்டுகள்தான் எனக்கு ‘மெர்லின்’ படம் கிடைக்க உதவியது.
‘அதை 40 நாட்களில் எடுத்து முடித்ததால் தற்போது ‘பற’ படத்துக்கான வாய்ப்பு அமைந்தது. திரையுலகில் எல்லாப் பக்கமிருந்தும் கண்காணிக்கப்படும் ஒரே ஜீவன் இயக்குநர்தான். அவர் தயாரிப்பாளருக்கும் படைப்புக்கும் நேர்மையாக இருந்தால் வாய்ப்புகள் அவரது மடியில் விழும்.
‘பற’ என்ற இரண்டு எழுத்து தலைப்பு என்ன சொல்ல வருகிறது?
எல்லோருக்குமே ஒவ்வொரு விதத்தில் விடுதலை தேவைப் படுகிறது ‘பற’ என்றால் விடுதலை பெறுவதற்காக நாம் நடத்தும் போராட்டத்தின் எளிமையான குறியீடு என்று கூறலாம். சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் கட்டுப்பாடுகள், புறக்கணிப்புகளிலிருந்து விடுதலை பெறக் கதாபாத்திரங்கள் நடத்தும் உணர்வுபூர்வமான போராட்டத்தைக் குறிக்கவே இப்படியொரு தலைப்பு வைத்தோம். காதலின் பல்வேறு பரிமாணங்களைப் பேசும் தலைப்பு என்றும் இதைக் கூறலாம்.
என்ன கதை, எங்கே நடக்கிறது?
சென்னையில்தான் நடக்கிறது. சென்னையில் உள்ள ஒரு பதிவு அலுவலகம்தான் கதையின் மையம். வெவ்வேறு ஊர்களிலிருந்து புறப்பட்டுவருகிற கதாபாத்திரங்களை இணைக்கும் புள்ளியாக அம்பேத்கர் என்ற கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி வருகிறார். போலி என்கவுண்டர்களுக்கு எதிரான வழக்குகளைத் துணிந்து நடத்திவரும் ஒரு வழக்கறிஞர். ஒரு இரவில் தொடங்கி அடுத்துவரும் பகலில் முடிந்துவிடும் 12 மணிநேரக் கதை. இரவு விடுதியில் கிளப் ஒன்றில் பபூன் வேடம்போடும் ஒருவர்.
அவருக்கு ஏற்படும் திடீர் பிரச்சினையால் திருடும் நிலைக்குச் செல்கிறார். அந்தக் கதாபாத்திரத்தில் முனீஷ் காந்த் நடித்திருக்கிறார். பிளாட் பாரத்தில் வசிக்கும் எளிய மனிதர்களுக்கு மத்தியில் ஒரு காதல். திருமணம் செய்துகொண்டு, வாடகை வீடுபிடித்து குடியேறி சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்பதைக் கனவாகக் கொண்டவர்கள். பதிவு அலுவலகம் நோக்கிச் சென்ற அவர்களின் நிலை என்னவாகிறது என்பது மற்றொரு இழை.
பிளாட்பார வாசிகளாக ‘புதுப்பேட்டை’ புகழ் நிதிஷ் வீராவுடன் கேரளத்திலிருந்து வெண்பா என்ற புதுமுகமும் அறிமுகமாகிறார். இவர்களோடு சாதி இறுக்கத்தில் சிக்கி மூச்சுத்திணறும் இரு கிராமத்துக் காதலர்கள் அதே இரவில் சென்னைக்குப் பயணித்து சமுத்திரக்கனியிடம் அடைக்கலமாகிறார்கள். கிராமத்துக் காதலர்களாக சாந்தினியும் சாஜீ மோனும் நடித்திருக்கிறார்கள்.
வெவ்வேறு பின்னணியிலிருந்து வந்தாலும் எல்லாக் கதாபாத்திரங்களுமே அன்புக்காக மட்டுமே பயணிக்கின்றன திரைக்கதையில் பின்னப்பட்டிருக்கும் கதாபாத்திரங்களும் காட்சிகளும் நாம் அன்றாடம் செய்தித்தாள்களில் பார்த்துப் படித்து கடந்துபோனவைதான். அந்தச் செய்திகளின் பின்னால் நாம் கவனிக்காமல் விட்டுவிட்ட எளிய மனிதர்களின் அன்பு, எளிய மனிதர்களின் கோபம், சமூகம் அவர்கள் மீது கட்டவிழ்த்துவிடுகிற வன்மம் ஆகியவை அதிர்ச்சிதரும் உண்மையுடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
சுருக்கமாகச் சொல்வதென்றால் நாம் கவனிக்கத் தவறியவர்களின் காதலை உணர்வுபூர்வமாகப் படமாக்கியிருக்கிறோம்.
சமுத்திரக்கனியைக் கிட்டத்தட்ட எல்லாப் படங்களிலும் போராளியாகவே காட்டுகிறார்கள்?
இந்தப் படத்தில் சமுத்திரக்கனி தனிமனிதப் போராளியாக நடிக்கவில்லை. உதவி என்று வருகிற எளியவர்களுக்கு உதவிசெய்யப்போய்த் துன்பங்களை அனுபவிக்கும் ஒருவராக வருகிறார். துன்பம் வந்தாலும் உதவிசெய்வதை சிலரால் நிறுத்தவே முடியாது என்பதற்கு எடுத்துக்காட்டான கதாபாத்திரம் அவருடையது.
அடுத்து இயக்கத் தொடங்கியிருக்கும் ‘குறவன்’ படம் பற்றி..
படத்தின் முதல் பார்வையை விஜய்சேதுபதி வெளியிட்டு படப்பிடிப்பைத் தொடங்கிவைத்தார். நரிக்குறவ மக்களின் நாடோடி வாழ்க்கையும் அதில் ஏற்பட்டிருக்கும் தற்கால மாற்றங்களும்தான் கதைக்களம்.