சரியாக 300 ஆண்டுகளுக்கு முன்னர் 1719-ல் வெளியான நாவல் ‘ராபின்சன் குருசோ’. இந்த நாவலின் தாக்கமோ தழுவலோ இல்லாமல் ‘சர்வைவல்’ வகைப் படங்கள் வெளிவந்ததில்லை. அந்த வரிசையில் இணைகிறது ‘ஆர்க்டிக்’.
‘சர்வைவல்’ திரைப்படங்களுக்கு எனத் தனியான திரைமொழி உண்டு. அத்துவானமோ அடர் வனமோ பூட்டிய அறையோ பொங்கும் கடலோ... தனியாக மாட்டிக்கொள்ளும் நபர், அந்தக் கொடும் சூழலிலிருந்து போராடி மீள்வதை அவரது அசலான தவிப்புடன் பார்வையாளருக்குக் கடத்துவார்கள். இந்தப் படங்களில் வசனங்கள் அரிது என்பதால் கேமரா ‘பேசத்’ தொடங்கிவிடும்.
உறைபனியாலான துருவப் பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகிறது ஒரு விமானம். அதில் சிக்கிக்கொள்ளும் தனியொருவனின் போராட்டத்தைச் சொல்கிறது ‘ஆர்க்டிக்’. கொடும் குளிர், மிரட்டும் பனிச் சரிவு, துரத்தும் துருவக் கரடி, உணவில்லாத சூழல் எனத் திரும்பும் திசையெல்லாம் அவன் தடுமாறித் தவிக்கிறான். அவனை மீட்க வந்த ஹெலிகாப்டரும் பனிச்சூறைக்காற்றில் சிக்கி விபத்துக்குள்ளாக, அதில் படுகாயமடையும் பெண்ணை மீட்டுக் காப்பாற்றும் பொறுப்பும் அவனுக்குக் கூடுதல் சுமையாகிறது.
தனியாக மாட்டிக்கொள்பவர் அறியாமையாலும் அவசரத்தாலும் செய்யும் தவறுகள் மற்றும் அவற்றால் நேரிடும் விபரீதங்களே இம்மாதிரி படங்களில் கதையை நகர்த்திச் செல்வதாக அமைத்திருப்பார்கள். ஆனால், ஆர்க்டிக் படத்தில் மிகவும் முதிர்ச்சியாகவும் தெளிவாகவும் முன்னெடுக்கும் மனித முயற்சிகள் ஒவ்வொன்றும் இயற்கையெனும் பிரம்மாண்டத்தின் முன்பு ஒன்றுமில்லாது போவதைச் சொல்கிறார்கள்.
பனியில் சிக்கும் தனியொருவனாக மஸ் மிக்கல்ஸென் (Mads Mikkelsen) வருகிறார். உடன்வரும் பெண்ணாக மரியா தெல்மா தோன்றுகிறார். பிரேசில் நாட்டில் யூடியூபில் அதிக ரசிகர்களைக் கொண்ட ஜோ பென்னா என்ற இளைஞர் எழுதி இயக்கும் முதல் படம் இது. அடிப்படையில் கிடார் இசைக் கலைஞர் என்பதால் ஆர்க்டிக் படத்தின் பின்னணி இசையும் பேசப்படுகிறது. கான் உட்படத் திரையிடப்பட்ட பல்வேறு திரைவிழாக்களிலும் வரவேற்பைப் பெற்ற ஆர்க்டிக், பிப்ரவரி 1 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
ட்ரைலரைக் காண: https://bit.ly/2shQwow