‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வரும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியாகவிருக்கும் படம் ‘தேவ்’. அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கியிருக்கும் ஆக் ஷன் அட்வெஞ்சர் படமான இதன் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், மும்பை, குலுமணாலி, பஞ்சகனி, குல்மார்க், இமாச்சலப் பிரதேசம், உக்ரைன் ஆகிய இடங்களில் நடந்து முடிந்திருக்கிறது.
இந்நிலையில் ‘தேவ்’ படத்தில் இடம்பெறும் ஒற்றைப் பாடலைச் சமீபத்தில் வெளியிட அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியிருக்கும் மற்ற பாடல்களை நாளை வெளியிட இருக்கிறது படக்குழு. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்திசிங் நடித்திருக்கிறார்.
கடாரம் கொண்ட விக்ரம்!
விக்ரம் நடிப்பில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் படங்களில் ஒன்று ‘கடாரம் கொண்டான்’. கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ தயாரிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கிவரும் படம். விக்ரமுக்கு ஜோடியாக அக் ஷரா ஹாசன் நடித்துவரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது. முழுவீச்சில் படப்பிடிப்பு நடந்துவரும் அதேநேரம் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் ‘துருவநட்சத்திரம்’ படத்தின் வேலைகளும் இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதாக இயக்குநர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எட்டு இடங்களில் அஜித்!
நடிகர் அஜித், இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் நான்காவது முறையாக நடித்திருக்கும் படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 10 அன்று வெளியாகவிருக்கும் ‘விஸ்வாசம்’. அஜித் நடித்த படங்கள் எவையும் இதுவரை ரஷ்யாவில் வெளியாகாத நிலையில் ‘விஸ்வாசம்’ முதன் முதலாக ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளில் வெளியாக இருக்கிறது! சமீபத்தில் வெளியான ரஜினியின் ‘2.0’ ரஷ்யாவில் நான்கு சென்டர்களில் வெளியாகியிருந்த நிலையில் ‘விஸ்வாசம்’ எட்டு சென்டர்களில் வெளியாக இருக்கிறது என்ற தகவலைத் தருகிறார்கள் தயாரிப்பாளர் தரப்பினர்.
நந்திதாவின் அவதாரம்!
நயன்தாரா, த்ரிஷா, ஹன்சிகா வரிசையில் தற்போது பெண் மையக் கதைகளில் நடிக்கும் கதாநாயகிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பாலாவின் உதவியாளர் கீதா ராஜ்புத் இயக்கத்தில் நந்திதா ஸ்வேதா ‘நர்மதா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். பகவத் கீதா மூவி மேக்கர்ஸ் தயாரித்துவரும் இதில் அவருக்கு மிகவும் சவாலான கதாபாத்திரம். பள்ளி வாழ்க்கையில் உருவாகும் பருவ ஈர்ப்பால் கர்ப்பமாகி, தனது குழந்தையைப் பெற்றெடுத்து வளர்க்கப் போராடும் இளம்பெண்ணின் கதை. நந்திதா பள்ளி மாணவி, கர்ப்பிணி, ஒரு குழந்தைக்குத் தாய் என மூன்று விதமான தோற்றங்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்து முடித்திருக்கிறார் என்கிறார் இயக்குநர். சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டிருக்கிறார்கள்.