மலைகளின் ராணி என அழைக்கப்படும் ஊட்டியில் இன்று தொடங்குகிறது தெற்காசியக் குறும்பட விழா. வரும் 9-ம் தேதி வரை மூன்று நாட்கள் களை கட்டும் இந்தத் திரைப்பட விழாவை, ‘இந்து தமிழ்’ நாளிதழின் ஊடகப் பங்களிப்புடன் நடத்துகிறது ஊட்டி திரைப்படச் சங்கம்.
முதல்நாள் திரையிடல் மற்றும் சிறப்பு நிகழ்வுகள் பற்றி ஊட்டி திரைப்படச் சங்கத்தின் தலைவர் பால.நந்தகுமாரிடம் கேட்டபோது “தெற்காசிய நாடுகளில் தீவிரமாக இயங்கும் குறும்பட இயக்குநர்களின் திறமையைக் காட்சிப்படுத்தும் மேடையாக இந்த விழாவை வடிவமைத்துக் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். மொத்தம் 90 குறும்படங்கள் இவ்விழாவில் திரையிடப்படுகின்றன. இன்று மட்டும் இரவு 10 மணிவரை 30 குறும்படங்களின் திரையிடல்கள் இருக்கின்றன.
தெற்காசியக் குறும்பட விழாவுக்கான அதிகாரபூர்வ அறிவிப்புக்குப் பின் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், பர்மா, ஈரான் போன்ற நாடுகளிலிருந்து சுமார் 350 குறும்படங்கள் எங்களை வந்து சேர்ந்தன. அவற்றிலிருந்து 90 படங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன.
பிரபல மலையாளத் திரைப்பட இயக்குநர் ஜான் மேத்யூ தலைமையில், திரைக்கதை ஆசிரியர் அஜயன் பாலா, திரைப்பட விமர்சகர் நந்து சுந்தரம், காட்சிக் கலைஞர் சீனிவாஸ் மங்கிப்புடி ஆகியோருடன் எழுத்தாளர்கள் பவா செல்லதுரை, பாஸ்கர் சக்தி ஆகியோர் கொண்ட குழு தேர்வு செய்துள்ளது. ஒவ்வொரு குறும்படமும் கண்ணையும் கருத்தையும் கவரும் விதமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டைப் போலவே ஊட்டியின் அசெம்பிளி ரூம்ஸ் திரையரங்கில் இந்தத் திரைவிழா நடக்கிறது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, திரைப்பட இயக்குநர்கள் பா.ரஞ்சித், ராம் ஆகியோர் விழாவைத் தொடங்கிவைத்தனர்.
இந்தக் குறும்பட விழாவில் சிறப்பிடம் பெறும் முதல் 5 குறும்படங்களுக்கு 9-ம் தேதி நடைபெறவுள்ள நிறைவு நாள் நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தங்க யானை விருதைப் பரிசளிக்கிறார். இறுதி நாள் நிகழ்ச்சியில் பாரதிராஜா நடித்து, இயக்கியுள்ள ‘ஓம்’ திரைப்படம் இந்தியன் பிரீமியராகத் திரையிடப்படுகிறது.
https://www.facebook.com/ootyfilmfestival/ முகநூல் பக்கத்தில் திரைவிழா குறித்த அன்றாடத் தகவல்களை அறிந்துகொள்ளலாம்.ஊட்டி திரைப்பட விழா