பூமிப்பந்தில் பூக்கள் மலராத தேசமில்லை. ஆனால் எல்லா தேசங்களிலும் பூக்களைப் போல மக்கள் சிரிக்க முடிவதில்லை. பாலஸ்தீனமும் இதில் ஒன்று. போரை சந்தித்த தேசத்தில் கலையும் இலக்கியமும் வெடித்துக் கிளம்பும் என்ற கோட்பாட்டின் அடையாளமாக இருப்பவை பாலஸ்தீன திரைப்படங்கள். 60 ஆண்டுகளைக் கடந்து தொடரும் இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சனையின் அரசியல் அழுத்தம், பாலஸ்தீன மக்களின் வாழ்க்கையை எத்தனை நெருக்கடி மிக்கதாக மாற்றியிருக்கிறது என்பதை அங்கிருந்து செழித்திருக்கும் கலாபூர்வமிக்க திரைப்படங்கள், உலக சினிமா ரசிகர்களுக்கு சொல்லிக்கொண்டே இருக்கின்றன.
இன்று மாலை 4.30 மணிக்கு உட்லேண்ட்ஸ் திரையரங்கில் திரையிடப்பட இருக்கும் ’ஓமர்’ பாலஸ்தீனத்தின் தலைசிறந்த இயக்கு நர்களில் ஒருவரான ஹனி அபு ஆசாத் இயக்கி யிருக்கும் படம். இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்கிய ’பேரடைஸ் நவ்’ அந்த ஆண்டின் சிறந்த வெளிநாட்டு மொழிப்படத்துக்கான போட்டியில் முன்னணியில் இருந்தது. அதில் இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்தச் செல்லும் இரண்டு இளைஞர்கள் மனசாட்சிக்கும், விடு தலைப் போராட்ட உணர்ச்சிக்கும் இடையில் சிக்கிக்கொள்ளும் ஊடாட்டத்தை ஆசாத் சித்தரித்த விதம் கொண்டாடப்பட்டது.
தற்போது ‘ஓமரில்’ நான்கு இளம் கதா பாத்திரங்கள் வழியாக பாலஸ்தீனத்தின் இன்றைய அரசியல் அழுத்தத்தை மற்ற வர்களுக்கு புரிய வைத்துள்ளார்.
ஓமர், தரீக், அம்ஜத், நதியா ஆகிய நான்கு கதாபாத்திரங்கள். இவர்களில் முதல் மூவர் உயிருக்கு உயிரான நண்பர்கள். அம்ஜத்தின் சகோதரி நதியா. இஸ்ரேல் எல்லைப்புறத்திலிருந்து தினமொரு தாக்கு தலுக்கு ஆளாகும் கிழக்குக் கரைப் பகுதியில் வாழும் இந்த இளம் கதாபாத்திரங்களில் ஓமரும்- நதியாவும் காதலிக்கிறார்கள். ஆனால் ஓமர் சிக்கக்கூடாத இடத்தில் சிக்கிக் கொள்கிறான். ஒருபக்கம் நண்பர்கள், இன்னொரு பக்கம் காதல். மூன்றாவதாக, ஓமர் சொந்ததேசத்துக்கே துரோகியாகும் சூழ்நிலையைத் திணிக்கும் எதிரிகள், இந்தச் சூழ்நிலையில் ஓமர் என்ன செய்தான் என்பதுதான் படம்.
கடும் நெருக்கடிக்கு மத்தியிலும் காதலும், நட்பும், தியாகமும், ஏன் துரோகமும் கூட உயிர்ப்புடன் இருக்கும் என்பதை வாழ்க்கைக்கு மிக அருகாமையில் வந்து சொல்லிச்செல்லும் கலைப்படைப்பாக விரியும் இந்தப் படம் காட்சிமொழியிலும், பாலஸ்தீனத்தின் துப்பாக்கி வெடிப்புக்கு நடுவே உங்களை பாலஸ்தீனராக உணரவைக்கும். இஸ்ரேல் -
பாலஸ்தீன பிரச்சினையின் பின்புலம் அறி யாதவர்கள், ஒருமுறை விக்கிபீடியாவில் கைகுலுக்கிச் செல்லுங்கள். இன்னும் இந்தப் படத்தை நெருக்கமாக உணர்வீர்கள்.
அடுத்த ஆண்டு(2014) ஆஸ்கர் விருதுக்காக இப்போதே தேர்வாகி யிருக்கும் ‘ஓமர்’ இதுவரை 4 சர்வதேச விருது களை அள்ளியிருக்கிறது. எனவே இந்தப் படத்தை தவறவிடாதீர்கள். நேற்று ஈரானின் ‘பர்வெஸ்’ படத்தை தவறவிட்டவர்கள், இன்று அபிராமி திரையரங்கில் இரவு ஏழுமணிக்கு பார்க்கலாம். ஏற்கனவே ‘பர்வெஸ்’ பார்த்த வர்கள் இந்தப் படத்தின் இயக்குநர் மஜித் பர்ஸிகருடன் பிற்பகல் 2 மணிக்கு உட்லேண்ட்ஸ் திரையரங்கில் உரையாடலாம்.
இந்தப் படங்களோடு இத்தாலியிலிருந்து வந்திருக்கும் ‘தி கிரேட் பியூட்டி’ படத்தையும் தவறவிடாதீர்கள். இந்தப்படம் உட்லேண்ட்ஸ் திரையரங்கில் இன்று இரவு 7 மணிக்கு. இந்த இரண்டு படங்களோடு, 2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த வெளிநாட்டு மொழிப்படப் பிரிவில் ஆஸ்கர் வாங்கியிருக்கும் அஸ்ஹர பர்ஹதியின் ‘தி பாஸ்ட்’ படம் உட்லேண்ட்ஸில் பிற்பகல் 2 மணிக்கு. இது கடந்த ஆண்டு உலகப்பட விழாக்களை கலக்கிய பர்ஹதியில் ‘தி செப்பரேஷன்’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் உணர்ச்சிக்காவியம்.