பொள்ளாச்சிக்கு அருகே வசதியான குடும்பத்துப் பிள்ளைகள் வானவராயன் (கிருஷ்ணா), வல்லவராயன் (ம.க.ப. ஆனந்த்). மூத்தவன் வானவராயனுக்குப் பெண் பார்க்கிறார்கள். எதுவும் கைகூடாததால் சகோதரர்களே பெண் பார்க்கக் கிளம்புகிறார்கள். இடையிடையே ஊரில் அவ்வப்போது சண்டித்தனமும் செய்கிறார்கள்.
அஞ்சலியைப் (மோனல் கஜ்ஜார்) பார்க்கும் வானவராயன் அவள் மீது லவ்ஸ் ஆகிறான். அஞ்சலியும் அங்ஙனமே! வீட்டிலிருந்து பிரச்சினை வரவே, ஓடிப் போக முயற்சிக்கிறார்கள். அது தோல்வியில் முடிய, வானவராயனை அஞ்சலியின் உறவினர்கள் துவைத்து எடுக்கிறார்கள். பதிலுக்கு அஞ்சலியின் அப்பாவை வல்லவராயன் அடித்துவிடுகிறான். அதன் பிறகு எல்லாமே ஊகித்தபடி!
சகோதரர்களின் ரகளை, காதல், காதலர்களைப் பிரித்தல், பிரிந்த காதலர்களைச் சேர்த்தல் என்று எந்த வியப்புக்கும் இடம்தராமல் நகர்கிறது. அண்ணனின் காதலைக் கைகூடவைக்கத் தம்பி கையில் எடுக்கும் டெக்னிக் எல்லாம் அமெச்சூர்தனம்.
அண்ணன் தம்பி இருவரும் அடித்துக்கொள்வதும் சேர்வதுமாகவே காட்சிகள் நகர, ரசிகர்கள் ‘டேஜாவூ’ பேஜாரில் நெளிகிறார்கள். முதல் பாதியில் அடுத்தடுத்து வரும் பாடல்களும் சலிப்பு ரகம்.
ஆனாலும், கிருஷ்ணாவும் ம.க.ப. ஆனந்தும் பொருத்தமான அண்ணன் - தம்பி தேர்வு. மோனல் கஜ்ஜார் அழகாக இருக்கிறார். அவரை நடிக்க விட்டால்தானே..!
சௌகார் ஜானகி, தம்பி ராமையா, கோவை சரளா, 10 நிமிட சிறப்புத் தோற்றத்தில் சந்தானம் என்று படம் நெடுகிலும் காமெடிப் பட்டாளம். “அப்பா நான் இருக்கும் போது எத்தனை தடவ வேணும்னாலும் விழு, ஆன நான் செத்ததுக்கு பிறகு விழுந்திடாதே”, “உங்க பையனுக்கு இன்னும் உங்க மில் பொறுப்பையே கொடுக்கல, நான் எப்படி பொண்ணு கொடுப்பேன்?” என ஆங்காங்கே வசனங்கள் ‘அடடே’! ஆனால் முழுப் படத்தையும் ரசிக்க இது போதாதே.
இசை யுவன் சங்கர் ராஜாவா?! ‘தக்காளிக்கு தாவணிய’ பாடல் மட்டும் காதில் கொஞ்சம் ரீங்காரம். இந்தப் பாடல் படமாக்கப்பட்ட விதமும் ஜம்!
பசுமை போர்த்திக் கிடக்கும் பின்னணியை குளுகுளுன்னு அப்படியே பதிவு செய்திருக்கிறது பழனிகுமார் கேமரா .
சுந்தர் சி, மணிவண்ணனுக்கு பிடித்தமான பொள்ளாச்சியில் நடக்கும் கதை வானவராயன் வல்லவராயன். இடத் தேர்வோடு கதைத் தேர்வுக்குமா பின்னோக்கிப் பார்த்திருக்க வேண்டும்?