மீண்டும் சிவாஜி - ஸ்ரீதர் இடையே சமரசம் ஏற்பட்டது. நின்றுபோயிருந்த ‘ஹீரோ 72’ ‘வைர நெஞ்சம்’ திரைப்படமாக வெளிவந்தது. அதன் பிறகு ரஜினி - கமலை வைத்து 'இளமை ஊஞ்சலாடுகிறது’என்ற மெகா வெற்றிப் படத்தை எடுத்துத் தன் பழைய பெயரை மீட்டுக்கொண்டார் ஸ்ரீதர். பின்னர் ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ என்ற படத்தை வெளியிட்டார் ஸ்ரீதர்.
ஸ்ரீதருடன் கோபு நட்பைத் தொடர்ந்தாலும், தனது படப் பணிகளில் மும்முரமாக இருந்தார். ‘தைரியலட்சுமி’ என்ற படத்தை, இருமொழிகளில்எழுதி, இயக்கினார். தமிழில் லட்சுமி - ஜெய்சங்கர், கன்னடத்தில் அனந்த்நாக் - லட்சுமி நடித்த படங்கள். வயலின் வித்துவான் சவுடையா குடும்பத்தைச் சேர்ந்த அம்பரீஷும் இந்தப் படத்தில் நடித்திருந்தார். தமிழில் சுமாராக ஓடினாலும், கன்னடத்தில் நூறு நாட்களைக் கடந்து ஓடியது.
‘தைரிய லட்சுமி’யைத் தொடர்ந்து மனோரமாவை வைத்து முழுநீள நகைச்சுவைப் படமாக ‘அலங்காரி’, முத்துராமன் - பிரமிளா ஜோடியை வைத்து ‘பெண்ணொன்று கண்டேன்’படங்களை கோபு எடுத்துக்கொண்டு இருந்த நேரத்தில் பிரபல வார இதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்திருந்த ஸ்ரீதர், ''மீண்டும் கோபு என்னுடன் இணைந்தால் மகிழ்வேன் '' என்று பேட்டி கொடுத்திருந்தார்.
அதன்படியே ஐந்து வருடப் பிரிவுக்கு பின்னர், ஸ்ரீதர் கோபுவைத் தேடி அவரது திருவல்லிக்கேணி வீட்டுக்கு வந்தார். “ டேய் கோபு.. புதுசா ஒரு படம் செய்யலாம்னு இருக்கேன். நமக்குக் கதை கொடுக்குற காந்தி சிலைக்குப் பின்னாடிப போய் விவாதிக்கலாம் வா” என்று அழைத்துக்கொண்டுபோனார்.
கூட்டணியின் ராசி
இந்த இணை கடற்கரையில் நுழைந்து காந்தி சிலையின் பின் அமர்ந்து கதை பேசத் தொடங்கிவிட்டால் அதில் இளமை அலை அடிக்கத் தொடங்கிவிடும். அப்படித்தான் மீண்டும் இணைந்த நண்பர்களின் கதை விவாதத்தில் ‘நினைவெல்லாம் நித்யா’ பிறந்தாள்.
முத்துராமன் மகன் கார்த்திக்கும், ஜெமினி மகள் ஜீஜியும் ஜோடியாக நடித்த அந்தப் படம், ஸ்ரீதரும் - கோபுவும் பிரிந்து சென்று மீண்டும் இணைந்தவுடன் பணியாற்றிய முதல் படம். பாடல் ஒளிப்பதிவின் போது இளையராஜா ஒரு பாட்டைப் பாடியவுடன் , கோபுவுக்கு மெய்சிலிர்த்துப் போனது.
அருமையான மெட்டமைப்பு, அற்புதமான சங்கதிகள். ‘பனி விழும் மலர் வனம்’ என்ற பாட்டைக் கேட்டவுடன் “ ஸ்ரீ.. இது அடுத்த தலைமுறையின் இசை. இளவட்டங்களை மயக்கிப்போடும் பாரு” என்றார் கோபு. பட ரிலீஸ் நாளில் ரசிகர்களின் கருத்துகளை அறிய, ஆல் கிளாஸ் ரசிகர்கள் வந்துசெல்லும் குரோம்பேட்டை திரையரங்கின் பார்க்கிங் ஸ்டாண்டின் ஒரு அம்பாசிடர் காரில் ஸ்ரீதரும், கோபுவும் செவிகளைத் தீட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தனர்.
சைக்கிள் இளவட்டங்கள் ‘பனிவிழும் மலர்வனம்’ பாடலைப் பாடிக்கொண்டே வர, ஒரு ஸ்கூட்டர் பெரிசு “முத்துராமனும் ஜெமினியும் டூயட் பாடுற மாதிரி இருக்கு. இந்தப் படத்துக்கு விசில், கைதட்டல் வேற” என்று முணுமுணுத்தபடி சென்றதைப் பார்த்து கோபு சிரிக்க, ஸ்ரீதர் முகத்தில் அதிர்ச்சி காட்டினார்.
கோபுவோ “இது யூத் பிலிம். நீ ஷாக் ஆகத் தேவையில்லை”என்றார். சென்னை தேவி திரையரங்கு உட்பட, இளம் ரசிகர்களால் படம் நூறு நாட்களைத் தாண்டி ஓடியதும் ஸ்ரீதருக்குப் பரம குஷி. “ கோபு ! நீ எங்கேயும் போக வேண்டாம் ! என்னோடயே இருந்துடேன். நம்ம கூட்டணியோட ராசியே தனிதாண்டா!” என்றார் ஸ்ரீதர்.
அடையாளத்தைத் தக்கவைத்த ஆலய தீபம்
இந்தப் படத்துக்குப் பின்னர், ‘ ஸ்ரீதர் – கோபு கூட்டணி பாதை மாறிவிட்டது’ என்று சில அன்பான விமர்சகர்கள் கவலைப்பட்டுக் கருத்தொன்றைப் பகிர்ந்தார்கள். அதை உடைத்தெறிய முடிவு செய்தது இந்த நட்புக் கூட்டணி. ‘குடும்பப் பிரச்சினைகளைத் தீர்க்க, மனைவி விளம்பரத்தில் நடிக்கிறாள். அதனால் கணவன் அவளை ஒதுக்கி வைக்கிறான். அவள் பெரிய நடிகையாகி, தனது மகளின் பாசத்துக்காக ஏங்குகிறாள்’- இப்படியொரு ஆழமும் அழுத்தமும் மிக்க கதையைக் கையிலெடுத்தனர்.
சுஜாதா, ராஜேஷ், இளவரசி நடித்த அந்தப் படம் நூறு நாட்களைக் கடந்து ஓடிய ‘ஆலய தீபம்’. படப்பிடிப்பு நடத்தும்போதே ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ செட்டில் உணர்ந்த அதே ஃபீல் அனைவருக்கும். சுஜாதா நடிப்பில் பின்னியிருந்தார்.
படத்தின் நூறாவது நாள் விழாவில் ‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.வி கோபுவுக்கு நூறாவது நாள் ஷீல்டு கொடுத்தார். அப்போது கோபுவின் காதோரம் நெருங்கி “ கோபண்ணே.. நீங்களும் ஸ்ரீதரும் இணைஞ்சதுக்கு இது நான் கொடுக்குற ஷீல்டு” என்று உணர்ச்சியுடன் கூற, கோபு ஷீல்டை வாங்கிக்கொண்டு அவரது கரங்களை இறுகப் பற்றிக்கொண்டார்.
‘ஆலய தீபம்’ வெற்றி கொடுத்த மகிழ்ச்சியில் அதன் தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி அடுத்த தயாரித்த அடுத்த படம் ‘துடிக்கும் கரங்கள்’. கே. ஆர் ஜி ஒரு சிறந்த தயாரிப்பாளர். தனது படங்களில் பணிபுரிபவர்களுக்குத் தேவையான வசதிகளை இல்லை என்று சொல்லாமல் செய்து செய்துகொடுப்பதில் பெரிய மனத்துக்காரர். அவரைப் பொறுத்தவரை இயக்குநரும் ஒன்றுதான், ஆபீஸ் பாயும் ஒன்றுதான்.
எல்லோருக்கும் ஒரே மரியாதை, ஒரே விருந்தோம்பல். ரஜினிகாந்த், ராதா, ஜெய்சங்கர் நடித்த ‘துடிக்கும் கரங்கள்’படப்பிடிப்பின்போது ரஜினிக்கும் கோபுவுக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. தனது பிறந்த நாளை முன்னிட்டுப் படப்பிடிப்புத் தளத்தில் ரஜினி கேக் வெட்ட, அதை அவர் கோபுவுக்கு ஊட்டி தனது அன்பைக் காட்டினார். ‘துடிக்கும் கரங்கள்’ வசூலை வாரிக் கொடுக்கவில்லை என்றாலும் நன்றாக ஓடிய படம்.
இரண்டு படங்களுக்குப் பிறகும் ஸ்ரீதர் – கோபு கூட்டணியை கே.ஆர்.ஜி விடவில்லை. ‘உன்னைத் தேடி வருவேன்’என்கிற சஸ்பென்ஸ் திரில்லரை அவர் தயாரிக்க, ஸ்ரீதர் இயக்கினார். சுரேஷ், நளினி, நடித்த இப்படத்தில் தேங்காய் சீனிவாசன் -மனோரமாவை வைத்து நகைச்சுவைப் பகுதியை எழுதினர் கோபு. மூன்றாவது படமும் கே.ஆர்.ஜிக்கு ‘ஹாட்ரிக் புராஃபிட்’ ஆக அமைந்துபோனது.
கமல் கொடுத்த விருது!
ரஜினியை வைத்துப் படம் பண்ணிய ஸ்ரீதருக்கு, கமல்ஹாசனை வைத்து ஒரு படம் செய்ய வேண்டும் எனத் தோன்றியது. அவருக்காக ஸ்ரீதர் எழுதிய கதை ‘நானும் ஒரு தொழிலாளி’. ‘மாலை சூட வா’என்ற படத்தில் கோபுவின் வசனங்களைப் பேசி நடித்திருக்கிறார் கமல். கோபுவின் நகைச்சுவையைப் பெரிதும் விரும்பும் அவர்,“ எனது நகைச்சுவை குரு கோபு”என்று கமல் ஹாஸ்யம் நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.
தனது படங்களின் ப்ரீவியூ காட்சிகளுக்கு கோபுவை வரவழைத்து அவரது கருத்தைக் கேட்பார். நானும் ஒரு தொழிலாளி சுமாராக ஓடியது. சுமாராக ஓடினாலும் ஸ்ரீதர் – கோபு இணையருக்கு மவுசு குறைந்தபாடில்லை.
சென்னை அண்ணாசாலை தேவி திரையரங்க உரிமையாளர் தேவி பிலிம்ஸ் கௌரிஷங்கர் இருவரையும் தேடி சித்ராலாயாஅலுவலகத்துக்கு வந்தார். “ எனக்குக் ‘ காதலிக்க நேரமில்லை மாதிரி காதலும் நகைச்சுவையும் வழியும் படம் பண்ணிக்கொடுங்க”என்றார்.
ஸ்ரீதர், கோபுவைப் பார்த்து “ டேய் கோபு… கிளம்பு காந்தி பீச் போனாத்தான் நமக்குக் காதல் கதை கிடைக்கும்” என்றார். மெரினா பீச் இந்தமுறை அவர்களுக்குக் கொடுத்த காதல் கதையில் இளமை இன்னும் அதிகமாகத் துள்ளியது..
(சிரிப்பு தொடரும்)
தொடர்புக்கு: tanthehindu@gmail.com | படங்கள் உதவி: ஞானம்