ஊட்டியில் மூன்றாம் ஆண்டாக நடந்து முடிந்திருக்கிறது தேற்காசியக் குறும்படவிழா. ஊட்டி ஃபிலிம் சொசைட்டி ஒருங்கிணைத்த இந்த விழா, மாவட்ட நிர்வாகமே நடத்திவரும் உதகையின் ஒரே திரையரங்கான அசெம்பிளி ரூம்ஸில் நடந்தது.
அத்திரையரங்கில் அமைக்கப்பட்டிருக்கும் சிறிய சினிமா அருங்காட்சியகம் வழக்கம்போல பார்வையாளர்களைக் கவர்ந்தாலும் இம்முறை எம்ஜிஆர் - சிவாஜி, - ரஜினி- கமல் என்றதலைப்பில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஒளிப்படக் கலைஞர்ஆர்.என்.நாகராஜா ராவின் ஒளிப்படக் கண்காட்சி கூடுதல் ஈர்ப்பை ஏற்படுத்தியது.
‘ஷட்டர்’ என்ற மலையாளப் படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குநர் ஜாய் மேத்யூ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பட விழாவைத் தொடங்கி வைத்த அதேநேரம், ஐந்து பிரிவுகளில் விருதுக்குரிய குறும்படங்களைத் தேர்வுசெய்யும் நீதிபதியாகவும் பொறுப்பேற்றார்.
மூன்று நாட்கள் நடந்த விழாவில் ‘மகளிர் ஸ்பெஷல்’ என்ற பிரிவின் கீழ் பெண்களின் பிரச்சினைகளைப் பேசிய 22 படங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. இத்தாலி, ஈரான்,சவுதி அரேபியா, வங்காளம், மும்பை, கொல்கத்தா, சென்னை,டெல்லியிலிருந்து திரையிடலுக்குத் தேர்வான 90குறும்படங்களிலிருந்து சிறந்த குறுப்படத்துக்கான விருதை இத்தாலியின் ‘பாடி சிட்டி’ பெற்றது.
சிறந்த நடிகருக்கான விருதை ‘காவல்தெய்வம்’ படத்துக்காக சரண்யா ரவிவும் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை ‘பில்டர் காபி ஆர் ரெட் வயன்’ படத்துக்காக ராஜா மகேந்திராவும் வென்றனர்.சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த திரைக்கதைக்கான விருதுகளை‘உமன் நெட்வார்க்’ படத்துக்காக அருண் கணேசன் பெற்றுக்கொண்டார். ஊட்டி திரைப்படவிழாவின் இறுதி நாளான டிசம்பர் 9 அன்று மாலை நடந்த இறுதி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று இயக்குநர் பாரதிராஜா விருதுகளைவழங்கினார்.
பாரதிராஜா நடித்து, இயக்கியிருக்கும் ‘ஓம்’ என்ற திரைப்படம் படவிழாவில் ‘பிரீமியர்’ காட்சியாகத் திரையிடப்பட்டது பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது. சென்னையிலிருந்து வந்திருந்த இயக்குநர்கள் பா.இரஞ்சித்,பாலாஜி தரணிதரன், மாரி செல்வராஜ், உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்கள் திரைவிழாவின் ஒவ்வொரு நாளும் பார்வையாளர்களுடன் கலந்துரையாடியபோது கூட்ட அரங்கு நிரம்பி வழிந்தது. ஊட்டி பிலிம் சொசைட்டியின் நிர்வாகிகள், செயற்பாட்டாளர் பால.நந்தகுமார், ஓவியர் மாதவன், பதிப்பாளர் டிஸ்கவரி புக்ஸ் வேடியப்பன், எழுத்தாளர் பாவா.செல்லத்துரை, ஒளிப்படக் கலைஞர் பொன்.காசிராஜன் ஆகியோர் மூன்றாவது ஆண்டாக இத்திரைப்படவிழாவை ஒருங்கிணைத்திருந்தனர்.