இந்து டாக்கீஸ்

டிஜிட்டல் மேடை 10: ஒரு தேவதையின் மர்மங்கள்

எஸ்.எஸ்.லெனின்

புனைவுகளைவிட நிஜ சம்பவங்களின் பின்னணியிலான திரைக்கதைகளுக்கு ஆழமும் அழுத்தமும் அதிகமிருக்கும். நெட்ஃபிளிக்ஸ் தனது ஒரிஜினல்ஸ் வரிசையில் வெளியிட்ட ‘த ஏஞ்சல்’, ’ஜூலை 22’ ஆகிய 2 திரைப்படங்களும் இந்த வகையிலானவை.

போர்முனையில் எதிரெதிரே நிற்கும் இரண்டு பகைநாடுகளுக்கும் ஒரே நபர் கதாநாயகனாகப் புகழ்பெற வாய்ப்புண்டா? எகிப்தைச் சேர்ந்த அஷ்ரப் மார்வானுக்கு  அந்த விசித்திரப் பெருமை சேர்ந்தது. 20-ம் நூற்றாண்டின் மிகப் பெரும் உளவாளி என்றும் சொல்லப்படும் அஷ்ரப் கதையை ‘த ஏஞ்சல்’ என்ற த்ரில்லராக நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டது.

யூதர்களின் தேசமாக இஸ்ரேல் உருவான பிறகு, மத்தியக் கிழக்கை எப்போதும் போர் மேகங்கள் சூழ்ந்திருந்தன. இஸ்லாமிய நாடுகளின் ஆதரவைப் பெற்ற எகிப்தை எதிர்கொள்ள இஸ்ரேல் திணறியது. அப்போது எகிப்து அதிபரான நாசரின் குடும்பத்திலிருந்தே இஸ்ரேலுக்கு உளவுக் கரம் நீண்டது.

நாசரின் மருமகனான அஷ்ரப், இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொஸாட்டுக்குத் தகவல்கள் தரத் தொடங்குகிறார். அஷ்ரபின் சூதாட்ட மோகமும் மாமனாரால் மதிக்கப்படாததும் இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. அஷ்ரபுக்கு மொஸாட் ரகசியமாகச் சூட்டும் செல்லப் பெயரே ‘த ஏஞ்சல்’.

நாசர் இறந்ததும் அதிபராகப் பதவியேற்கும் அன்வர் சதாத்தின் நம்பிக்கையைப் பெறும் அஷ்ரப், புதிய அதிபரின் சிறப்பு ஆலோசகராகவும் உயருகிறார். இப்போது எகிப்தின் ரகசியங்களை மொஸாட் பெறுவது மேலும் எளிதாகிறது. இஸ்ரேல் எதிர்பாரா வகையில், அதன் புனித நாளில் திடீரெனப் போர் தொடுக்க எகிப்து முடிவு செய்கிறது.

இந்தத் தகவலை முன்வைத்து ‘எகிப்து அதிபர் மாளிகை-இஸ்ரேலின் மொஸாட்’ இடையே அஷ்ரப் நடத்தும் சித்து விளையாட்டும் அதன் மூலமாக இரு நாட்டு மக்களுக்குமே அவர் ஹீரோவாகும் விசித்திரமும் நடந்தேறுகிறது. அஷ்ரபைத் தனது உளவாளி என இஸ்ரேல் பெருமிதம் கொள்ள, தாய்நாட்டுக்காக எதிரியின் கண்ணில் குத்திய ‘டபுள் ஏஜெண்ட்’ என்று எகிப்தும் அவரை மெச்சுகின்றன. இருதரப்புக்கும் மத்தியில் அஷ்ரப் அப்படியென்ன செய்தார் என்பதைத் திரைப்படம் சொல்கிறது.

சிக்கலான அஷ்ரப் கதாபாத்திரத்தை டச்சு நடிகரான மார்வன் கென்சாரி அமைதியாக வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தை இயக்கியவர் மற்றும் திரைக்கதைக்கு அடிப்படையான நாவலின் ஆசிரியர் எனப் பலரும் இஸ்ரேலியர்கள் என்பதால் அதன் சார்பு நிலை படத்திலும் தெரிகிறது.

எகிப்தின் ஆயுத முகவராக அதன் பின்னர் அடையாளம் காணப்பட்ட அஷ்ரப், 10 வருடங்களுக்கு முன்பு தனது 63-வது வயதில் லண்டனில் மர்மமாக இறந்தார். நிஜமாகவே அஷ்ரப் ஒரு தேவதையா என்பதும் அவருடன் மறைந்த மர்மங்களில் ஒன்று.
 

ஜூலை 22: நார்வே கண்ட பெருந்துயரம்

உலகில் எங்கே போர் வெடித்தாலும் அமைதிக்கான முன்னெடுப்புகளில் தன்னிச்சையாகக் களமிறங்கும் நாடு நார்வே. அந்த அமைதிப் புறாவின் மடியிலும் தீவிரவாதிகள் தீ வைத்ததுதான் ‘ஜூலை 22’ திரைப்படம்.

2011 ஜூலை 22 அன்று காலை நார்வே தலைநகர் ஆஸ்லோவில் பிரதமர் அலுவலகம் அருகே கார் குண்டு வெடித்து 8 பேர் இறக்கின்றனர். சற்று நேரத்தில் அருகிலிருக்கும் தீவில் கோடை முகாமில் கூடிய மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 69 பேர் கொல்லப்படுகின்றனர். இரண்டு கொடூரத்தையும் நிகழ்த்திய தீவிரவாதி பின்னர் கைதுசெய்யப்பட்டு ஆயுள் தண்டனைக்கு ஆளாகிறார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நார்வே கண்ட பெரும் துயரமாக ‘ஜூலை 22’ அமைந்தது.

தாக்குதலில் படுகாயமடைந்து கோமாவில் விழுந்து மீளும் ஓர் இளைஞர், அவரது மூளையில் தங்கிப்போன வெடிக்காத துப்பாக்கி ரவைகளும், பயங்கரத்தின் நினைவுகளுமாக இயல்பு வாழ்க்கைக்கு ஏங்குவதைப் படம் பேசுகிறது.

அந்த இளைஞர் நீதிமன்றத்தில் தீவிரவாதிக்கு எதிர் நின்று பேசும் காட்சிகள் படத்தின் ஆகச் சிறந்தவை. குற்ற உணர்வு சற்றுமில்லாத தீவிரவாதி, நியாயத்துக்கும் தொழில் தர்மத்துக்கும் இடையே அல்லாடும் அவருடைய வழக்கறிஞர் எனப் பாசாங்கில்லாத பாத்திரங்களும் படத்தில் ஈர்க்கின்றன.

தொடர்புக்கு: leninsuman4k@gmail.com

SCROLL FOR NEXT