‘ஒரு உயிரை அழிச்சிட்டு உள்ள வர்றோம்… உயிரை விட்டாத்தான் வெளிய போக முடியும்’ என்பது சமீபத்தில் வெளியான ‘ஜிகிர்தண்டா’ படத்தில் வரும் வசனம். கொலைவெறியும் உயிர் பயமும் கொண்ட ஒரு ரவுடியின் வாழ்க்கையை இதைவிட ரத்தினச் சுருக்கமாகச் சொல்ல எதுவுமில்லை. ஆனால் இந்த வசனம் மட்டும் போதுமா?
ஜிகர்தண்டாவும் வேலையில்லா பட்டதாரியும்
நீங்கள், ஜிகர்தண்டா பார்த்தவராயிருந்தால் ஒவ்வொரு முறை இந்த வசனம் உங்கள் காதுகளில் விழும்போதும் சேது (பாபி சிம்ஹா) என்கிற ரவுடி உங்கள் கண் முன்னே கர்ஜித்துக்கொண்டிருப்பான். சேதுவை அழுத்தமாகச் சித்திரித்த மனதைத் தாக்கக்கூடிய காட்சி மொழியால் மட்டுமே இது சாத்தியப்படுகிறது. ஆனால் உண்மையில் தமிழ் சினிமாவில் வசனமும் காட்சி மொழியும் இரண்டறக் கலந்து தாக்கத்தை ஏற்படுத்தும் திரைக்கதை கொண்ட இது போன்ற படங்கள் குறிஞ்சி மலராகத்தான் நமக்குப் பார்க்கக் கிடைக்கின்றன.
பெரும்பாலான படங்களின் ஆதாரக் கருவும் அதன் பல்வேறு அம்சங்களும் வெறும் வசனங்களில் மட்டுமே வெளிப்படுகின்றன. காட்சிகளில் அழுத்தமில்லை, காட்சிகள் கதைக்கருவைப் பிரதிபலிப்பதும் இல்லை. வசனங்கள் மட்டும்தான் சினிமாவா?
அதற்கான பதிலை சமீபத்தில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தின் மூலம் அறிய முடிந்தது. வேலையில்லா பட்டதாரி என்று பெயர் வைத்துவிட்டு அதை ஒட்டுமொத்தப் பொறியாளர்களுக்கும் சமர்ப்பிப்பதாகச் சொல்கிற இப்படம், அவர்களுடைய குறைகளையும் தேவைகளையும் நியாயமான கேள்விகளையும் முன்வைக்காமல் நகர்ந்துவிட முடியுமா என்ற கேள்வி மனதில் எழுந்தது. ட்ரெயிலரில் வரும் ‘தொடர்ந்து நாலு வார்த்தை இங்கிலிஷ்ல பேச முடியல…அப்பறம் வேலை கிடைக்கல வேலை கிடைக்கலன்னா எப்படிக் கிடைக்கும்?’ என்கிற வசனம் இந்தச் சந்தேகத்தை ஓரளவு குறைத்தது (படத்தில் அவர் ஆங்கிலம் பேச முடியாமல் தவிப்பது போன்ற காட்சி இல்லவே இல்லை).
தனுஷ் மூச்சு விடாமல் பேசும் ஒரு வசனத்தில் ‘பெத்தவங்களும் மத்தவங்களும் தண்டச்சோறு தண்டச்சோறுன்னு சொல்லும்போது சாப்படற ஓவ்வொரு சாப்பாடும் தொண்டையில சிக்கி வலிச்சிக்கிட்டே இறங்கும்’ என்று கூறுவார். தொண்டையில் சிக்கிய சாப்பாடு மூச்சு குழாயில் நுழைந்து புறையேறி ஒட்டுமொத்த கண் நரம்புகளும் வலிக்க, வரும் கண்ணீரை தலைகுனிந்தபடியே மறைத்துக்கொண்டு இன்னொரு கை சோற்றை நீண்ட நேரம் பிசைந்துகொண்டே இருக்கும் சூழ்நிலை, ஏதோ ஒரு வகையில் அனைவருக்குமே வாய்க்கும்.
அதுபோன்ற காலகட்டத்தில் வாழ்ந்திருக்கும் ஒருவக்கு அதன் வலியின் வீரியம் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட உணர்வுபூர்வமான வலியை மிக அவசியமான ஒரு கதையில் காட்சியாகக் காட்டாமல், வெறும் வசனம் மூலம் பார்வையாளனுக்குக் கடத்திவிட முடியுமா? அப்படித்தான் அதைச் சொல்ல வேண்டுமா?
இப்படம் மட்டுமல்ல, பல படங்கள் வசனங்களில், பாடல்களில் காட்டும் கவனத்தைத் திரைக்கதையில் காட்சி மொழியில் காட்டுகின்றனவா? வசனங்களுக்காகவே பெரிதும் விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட மூடர் கூடம் இதற்கு தகுந்த உதாரணம்.
மறந்துவிட்ட தமிழ் சினிமா
வல்லது வாழும் என்று நியாயப்படுத்தப்பட்ட விஷயமே இன்று முதலாளித்துவ வடிவில் பரவலானதில் மக்களின் 70 சதவீதத்தினரின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த முதலாளித்துவத்தைப் பற்றிப் பேசிய படம்தான் மூடர் கூடம். இப்படம் வித்தியாசமான திரைமொழியைக் கையாண்ட ஒன்று.
ஆனால் அது இன்றைய தேவையை மறந்துவிட்டு, முதலாளித்துவம் எப்படி ஆரம்பித்தது என்ற கதையை, சுதந்திரம் பெற்ற மறைமுக அடிமைகளுக்குச் சொல்லி வியாபாரம் செய்ததாகவே தோன்றுகிறது. இதனுள் வசனகர்த்தாவின் சுய உணர்வும் கோபமும்தான் வெளிப்படுகிறது. அது நம் அனைவருக்குள்ளும் இருக்கிறது என்பதுதான் இப்படத்தின் வெற்றிக்கு ஆதாரம்.
இதில் ஒரு முதலாளியிடம் திருடப்போகும் நால்வரும், ஒரு வேளை சோற்றுக்குக்கூட வழியில்லாதவர்கள். ஆனால் காவல் அதிகாரி கொடுக்கும் ஐநூறு ரூபாய், புகைக்கும் குடிக்கும்தானே போனது. இவர்கள் பேசும் வசனங்கள் மட்டுமே முதலாளித்துவத்துக்கு எதிரானதாக இருக்கின்றன. செயல்கள் யாவும் அவற்றை ஆதரிக்கவே செய்கின்றன. தமிழ்ப் படங்களின் மொத்த வசனங்களும் இந்த அளவில்தான் வெற்றிபெறுகின்றன.
பிக்டோரியல் ரெப்ரசண்ட் (Pictorial Represent – காட்சி ரீதியான பிரதிநிதித்துவம்) என்ற மொழியைப் பிரதானமாகக் கொண்ட கலைதான் சினிமா. இதை முற்றிலும் தமிழ் சினிமா மறந்துவிட்டது என்று கூறுவது மிகையில்லை. வளவளவென்று பேசிக்கொண்டிருப்பதைக் கேட்பதற்கு யாருக்கும் நேரமுமில்லை, பொறுமையுமில்லை. காட்சிகள் மட்டுமே மனதை ஆக்கிரமிக்கின்றன. சினிமா என்ற கலையின் ஆதாரத்தையே தமிழ் சினிமா மறைக்கிறதா?
அன்று ஆரூர்தாஸ், கருணாநிதி போன்றோர் தாங்கள் எழுதிய ஆழமான வசனங்களின் மூலம் பெற்ற செல்வாக்கும், வசனங்களைத் தங்களுக்கே உரிய விதத்தில் பேசிய சிவாஜி, ரஜினி போன்றோரின் வெற்றிகளும் நடிகர்களையும் வசனகர்த்தாக்களையும் இயக்குநர்களையும் தவறான பாதையில் அழைத்துச் சென்றுவிட்டனவா?
திரைக்கலையை வாழ்க்கையைக் கற்றுக்கொள்வதற்கும் கற்பிப்பதற்கும் ஆன ஊடகமாகப் பார்த்த
மகேந்திரன், ஜெயகாந்தன், பாலுமகேந்திரா போன்றோரின் காலம் மலையேறிவிட்டது. புதிதாய் வரும் படைப்பாளிகளையும் திடீர்ப் புகழும் வணிகமும் மயக்கிவிடுகின்றன. பணம் போட்டுப் படம் எடுக்கிறோம், அதைப் பல மடங்குகளாக்க நினைப்பது தவறா என்ற கேள்வி எழுவதும் நியாயமே.
சர்வதேச சினிமாவுக்கும் வணிகம் ஒரு நோக்கமாக இருக்கிறது. ஆனால் தமிழ்த் திரையுலகுக்கு அது மட்டுமே நோக்கமென்று இருப்பதுதான் வேதனையிலும் வேதனை. வணிக முனைப்புடன் செயல்படும் அதே ஹாலிவுட்டிலிருந்து சிறந்த சினிமாக்களும் உருவாக்கப்படுகின்றன. சென்ற வருடம் வெளியாகி சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்ற 12 Years a Slave திரைப்படம் கறுப்பின என்ற மக்களின் அடிமைத்தனத்தைப் பதிவுசெய்தது.
அதில் கறுப்பினப் பெண் தன் அடிமை வாழ்வில் சவுக்கால் அடிவாங்கும் உள்ளத்தை உறைய வைக்கும் காட்சி இடம்பெற்றது. அக்காட்சி அடிமைத்தனத்தை அனுபவித்திராதவருக்கும் கண்ணீரை வரவழைக்கும். இதே பின்னணியில் தமிழில் ஒரு படம் எடுக்கப்பட்டால் நாயகன் வீறுகொண்டு எழுந்து வந்து ’எவ்வளவு நாளாடா அடிச்சிட்டே இருப்பீங்க’ என்று வசனம் பேசிவிட்டு முதலாளிகளைப் பறந்து பறந்து தாக்கியிருப்பார்.
வாழ்க்கை பற்றிய நமது புரிந்துணர்வைக் கூர்மைப்படுத்தும் கலை வடிவங்கள்தாம் சினிமாவும் இலக்கியமும். தமிழ் சினிமா அந்த நோக்கத்தைச் செயல்படுத்த அதிகமும் தயங்கிவருகிறது. வாழ்வின் சித்திரங்களைக் காட்சிப்படுத்தாமல், பாத்திரங்களைக் காட்சி மொழியில் வடிக்காமல் வசனங்களாலேயே இயங்கிவரும் நிலையில் வாழ்க்கை பற்றிய புரிந்துணர்வு எப்படிக் கூர்மைப்படும்?
தொடர்புக்கு: saravana.9490@gmail.com