இந்து டாக்கீஸ்

ஹாலிவுட் ஜன்னல்: சிரிப்பு துப்பறிவாளர்கள்

எஸ்.சுமன்

ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறியும் கதைகளுக்கு வயது 130. ஷெர்லாக் கதைகள் திரைப்படமாவதன் வரிசையில் அடுத்து வர இருக்கிறது, ’ஹோம்ஸ் & வாட்சன்’ என்ற நகைச்சுவைத் திரைப்படம்.

துப்பறிதலில் ஷெர்லாக் ஹோம்ஸின் வலது கரமாகவும் அறைத் தோழனாகவும் சமயங்களில் உயிர்காக்கும் நண்பனாகவும் உடன் வளைய வருபவர் டாக்டர் வாட்சன். ஷெர்லாக்கின் பெரும்பாலான கதைகள் இவரது பார்வையிலேயே விரியும். இருவர் கூட்டணியில் தடயவியல், குற்றவியல், மாறுவேடத்துக்கு இணையாக நகைச்சுவையும் கோலோச்சும். ஆனால் படம் முழுவதுமே காமெடி தர்பார் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு தயாராகியுள்ள திரைப்படம் ‘ஹோம்ஸ் & வாட்சன்’.

இங்கிலாந்து ராணிக்கு விடுக்கப்படும் படுகொலை அச்சுறுத்தலை ஆராயப் புறப்படும் ஹோம்ஸ் - வாட்சன் ஜோடி, தங்களது வழக்கமான பாணியில் துப்புத் துலக்கி ராணியைக் காப்பாற்ற முயல்வதே கதை. புனைவுக்கு அப்பால் ஷெர்லாக் துப்பறியும் பாணியின் நுணுக்கங்கள் பல்வேறு நிஜ குற்ற வழக்குகளில் தீர்வு தந்திருக்கின்றன. ஷெர்லாக்கின் அலாதியான அந்த பாணியையும் வாட்சனின் சொதப்பல்களையும் மையப்படுத்தி சிரிக்கச் சிரிக்க காட்சிகளைப் படமாக்கி இருக்கிறார்கள். சந்தடியில் இங்கிலாந்து ராணியையும் விட்டுவைக்காது கலாய்த்துள்ளனர்.

ஷெர்லாக் ஹோம்ஸாக வில் ஃபெர்ரல், டாக்டர் வாட்சனாக ஜான் சி.ரெய்லி நடித்துள்ளனர். இருவரும் பத்தாண்டுகளுக்கு முன்னர் வெளியான ஸ்டெப் பிரதர்ஸ் படத்துக்கு பின்னர் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். இப்படத்தில் நடிக்கும் ஜான் சி.ரெய்லி மற்றும் ஸ்டீவ் கூகன் முறையே ஹார்டி மற்றும் லாரல் கதாபாத்திரங்களில் நடிக்கும் லாரல் - ஹார்டி திரைப்படமும் ஒரே சமயத்தில் வெளியாகிறது.

ஹோம்ஸ் & வாட்சன் திரைப்படத்தை ஈதன் கோன் (Etan Cohen) இயக்கி உள்ளார். ஹோம்ஸாக வரும் வில் ஃபெர்ரல் படத்தின் தயாரிப்பிலும் இணைந்திருக்கிறார். டிசம்பர் 25, கிறிஸ்துமஸ் தினத்தன்று ஹோம்ஸ் & வாட்சன் திரைப்படம் வெளியாகிறது.

SCROLL FOR NEXT