சாகச கார் ‘ஹெர்பி’, மிரட்டும் கனரக ட்ரக் ‘ட்யுயல்’, அட்டகாசமான அனிமேஷனின் ‘கார்ஸ்’ என ஹாலிவுட் வாகனங்களை வைத்து ஆடிய அட்டகாச அமானுஷ்ய ஆட்டங்கள் பல. மலையாளத்தில் தங்கையின் ஆவி வாழும் ‘கூடே’ வினை மலையாள ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள்.
போதைப்பொருளோ, கள்ளச்சாராயமோ இருந்தால் சிவப்பு விளக்கெரிந்து காட்டிக்கொடுக்கும் ‘படிக்காதவன்’ லக்ஷ்மி டாக்ஸி, இராம.நாராயணன் அறிமுகப்படுத்திய ‘குட்டிப்பிசாசு’ மஞ்சள் கார், நயன்தாராவின் ‘டோரா’ கார் எனத் தமிழிலும் வாகனங்கள் கதாபாத்திரங்களான படங்கள் உண்டு.
இந்த வரிசையில் ஆவி, அறிவியல் புனைவு, திகில், நகைச்சுவை கலந்து தெலுங்கில் செய்யப்பட்டிருக்கும் பரிசோதனை முயற்சிதான் ‘டாக்ஸிவாலா’. விஜய் தேவரகொண்டாவுக்கு ஹாட்ரிக் வெற்றி. அதற்கு வழிவகுத்துக் கொடுத்துவிட்டது ராகுல் சங்க்ரித்யனின் இயக்கம்.
அது கார் மட்டுமே அல்ல
பட்டதாரியான சிவா, படித்து முடித்ததும் ஹைதராபாத் வருகிறான். சரியான வேலை கிடைக்கவில்லை. குறைந்த விலையில் பழைய கார் ஒன்றை வாங்கி அதை கால்டாக்ஸி சேவையில் இணைத்துக்கொண்டு காரோட்டி ஆகிறான். ஒரு டாக்டர் பெண்ணையும் காதலிக்கும் அவனுக்கு, எட்டுவழித் தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்பதுபோல வாழ்க்கை அழகாக விரைகிறது. எதிர்பாராத தருணத்தில் அவனது அந்த கார் அமானுஷ்ய காராக மாறுகிறது.
விக்ரமாதித்தன் கதையில் வரும் கூடு விட்டு கூடு பாயும் உத்தியை அழகாக எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள் திரைக்கதையை இணைந்து எழுதியிருக்கும் இயக்குநர் ராகுல் சங்க்ரித்யன், கதாசிரியர் சாய்குமார் ஆகிய இருவரும். ஐடி நிறுவன வேலையைத் துறந்து, ‘மா’ தொலைக்காட்சியின் குறும்படப் போட்டியில் முதல் பரிசு வென்றவர் இந்த இயக்குர். இதற்கு முன்னர் ‘தி என்ட்’ என்கிற திகில் படத்தையும் எடுத்திருக்கிறார்.
ஒரு குழந்தையின் மரணம், வேறொரு தாயின் மரணம், ஒரு காரில் நடக்கும் புதிரான சம்பவம் எனத் தொடங்கி முதல் பாதி முழுவதும் திகில், டூயட் இல்லாத மென்காதலுடன் நகைச்சுவையாகப் பயணிக்கிறது படம். இவற்றை ஒரே இழையில் பொருத்த உணர்வுபூர்வமான பின்னணிக் கதையை உருவாக்கி அதற்கு அறிவியல் விளக்கமும் கொடுத்திருப்பதால் இந்தப் படம் சின்ன சின்ன குறைகளையும் மீறிக் கவர்கிறது.
யாரும் அதிகம் தொடாத அறிவியல் புனைவைப் பின்னணியாகக் கொண்டு குறைந்த பட்ஜெட்டில் நிறைவாகக் கதை சொல்லியதற்காகவே இந்தக் குழுவைப் பாராட்டலாம். அமானுஷ்ய சம்பவங்களைச் சித்தரிக்கும்போது காட்சிமொழி சற்றுப் பிசகினாலும் கேலிக்குரியதாக மாறும் ஆபத்தை உணர்ந்து நம்பகமாக நகர்த்தியிருக்கிறார்கள். இதனால் மற்றுமொரு பேய்ப்படமாக ஆகாமல் தப்பிக்கிறது.