‘என்னாச்சு’ என்ற வசனத்தின் மூலம் அனைவரையும் சிரிக்கவைத்தவர் பாலாஜி தரணிதரன். தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரியவராக வலம் வருபவர், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்துக்குப் பிறகு ‘சீதக்காதி’யுடன் களமிறங்கியுள்ளார். விஜய்சேதுபதியின் கெட்டப் மூலமே எதிர்பார்ப்பை உண்டாக்கியிருப்பவரிடம் பேசியதிலிருந்து...
‘சீதக்காதி’ தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே?
செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்ற ஒரு பழமொழி இருக்கிறது. அதிலிருந்துதான் தலைப்பை எடுத்தேன். ஏன் இந்தத் தலைப்பு என்பது படம் பார்க்கும்போது புரியும்.
75 வயது நிரம்பியவராக நடிக்கப் பலரும் தயங்குவார்கள். விஜய்சேதுபதியிடம் இக்கதையைச் சொன்னவுடன் என்ன சொன்னார்?
‘அய்யா’ கதாபாத்திரத்தை வைத்துத் தான் முழுப் படமே. படத்தில் 40 நிமிடங்கள் அக்கதாபாத்திரம் வரும். அதன் முக்கியத்துவம் விஜய்சேதுபதிக்குத் தெரிந்தது. என்ன சொல்லப் போகிறோம் என்பதை முழுமையாகப் புரிந்துகொண்டார். எனது 25-வது படம் இதுதான் என்று அறிவித்ததும் அவர்தான்.
விஜய்சேதுபதியைத் தவிர்த்து வேறு யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள்?
பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோர் அவர்களாகவே வருவார்கள். இவர்கள் போக மகேந்திரன், மெளலி, அர்ச்சனா என நிறையப் பேர் நடித்திருக்கிறார்கள்.
விஜய்சேதுபதியின் மேக்கப் குறித்து…
எந்தவொரு விஷயத்தையுமே ரொம்ப கேஷுவலாகச் செய்துவிடுவார். அதுதான் விஜய்சேதுபதி. காலையில் மேக்கப் போட நாலரை மணி நேரமாகும். மாலையில் மேக்கப்பைக் கலைக்க 1 மணி நேரமாகும். மேக்கப்புக்குத் தகுந்தவாறு ஷூட்டிங்கை ப்ளான் பண்ணிக்குவேன். மேக்கப் போட்டவுடனே ஒரு புத்துணர்வு தெரியும். அப்போது க்ளாஸ்-அப் ஷாட்கள் எல்லாம் எடுத்துவிடுவேன். ரொம்ப சந்தோஷமாகவே பண்ணினோம்.
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்துக்குப் பிறகு ஏன் இடைவெளி?
‘ஒரு பக்க கதை’ படம் எடுத்துருக்கோம். வெளியே வரணும். அப்படம் வெளியாகியிருந்தால் இந்தக் கேள்வியே வந்திருக்காது. ’சீதக்காதி’ எனக்கு 3-வது படமாக இருந்திருக்கும். ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை முடித்தவுடன், எனக்கே ஒரு ப்ரேக் தேவைப்பட்டது. என் 2 வருட உழைப்பு அது. அப்படம் வெளியான 6 மாதத்திலேயே ‘சீதக்காதி’ முதல் பாதி எழுதிவிட்டேன். ஆனால், தொடங்க முடியாமல் ‘ஒரு பக்க கதை’ பண்ணினேன். தாமதமாகிவிட்டது. சில நேரத்தில் எதுவும் நம் கையில் இல்லை.
விஜய்சேதுபதியின் வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்துக்கு முன்பு ‘வர்ணம்’ என்ற படத்தில் சின்ன கேரக்டர் ரோலில் விஜய்சேதுபதி நடித்தார். அப்படத்தில் திரைக்கதை, வசனம் பகுதியில் பணிபுரிந்தேன். ‘96’ ப்ரேம்குமார் தான் அப்படத்துக்கு கேமராமேன். ’ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ இயக்குநர், ’அசுரவதம்’ இயக்குநர் எல்லாம் அதில் உதவி இயக்குநர்கள்.
அனைவருமே படப்பிடிப்பு முடிந்தவுடன் விஜய்சேதுபதியைப் பற்றிப் பேசுவார்கள். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தைப் பண்ணலாம் என்று முடிவு செய்தபோது, அனைவருமே விஜய்சேதுபதியின் பெயரை சிபாரிசு செய்தார்கள். விஜய்சேதுபதியை அழைத்துப் பேசினேன். அவர் நடந்து கொண்ட விதம், கதையை உள்வாங்கி என்ன பண்ண வேண்டும் எனக் கேட்டது என அனைத்துமே ரொம்ப ஈர்த்தது. நடித்தும் பிரமாதப்படுத்தினார்.
இந்த அளவுக்கு வளர்வார் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால், நல்ல நடிகராக வருவார் என்று எதிர்பார்த்தேன். அவருடைய இந்த வளர்ச்சிக்கு கடுமையான உழைப்புதான் காரணம். விஜய்சேதுபதி நடிக்க ஒப்புக் கொண்டால், இயக்குநருக்கு எவ்வித பிரச்சினையுமே இருக்காது.
ஒரு முழுமையான கமர்ஷியல் படம் பண்ணும் திட்டமிருக்கிறதா?
பள்ளியில் படிக்கும்போது தீபாவளிக்கு வாங்கிய புது ட்ரெஸை சனிக்கிழமை போட்டுவரச் சொல்வார்கள். புது ட்ரெஸை அனைவரும் பாராட்டுவார்கள் என்று பயங்கரமாக நினைத்துக் கொண்டு போனால், யாருமே கண்டு கொள்ளவே மாட்டார்கள். அப்படித்தான் பயங்கரமான கமர்ஷியல் படம் பண்ணனும் என்றுதான் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பண்ணினேன். ‘சீதக்காதி’ படமும் கமர்ஷியல் படம்தான்.