மலைகளின் ராணியான ஊட்டிக்குப் பல பெருமைகள் உண்டு. ஊட்டியின் இயற்கை அழகுக்கும் பாரம்பரிய பெருமைக்கும் மகுடம் சேர்ப்பதில் ‘ஊட்டி திரைப்பட விழா’வும் இப்போது ஒன்றாகிவிட்டது. 3-வது ஆண்டாக டிசம்பர் 7 முதல் 9-ம் தேதிவரை மூன்று நாட்களுக்கு இத்திரைப்படவிழா நடைபெற உள்ளது.
தெற்காசிய அளவில் நடைபெறும் இந்தச் சர்வதேசக் குறும்படத் திருவிழாவை ஒருங்கிணைத்து நடத்துகிறது ஊட்டி திரைப்படச் சங்கம். கடந்த ஆண்டைப் போலவே இந்தக் குறும்படத் திருவிழாவை, பிரிண்ட் மீடியா பார்ட்னராக இந்த ஆண்டும் இணைந்து முன்னெடுக்கிறது ‘இந்து தமிழ்’ நாளிதழ்.
தென்னிந்தியாவின் முக்கியமான மலைவாசஸ்தலமான ஊட்டியில் குளிர்க் காலத்தில் பூத்துக் குலுங்கும் விதவிதமான வண்ண மலர்களைப் போல ‘ஊட்டி திரைப்பட விழா’வில் திரையிடப்பட்டும் விதவிதமான குறும்படங்களுக்கெனத் தனி ரசிகர் கூட்டமே உருவாகிவிட்டது. இதமான குளிர், சூடான காபி, பார்வைக்குப் பரவசமூட்டும் படங்கள் எனத் தொடங்கிய இந்த விழா, மாபெரும் கலாச்சாரச் சுற்றுலா நிகழ்வாக மாறியிருக்கிறது.
இது திரையிடலுடன் தேங்கிவிடும் திரைப்படவிழா அல்ல. தெற்காசிய அளவில் நடக்கும் குறும்படப் போட்டி விழாவின் மையமாக இருப்பதால் குறும்பட இயக்குநர்களை ஈர்த்துவருகிறது.
தெற்காசிய அளவில்..
இலங்கை, ஈரான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் உருவாக்கிய குறும்படங்கள் இந்தப் போட்டியில் பங்கேற்க பல கட்டத் தேர்வுகளைக் கடந்து வந்துள்ளன. மொத்தம் மூன்று நாட்கள் நடைபெறும் இத்திரைப்பட விழாவில் தமிழ்த் திரையுலகப் பிரமுகர்களுடன் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய திரையுலகின் முக்கியப் படைப்பாளிகளும் கலைஞர்களும் பங்கேற்க உள்ளனர். அவ்வகையில் மூன்று தென்மாநிலங்களுக்கும் பொதுவான திரைப்படவிழாவாக உருப்பெற்று வருகிறது.
இத்திரைப்பட விழா குறித்து ஊட்டி திரைப்படச் சங்கத்தின் தலைவர் பாலநந்தகுமார், செயலாளர் பவா செல்லதுரை, பொருளாளர் டிஸ்கவரி வேடியப்பன், திரைப்பட விழாவின் இயக்குநர் மாதவன் ஆகியோரிடம் பேசினோம். “திரைப்பட ஆர்வலர்கள் அதிகம் விரும்பும் இதமான பருவநிலை நிலவும் டிசம்பரில் இத்திருவிழாவை நடத்துகிறோம். இந்த ஆண்டு ஆசிய நாடுகளைச் சேர்ந்த 90 குறும்படங்கள் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
போட்டியில் வெல்லும் படங்களுக்கு சுமார் ரூ. 3 லட்சம் அளவிலான பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விழா 150 ஆண்டுகள் பழமையான ‘அசெம்ப்ளி ரூம்ஸ்’ என்ற திரையரங்கில் நடைபெற உள்ளது” என்றார் பாலநந்தகுமார்.
திறமைகளின் பரிமாற்றம்
“தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் எனத் தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மிக எளிதாக ஒன்றுகூட வசதியாக ஊட்டி இருப்பதால், இது தென்னிந்தியாவின் குறிப்பிடும்படியான திரைப்பட விழாவாக வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. குறும்படக் கலைஞர்களையும் திரைத்துறையில் சாதித்து வருபவர்களையும் இணைக்கும் திறமைப் பரிமாற்ற மேடையாக இதை உருவாக்கிவருகிறோம். திரையிடல், போட்டி ஆகியவற்றுடன் நின்றுவிடாமல் கலந்துரையாடலை ஏற்படுத்துவதுதான் விழாவின் நோக்கம்” என்றார் வேடியப்பன்
“தென்னியக் குறும்பட இயக்குநர்களுக்கும் ரசிகர்களுக்கும் சர்வதேசத் தரத்திலான குறும்படங்களை ஒரே இடத்தில் கண்டு ரசிக்கும் வாய்ப்பை உருவாக்குவது முதல் நோக்கம் என்றாலும் குறும்பட உருவாக்கத்தில் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை ஒப்பீட்டளவில் பார்த்துக்கொள்ளும் களமாக மாற்றிக்காட்ட ஊட்டி திரைப்படச் சங்கம் முயன்று வருகிறது.” என்றார் மாதவன்
தினமும் 10 மணி நேரம் குறும்படங்கள் திரையிடப்பட உள்ளன. மற்றொரு அரங்கில் ஒவ்வொரு நாள் காலை, மாலை என இரு அமர்வுகள் நடக்கின்றன. இதில் திரைப்பட வல்லுநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுடன் கலந்துரையாடலாம். இந்த ஆண்டு மலையாள நடிகர், இயக்குநர், நாடக ஆசிரியர், கதையாசிரியர் ஜாய் மேத்யூ தலைமையிலான குழு பரிசுக்குரிய படங்களைப் பார்த்துத் தேர்வு செய்ய உள்ளது.
விழாவில் இயக்குநர்கள் ராம், ரஞ்சித், சீனுராமசாமி, ஜீவா சங்கர், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ பட இயக்குநர் பாலாஜி தரணிதரன், ‘பரியேறும் பெருமாள்’ பட இயக்குநர் மாரிசெல்வராஜ், ‘96’ பட இயக்குநர் பிரேம்குமார், ‘மேற்குத் தொடர்ச்சிமலை’ பட இயக்குநர் லெனின் பாரதி, எழுத்தாளர் அஜயன்பாலா ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். விழா நிறைவு நாளில் வெற்றிபெற்றவர்களுக்கு இயக்குநர் பாரதிராஜா விருதுகளை வழங்கிக் கவுரவிக்க உள்ளார்.
ஊட்டி திரைப்பட விழாவுக்கு வர விரும்பும் ரசிகர்கள், குறும்படப் படைப்பாளிகள் தங்கள் வருகையைப் பதிவுசெய்யவும் திரைப்பட விழா குறித்த கூடுதல் விவரங்களை அறியவும் www.ootyfilmfestival.org என்ற இணைய தளத்துக்கு வாருங்கள்.ஊட்டி திரைப்பட விழா