பி.ஆர். பந்துலு இயக்கத்தில் வெளியான ‘பலே பாண்டியா’ (1962) படத்தில் பாண்டியன்,மருது, சங்கர் என மூன்று மாறுபட்ட வேடங்களில் முதல்முறையாக சிவாஜி நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் இடம்பெற்ற ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ பாடலில் நீண்ட ஆலாபனையாக சுர வரிசையைப் பாடிக்கொண்டே ‘மாமா… மாப்ளே’ என்று பாடலின் முடிவில் நடக்கும் சங்கீதப் போட்டி, மிகவும் ரசிக்கப்பட்டது.
அப்போது கிண்டியில் அமைந்திருந்த ‘நியூட்டன்’ ஸ்டூடியோவில் பாடலைப் படமாக்கியிருக்கிறார்கள். இந்தப் பாடலில் எம்.ஆர். ராதாவுக்காக எம். ராஜு என்பவரைப் பாட வைத்திருக்கிறார்கள். இவர் விஸ்வநாதன் ராமமூர்த்தி குழுவில் இடம்பெற்றிருந்த கம்பெனிப் பாடகர்.
அச்சு அசலாகத் தனது குரலில் பாடியதைப் போலவே ராஜு பாடியிருப்பதைக் கேட்டு அவரை செட்டுக்கே வரவழைத்து நடிகவேள் பாராட்டினார். பிறகு அவரிடமே அந்தப் பாடலில் இடம்பெற்ற சுர வரிசையையும் கற்றுக்கொண்டார். ஆனால் அவை அத்தனை சீக்கிரம் வாயில் நுழையவில்லை. அவர் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்ததை ரசிக்க செட்டில் இருந்தவர்கள் கூடியதால், “ஏன்டா இங்க என்ன யானை வித்த காட்டவா வந்திருக்கு?” என்று எல்லோரையும் துரத்தினாராம்.
ஓரளவு கற்றுக்கொண்டாலும் சுர வரிசைகளால் பெரிய குழப்பம் ஏற்பட, இயக்குநர் பந்துலுவிடம் “எனக்கு குளோஸ் அப் வைக்காமல் கேமராவை நிறுத்தாமல் ஓடவிடு, முக்கியமாக நாகராவில் பாடலை ஒலிக்கவிட்டு ‘ரிகர்சல்’ பார்க்க வேண்டாம் என்று உத்தரவு போட்டுவிட்டாராம் ராதா.
படப்பிடிப்பில் பாலாஜி கடம் வாசிப்பதுபோல நடிக்க, சிவாஜி தரையில் அமர்ந்து பாட, சோபாவில் அமர்ந்து எம்.ஆர். ராதா ரசித்துக் கொண்டிருப்பதுபோல இரண்டு கேமராகளை வைத்துப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். பாதி பாடல் எடுத்து முடிக்கப்பட்டதும், இரண்டு நிமிடம் இடம்பெறும் சுர ஆலாபனைக்கான படப்பிடிப்பு தொடங்கியது.
பாடகர் ராஜு சொல்லிக்கொடுத்த சுரங்கள் எல்லாம் மறந்துபோனாலும் ரொம்பவே சூப்பராகச் சமாளித்திருக்கிறார் நடிகவேள். சுர ஆலாபனையைச் சரியான உதட்டசைவுடன் சொல்ல முடியாது என்று தெரிந்ததும், தனது அங்க சேஷ்டைகளால் சமாளிக்க ஆரம்பித்தார். முக்கியமாக அவர் அமர்ந்திருந்த சோபா அதிரும்படி உடலையும் கைகளையும் அசைக்க ஆரம்பித்தார். நடிகவேளின் உடல் மொழியைக் கண்டு செட்டில் இருந்த அத்தனை பேரும் சிரித்துக்கொண்டே இருக்க அப்போதே இந்தப் பாடல், படத்துக்குப் பெரிய சர்ப்பிரைஸ் என்பது தெரிந்துவிட்டது.
பாடலின் க்ளைமேக்ஸ் நெருங்கிய நேரத்தில் பெரிய கர்நாடக சங்கீதப் பாடகரைப் போல் இடது கையைத் தனது காதருகே வைத்துக் கொண்டு வலது கையை நீட்டி வாயை அசைத்து நடித்திருக்கிறார் நடிகவேள். இது கொஞ்சம் ஓவராக இருக்கிறதே என்று இயக்குநர் நினைத்தாலும் கடைசி ஷாட் என்பதால் ஓடிக்கொண்டிருக்கும் கேமராவை நிறுத்த இயக்குநர் விரும்பவில்லை.
படப்பிடிப்பு முடிந்ததும்.. “அண்ணே ஆலாபனை பாடுறதுக்கே காதுகிட்ட கையைக் கொண்டு போயிட்டீங்களே!? என்னாலயே சிரிப்பை அடக்க முடியல” என்றார் பந்துலு. அதற்கு எம்.ஆர்.ராதா... “அடப் போய்யா... நான் குதிச்ச குதியில விக் கழன்றுகிட்டு வந்திருச்சு... அது கீழ விழுந்துட்டா.. எல்லார் உழைப்பும் தீர்ந்துருமே… விக் கீழே விழாம பிடிச்சுக்கத்தான்.. அப்புடி காதுக்கிட்ட கை வெச்சேன். என்னோட மானமும் மிச்சம், உன்னோட பிலிம் ரோலும் மிச்சம்” என்றாராம்.