இந்து டாக்கீஸ்

திரைவிமர்சனம்: ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி

இந்து டாக்கீஸ் குழு

இன்றைய நவீன யுகத்தில் கல்வியறிவு இல்லையென்றால் தினசரி வாழ்க்கை பெரும் திண்டாட்டமாகிவிடும் என்று - சித்த மருத்துவத்தின் மகத்துவத்தைக் கலந்து - சொல்ல முயல்கிறது படம்.

பாரம்பரியம் மிக்க சித்த வைத்தியக் குடும்பம் ஒன்றின் ஐந்தாவது தலைமுறை வாரிசு சிகாமணி (பரத்). முதல் வகுப்பில் ஆசிரியர் அடித்துவிட்டார் என்ற கடுப்பில், அதன் பிறகு மழைக்குக்கூடப் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கவில்லை. அவனுக்கு, படித்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்துவைக்க நினைக்கிறார் அம்மா. ஆனால் யாரும் பெண் கொடுக்கத் தயாராக இல்லை.

படித்த பெண்ணைக் காதலித்தாவது கைபிடித்துவிடலாம் என்று கல்லூரி வாசலில் டேரா போடுகிறான் இந்த அசட்டு சிகாமணி. கல்லூரி முடிந்து வரும் நந்தினியைச் (நந்திதா) சந்திக்கிறான். முகவரியைத் தெரிந்துகொள்ள, அவரைப் பின்தொடர... நந்தினியின் அப்பாவிடம் (தம்பி ராமய்யா) சிக்கிக்கொள்கிறான். அவரிடமிருந்து அப்போதைக்குத் தப்பிக்க, சிகாமணி ஒரு டாக்டர் என அவன் நண்பன் (கருணாகரன்) புருடா விடுகிறான்.

சிகாமணியை எம்.பி.பி.எஸ் டாக்டர் என நம்பி தன் மகளைத் திருமணம் செய்துவைக்க சம்மதிக்கிறார் அப்பா.

திருமணத்துக்கு எதிர்பாராத இடத்திலிருந்து எதிர்ப்பு வருவதும், அதைத் தாண்டிக் கல்யாணம் நடந்ததா, சிகாமணியின் புருடா என்னாச்சு என்பதும்தான் மிச்சம்.

நாட்டு மருத்துவ பின்னணியோடு நகைச்சுவையை அரைத்துத் தர முயன்று, அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுவிடுகிறார் அறிமுக இயக்குநர் எல்.ஜி. ரவிச்சந்தர். படம் நெடுகிலும் கலகலப்பும் தூவப்பட்டிருக்கிறது. ஆனால், திரைக்கதையை புஷ்டி ஆக்கத் தவறியதால், குவித்து வைத்த உதிரி பாகங்கள் மாதிரி ஆகிவிட்டது படம். கதாபாத்திரங்களை நெய்த விதத்திலும் யதார்த்தத்தைக் கூட்டியிருந்தால் படத்துக்கு அழகான வண்ணம் கிடைத்திருக்கும்.

நண்பர்களிடம் கதாநாயகன் தொடர்ந்து ஏமாறுவது, தேவைப்படும்போது மட்டும் வீரனாகி ஆக்‌ஷனில் அடியாட்களைப் பந்தாடுவது எனப் பழகிப்போன சங்கதிகளின் ஆதிக்கம் இதிலும் அதிகமாகவே இருக்கிறது.

படிப்பறிவில்லாததற்கும் முட்டாள்தனத்துக் கும் வேறுபாடு இருக்கிறது. இதை இயக்குநர் சரிவர கவனத்தில் கொண்டதாகத் தெரிய வில்லை. அதோடு, பெரும்பாலான காட்சிகள் கதையை வேகமாக நகர்த்திக்கொண்டு போக வேண்டும் என்ற துடிப்பில், நம்பகத்தன்மை பற்றி கவலையே இல்லாமல் அடித்துத் தள்ளி நகர்த்திப் போகிறார்.

பரத், நந்திதா, கருணாகரன் ஆகியோர் தங்கள் வேலைகளை ஒழுங்காகச் செய்திருக்கிறார்கள். ‘555’ படத்தில் பார்த்த பரத் இவரா என ஆச்சரியப்படும் விதமாக கிராமத்து பாணிக்குத் தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார். சண்டைகாட்சிகளில் மட்டும் மசாலா ஹீரோவாக மார்பை விடைக்கிறார்.

நுணுக்கமாக நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய தம்பி ராமையாவோ அநியாயத்துக்கும் கத்தியே கடமை முடிக்கிறார்.

சைமன் இசையில் கானா பாலா எழுதிப் பாடியிருக்கும் பாடல் - தகர பிளேட்டில் ஆணி. ஹரிஹரசுதன் பாடியிருக்கும் ‘கண்டாங்கி சேலை’ பாடல் ஈர்க்கிறது.

ஆபாசம் இல்லை. டாஸ்மாக் கூவல்கள் இல்லை. அதையும் தாண்டி கிச்சு கிச்சு மூட்டும் காட்சிகள் படத்தை கொஞ்சம் தேற வைக்கின்றன. எடுத்துக் கொண்ட கதையை, விறுவிறுவென்று கோர்வையான திரைக்கதை மூலம் நடத்திச் சென்றிருந்தால், சபாஷ்மணி ஆகியிருப்பான், சிகாமணி.

SCROLL FOR NEXT