இயக்குநர் சேரனுக்கு அடையாளம் கொடுத்த ‘பொற்காலம்’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீன். இவருடைய மனைவி ஆம்னி பிரபலமான கதாநாயகியாக வலம் வந்தவர். தற்போது ஆம்னியின் தம்பி சீனிவாஸின் மகள் ஹ்ரித்திகா ‘விடியாத இரவொன்று வேண்டும்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இது கருப்பையா முருகன் என்ற புதுமுக இயக்குநரின் படம்.
“பிறந்தது ஆந்திராவில், வளர்ந்தது சென்னையில், படிப்பது பெங்களூருவில். எல்லாத் தென்னிந்திய மொழிகளிலும் நடித்துப் புகழ்பெற்ற என் அத்தையைப் போல் நானும் புகழ்பெற விரும்புகிறேன். அதற்கு, என் மாமா காஜா மைதீன் ஆசீர்வாதத்துடன், அவர் தேர்வு செய்துதரும் கதையில், தமிழ்ப் படத்தில் அறிமுகமாவது எனது அதிர்ஷ்டம்” என்கிறார் ஹ்ரித்திகா.
பாடலுடன் நடிப்பும்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கவனம்பெறும் பாடகர்களுக்கு, சினிமாவில் பாட எளிதாக வாய்ப்புக் கிடைத்துவிடுகிறது. ஒருபடி மேலே சென்று, செந்தில் கணேஷுக்குக் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பே அமைந்துவிட்டது! அந்த நிகழ்ச்சியில் ‘சின்ன மச்சான் செவத்த மச்சான்’ என்ற நாட்டுப்புறப் பாடலைப் பாடி பரிசு வென்ற செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி தம்பதி, கிடைத்த பெரும் புகழை சினிமாவில் அறுவடை செய்யத் தயாராகிவிட்டது, அந்தப் பாடலை எழுதிய செல்ல தங்கையா.
அவரது இயக்கத்தில் உருவாகிவரும் ‘கரிமுகன்’ என்ற படத்தில் செந்தில் கணேஷ்தான் கதாநாயகன். காயத்ரி என்ற கேரளப் புதுவரவு கதாநாயகி. இயக்குநரே இசையமைக்கும் இந்தப் படத்தில், செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி தம்பதியின் அதிரடியான நாட்டார் பாடல் விருந்தும் இருக்கிறதாம்.
அதிகரிக்கும் அடல்ட் காமெடி!
கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி மறைந்த நாளில், அவரது உடலுக்குக் கலையஞ்சலி செலுத்தும்விதமாக மரண ஆட்டம் ஆடிய கூத்துப்பட்டறை நடிகர்களில் முக்கியமானவர் விமல். ஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் விமல் தற்போது நாயகனாக நடித்துவரும் படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’. ஆஷ்னா ஸவேரி ஜோடியாக நடித்துவருகிறார். இந்தப் படத்தின் டீஸர், ட்ரைலர் வெளியான நாளிலிருந்து வரவேற்பையும் எதிர்ப்பையும் சந்தித்துவருகிறது.
தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய பாலியல் கதைகள் அதிக அளவில் படமாகி வரவேற்பு பெற்ற காலம் ஒன்று இருந்தது. அதுபோன்ற படங்களில் பாடமும் இருக்கும். ஆனால், தற்போது பேய்ப் பட சீசன் கிட்டத்தட்ட முடிந்து ஒரு பக்கம் தரமான படங்கள் வந்தாலும் இன்னொரு பக்கம், அடல்ட் காமெடி வகைப் படங்கள் அதிகரித்து வருகின்றன. விமலின் இந்தப் படமும் அந்த ரகம் என்பதால்தான் டீஸருக்கு இத்தனை வரவேற்பு.
பறக்கும் பிரபாஸ்!
‘பாகுபலி’ படத்துக்குப் பின் பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகிவரும் ‘சாஹூ’ படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரின் பங்கேற்புடன் பெரிய பட்ஜெட் படமாக வளர்ந்து வருகிறது 'சாஹூ'. அதன் பிரத்யேக முன்னோட்டத்தைத் தனது பிறந்தநாள் அன்று வெளியிட்டார் பிரபாஸ்.
இந்த முன்னோட்டத்தில், பிரபாஸின் ஸ்டைலிஷ் தோற்றம், இறக்கையுடன் கூடிய டர்போ இன்ஜினை உடலில் கட்டிக்கொண்டு, சூப்பர்மேனைப் போல நூறு மாடிக் கட்டிடத்திலிருந்து குதித்துப் பறக்கும் காட்சி உள்ளிட்ட அதிரடி சண்டைக் காட்சிகளில் பிரபாஸைப் பார்த்து, டீஸரை யூடியூபில் ட்ரெண்ட் ஆக்கியிருக்கிறார்கள் அவருடைய ரசிகர்கள். சுஜீத் இயக்கிவரும் இந்தப் படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்துவருபவர் ஷ்ரத்தா கபூர்.