இந்து டாக்கீஸ்

கண்டசாலா 96: நீதானா என்னை அழைத்தது?

வா.ரவிக்குமார்

‘ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா’, ‘ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது’, ‘அமைதி இல்லாத என் மனமே’, ‘நீதானா என்னை அழைத்தது’, ‘உலகே மாயம் வாழ்வே மாயம்’, ‘தேசுலாவும் தேன்மலராலே….’ போன்ற காலத்தால் அழிக்கமுடியாத பாடல்களைப் பாடி, நம் நினைவுகளில் உறைந்திருப்பவர் கண்டசாலா.

இசைப் பாரம்பரியமுள்ள குடும்பத்தில் பிறந்த கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ், சிறுவயதிலேயே இசையின் மீது அளவற்ற ஈடுபாடு காட்டினார். நாட்டுப்பற்றுடன் இருந்ததால் சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் பங்கெடுத்தவர் இவர். நாடு விடுதலை அடைந்த பிறகே இசையில் முழு மனதாக ஈடுபட்டார்.

கண்டசாலாவின் இசைப் பயணம் தமிழ், தெலுங்கு, இந்தி என மொழிகளைக் கடந்து சகாப்தம் படைத்தது. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உட்பட பல நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்திய கண்டசாலாவுக்கு ஐ.நா. சபையில் பாடும் வாய்ப்பும் கிடைத்தது.

தனித்துவமான குரல்

கண்டசாலா பாடும் பாடல்களில், ஒரு பாடல் எத்தகைய உணர்ச்சியோடு எழுதப்பட்டிருக்கிறதோ, அந்த உணர்ச்சி அவரின் குரலிலும் உரிய முறையில் வெளிப்படும். இது எல்லா பாடகர்களிடமும் வெளிப்படும் பொது அம்சமாக இருந்தாலும் கண்டசாலாவின் வித்தியாசமான குரல் வளம், அந்தப் பொதுவான அம்சத்தின் உச்சமாக இருக்கும். அவர் பாடும் பாடலில் காதல், கருணை, இரக்கம், மகிழ்ச்சி, சோகம் உள்ளிட்ட எல்லா உணர்வுகளும் அநாயசமாக வெளிப்படும். திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் முதல் ஆஸ்தான வித்வானாக கவுரவிக்கப்பட்ட பெருமைக்கு உரியவர்.

SCROLL FOR NEXT