இந்து டாக்கீஸ்

ஹாலிவுட் ஜன்னல்: இயற்கையும் இறை நம்பிக்கையும்

எஸ்.சுமன்

இந்திய உச்ச நீதிமன்றத்தில், சட்டப் பிரிவு 377 தொடர்பான தீர்ப்பின்போது, நீதிபதி இந்து மல்கோத்ரா, “தன்பாலின ஈர்ப்பாளர்களிடம் வரலாறு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது” என்றார். ஆனால், வரலாறு முழுக்க தன்பாலின ஈர்ப்பைக் குறிவைத்து மன்னிக்க முடியாத அவலங்கள் அரங்கேறி இருக்கின்றன. அப்படியான  ஒன்றைத் திரைப்படமாகப் பதிவு செய்திருக்கிறது ’பாய் எரேஸ்டு’.

தீவிர இறை நம்பிக்கை கொண்ட குடும்பத்தில் பிறந்த சிறுவன் ஒருவன், கல்லூரி செல்லும் வயதில் தனது பாலின ஈர்ப்பின் தடுமாற்றத்தை ஒருவாறாக அடையாளம் காணுகிறான். அதை வீட்டில் வெளிப்படையாகச் சொல்லும்போது குடும்பத்தினர் அதிர்ச்சியடைகின்றனர். தேவாலயத்தின் ஆதரவில் நடத்தப்படும் ’சிகிச்சை முகாம்’ ஒன்றுக்கு அவன் அனுப்பப்படுகிறான்.

பாலின ஈர்ப்பில் ’பிறழ்வு’ கண்ட இளைஞர்களைத் திருத்த இறைபோதனையும், மனோத்தத்துவமும் கலந்த கடும் பயிற்சிகள் அங்கே வழங்கப்படுகின்றன. இவ்வாறு சிகிச்சைக்குப் பணிக்கப்பட்ட ஜரார்ட் கான்லி என்பவர், தனது அனுபவத்தை ’பாய் எரேஸ்டு’ என்ற தலைப்பில் எழுதிய புத்தகம் பலத்த விவாதங்களை எழுப்பியது. இவரது வாழ்க்கை, புத்தகத்தைத் தழுவி அதே தலைப்பிலான திரைப்படம் தற்போது உருவாகி இருக்கிறது.

தன்பாலின ஈர்ப்பை மையமாக வைத்து, குடும்பம், சமூகம், உறவுகள் மத்தியிலான உருக்கம், இறை நம்பிக்கை, இயற்கையின் விழைவு எனப் பலவற்றையும் இப்படத்தின் கதை அலசுகிறது. பாலின தடுமாற்றத்துக்கு ஆளாகும் இளைஞராக லுகாஸ் ஹெட்ஜஸ் நடித்துள்ளார். திரைக்கதையை வடிவமைத்து, தயாரிப்பில் பங்கேற்றதுடன் படத்தை இயக்கியுள்ளார் ஜோயல் எட்ஜர்டன்.

தன்பாலின ஈர்ப்பைக் ’குணப்படுத்தும்’ சிகிச்சையாளராக வரும் இவருக்கும் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கும் இடையேயான உரையாடல்களும் விவாதங்களுமே படத்தின் மையம். மகன் மீதான பாசத்துக்கும் மத நம்பிக்கைகளுக்கும் இடையே அல்லாடும் பெற்றோராக, ஆஸ்கர் விருது பெற்ற ரஸல் க்ரோ மற்றும் நிகோல் கிட்மேன் நடித்துள்ளனர். பாய் எரேஸ்டு’ திரைப்படம் நவம்பர் 2 அன்று வெளியாகிறது.ஹாலிவுட் ஜன்னல்

SCROLL FOR NEXT