இந்து டாக்கீஸ்

திரைப் பள்ளி 20: ‘விஜி... சீனு விஜி!’

ஆர்.சி.ஜெயந்தன்

காலையில் சாப்பிட மறந்து அலுவலகம் வந்துவிட்டீர்கள். வழக்கமாக 11 மணிக்குக் குடித்திருக்க வேண்டிய தேநீரையும் அருந்தவில்லை. சரியாக 12.30 மணிக்கெல்லாம் வயிற்றில் பசி மெல்லிய தீயாகச் சுடர்விடத் தொடங்குகிறது. கடிகார முள் 1 மணியைக் காட்டியதும் ஒரே எட்டில் டைனிங் ஹாலில் நுழைந்து, அம்மா கொடுத்தனுப்பிய சாப்பாட்டு கேரியரைத் திறக்கிறீர்கள். அது மூன்று அடுக்கு கேரியர். இங்கே திரைக்கதையின் மூன்று அங்கம் (Three Act Structure) எனும் வடிவத்தை நினைத்துக்கொள்ளுங்கள். முதல் டப்பாவில் மணக்க மணக்க அவரைக்காய்ப் பொரியல். இரண்டாவது டப்பாவில் முருங்கைக்காய் சாம்பார். ‘முடிவாக’ மூன்றாவது டப்பாவில் இருக்க வேண்டிய சாதம் அங்கே இல்லை! அதற்குப் பதிலாக, அந்த டப்பா நிறைய எலுமிச்சை ஊறுகாய் இருக்கிறது. பசியில் இருந்த உங்களுக்கு இந்த ஏமாற்றம், எப்படிப்பட்ட மனநிலையைக் கொடுத்திருக்கும்!

ஒரு நல்ல திரைப்பட அனுபவம் என்பது, திரைக்கதை தரும் முடிவின் மூலம்தான் முழுமை அடைகிறது. திரையரங்கை விட்டு வெளியே வரும்போது பார்வையாளர்களுக்கு முழுமையான மனநிறைவை அளிக்கும்விதமாக படத்தின் முடிவு இருக்க வேண்டும். ‘திரைக்கதை ஆசிரியர் உருவாக்கிய முடிவை, பார்வையாளர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே அது அவர்களுக்கு மனநிறைவைத் தரும் முடிவு. அதுவே தர்க்கரீதியான – நியாயமான முடிவாக (Logical ending) இருக்கமுடியும்’ என்கிறார் சித் ஃபீல்ட்.

பெரும்பாலான திரைப்படங்கள், பார்வையாளர்கள் எதிர்பார்க்கும் முடிவைக் கொண்டிருப்பதில்லை. ஆனால், கொஞ்சமும் எதிர்பார்க்காத முடிவுகளைக் கொண்ட பல படங்களைப் பார்வையாளர்கள் ஏற்றுக்கொண்டுவிடுகிறார்கள். அது எப்படிச் சாத்தியமாகிறது என்றால், அங்கேயும் ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்தை (valid reasoning), அந்த முடிவுக்குத் தந்திருப்பார் திரைக்கதை ஆசிரியர். உதாரணத்துக்கு ‘மூன்றாம் பிறை’ படத்தை எடுத்துக்கொள்வோம்.

சீனுவும் விஜியும்

வணிக சமரசங்கள் செய்துகொண்டாலும் சமகால வாழ்க்கையின் சித்திரங்களை மிகையின்றிச் சித்தரித்தவர். தான் உருவாக்கிய கதாபாத்திரங்களின் இயல்பை, சிதைக்கவோ நீர்த்துப்போகவோ செய்யாதவர். ‘மூன்றாம் பிறை’ படத்தின் வழியே இவர் உருவாக்கிய சீனுவும் விஜியும் தமிழ் மனங்களில் அமரத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களாக இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

விபத்தொன்றில் ஏற்பட்ட அதிர்ச்சியால்,  நினைவுகளை இழந்து பால்யத்தின் நினைவுகளில் குழந்தையாகத் தேங்கித் தவிக்கிறாள் விஜி. பார்க்கக் குமரியாகவும் பழகக் குழந்தையாகவும் இருக்கும் அவளை, பாலியல் விடுதி ஒன்றிலிருந்து மீட்டு வந்து, தன் உள்ளங்கைக்குள் பொத்தி வைத்துக் கண்களை இமை காப்பதுபோல் பாதுகாக்கிறான் சீனு. அவளது குழந்தையுள்ளம் அவனையும் குழந்தையாக்குகிறது. அவர்கள் இருவருக்கும் இடையில் துளிர்க்கும் களங்கமற்ற அன்பு, அவர்கள் வசிக்கும் மலைப்பகுதியின் பிரம்மாண்ட இயற்கையின் வெளியில், பனி படர்ந்து பூத்துச் சிரிக்கும் ஒரு சிறு தும்பைச் செடியைப்போல் காற்றில் சிலுசிலுக்கிறது. இவர்கள் இப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே என்று பார்வையாளர்கள் உருகிவிடுகிறார்கள். ஆனால், விஜியை அவன் இயற்கை மருத்துவரிடம் அழைத்துசெல்லும்போது தொடங்கும் கலவர உணர்ச்சி, விஜியைத் தேடி அவளது பெற்றோர் வந்துவிடும்போது இன்னும் அதிகமாகிறது. ஒருவேளை விஜியின் நினைவுகள் திரும்பிவிட்டால் இதுவரை அவளைப் பாதுகாத்த சீனுவை எப்படி எடுத்துக்கொள்வாள் என்று இதயம் படபடக்கையில் இறுதிக்காட்சி வந்துவிடுகிறது. சீனுவும் – விஜியும் வாழ்க்கையில் இணைந்துவிடப்போகிறார்கள்; இதோ அந்த அற்புதமான தருணம் வந்துவிடப்போகிறது என்று எண்ணிக்கொண்டிருந்தவர்களின் மனத்தில், கிட்டத்தட்ட தீயை அள்ளிக் கொட்டியதுபோல துடிக்கச் செய்துவிட்டது படத்தின் முடிவு.

ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவு

முழுவதும் குணமாகி, தற்போதைய நினைவுகள் விஜிக்கு முழுமையாகத் திரும்பிவிடுகின்றன. அதுவரை சீனுவுடன் மனத்தளவில் பால்யச் சிறுமியாக இருந்த விஜி இப்போது மறைந்துபோகிறாள். பெற்றோருடன் செல்வதற்காக விஜி ரயிலில் அமர்ந்திருக்கிறாள். அவள் அமர்ந்திருக்கும் பெட்டியை நெருங்க முடியாதபடி அந்த ரயிலில் பயணிக்கும் ஒரு அரசியல்வாதியைச் சுற்றிச் சூழ்ந்து நின்று கோஷம் போடுகிறது ஒரு கூட்டம். அந்தக் கூட்டம் உருவாக்கும் இரைச்சலின் விளிம்பில் நின்று “ விஜி… விஜி… சீனு விஜி….” என அழைக்கிறான். ஆனால், இப்போது சீனு அவளது நினைவில் இல்லை. அவள் குழந்தைமையுடன் இருந்தபோது அவளை மகிழ்விப்பதற்காகச் செய்த குரங்கு சேஷ்டைகளைப் பரிதவிப்புடன் செய்து காட்டுகிறான் சீனு. அப்போது சீனுவுக்கு மட்டுமல்ல; பார்வையாளர்களும் சீனுவின் சேஷ்டைகளைப் பார்த்து விஜி அவனை நினைவுக்குக் கொண்டுவருவாள் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இந்த இடத்தில் தர்க்கம் தன் கடமையில் உறுதியாக இருக்கிறது. இழந்த நினைவுகள் மீண்ட பிறகு பால்யத்தின் நினைவுகள் மனக்குகையின் அடியாழத்துக்குச் சென்று அவை மீட்க முடியாத நினைவுகள் ஆகிவிடலாம் என்ற ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்தை (valid reasoning), இந்த முடிவுக்குத் திரைக்கதாசிரியர் பாலுமகேந்திரா வழங்கியிருந்தார். அதனால்தான் “ விஜி… சீனு.. விஜி…” என்று உயிர்துடிக்கும் சீனுவைப் பார்த்து “பாவம்.. பைத்தியம்போல!” என்று பரிதாபப்பட்டு உணவுப் பொட்டலத்தைத் தூக்கிப்போட்டு சீனுவுக்கு அதிர்ச்சியளிக்கிறாள். நகர்ந்து செல்லும் ரயிலுக்கு இணையாக நொண்டியபடி ஓடிச்செல்லும் சீனு ரயில்நிலைய இரும்புத்தூணில் ‘நங்’ என்று மோதி கீழே விழும்போது அவன் நெஞ்சில் விழுந்த அடி, தங்கள் நெஞ்சில் விழுந்ததாகவே உணர்ந்து பார்வையாளர்கள் நிலைகுலைந்துபோய்க் கண்ணீர் வடிக்கிறார்கள். விஜி மீது அவர்களுக்குக் கோபம் வரவில்லை. அவள் குணமாகிவிட்டாள் என்ற நியாயமான காரணத்தால் தாங்கள் எதிர்பார்க்காத முடிவை கனத்த மனத்துடன் ஏற்றுக்கொண்டு கண்களைத் துடைத்தபடி திரையரங்கிலிருந்து வெளியேறுகிறார்கள். அடுத்த அத்தியாயத்தில் ‘த பர்சூய்ட் ஆஃப் ஹேப்பினெஸ்’ படத்தின் முதன்மைக் கதாபாத்திரமான கிறிஸ் கார்ட்னரின் வாழ்க்கைப் போராட்டத்தை அதன் முடிவை முன்வைத்து தர்க்கரீதியான முடிவு பற்றி மேலும் அறிந்துகொள்வோம்.

தொடர்புக்கு:

jesudoss.c@thehindutamil.co.in

SCROLL FOR NEXT