இந்து டாக்கீஸ்

கோடம்பாக்கம் சந்திப்பு: அஜித் ரசிகரின் படம்!

செய்திப்பிரிவு

அஜித் நடித்துவரும் ‘விஸ்வாசம்’ படத்தை அவருடைய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இதற்கிடையில் அஜித்தின் ரசிகரான கே.சி. பிரசாத் என்பவர், நடிகர் அஜித்தின்  பெருமைகளைக் கூறும் விதமாக ‘பில்லா பாண்டி’ என்ற படத்தைத் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் அஜித்தின் ரசிகராக, பிரபலப் படத் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சாந்தினியும் ‘மேயாத மான்’ இந்துஜாவும் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள்.

மேலும் ஒரு ‘பெருமாள்’!

சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது 'பரியேறும் பெருமாள்'. அந்தப் படத்தைப் போலவே பல உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் 'மனுசங்கடா' திரைப்படம் இன்று வெளியாகிறது. உலகத் திரைப்பட விழாக்கள் பலவற்றில் கலந்துகொண்டு பாராட்டு பெற்ற இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் தேசிய விருது பெற்ற இயக்குநர் அம்ஷன் குமார். கடந்த ஆண்டு கோவாவில் நடந்த சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘இந்தியன் பனோரமா’ பிரிவில் திரையிடப்பட்ட ஒரே தமிழ்ப் படம் இது. ராஜீவ் ஆனந்த், ஷீலா, மணிமேகலை, ஆனந்த் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தில் மறைந்த கவிஞர் இன்குலாப்பின் பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

‘பேட்ட’யில் இணைந்த பிரபலம்!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு தற்போது வாரணாசியில் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் ரஜினியுடன் ஏற்கெனவே விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் சசிக்குமாரும் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்.  உண்மையான சண்டக்கோழி!

உண்மையான சண்டக்கோழி!

விஷாலை வசூல் நாயகனாக ஆக்கிய படம் 2005-ல் வெளியான ‘சண்டக்கோழி’. அந்தப் படத்தின் சண்டைக்காட்சிகளில் அதிரடியாக நடித்ததற்காகவும் பாராட்டப்பட்டார் விஷால். ஆனால், விரைவில் வெளியாகவிருக்கும் ‘சண்டக்கோழி 2’ படத்தில் உண்மையான சண்டக்கோழி என்றால் அது வரலட்சுமி ஏற்றிருக்கும் கதாபாத்திரம்தான் என்கிறது இயக்குநர் வட்டாரம். விஷாலுக்கு இணையாக, அவருடைய தந்தையாக நடித்திருக்கும் ராஜ்கிரணுக்கும் படத்தில் சண்டைக்காட்சி அமைக்கப்பட்டிருந்தாலும் அதிரடியான கதாபாத்திரத்தில் வரும் வரலட்சுமி படத்தில் தனித்துத் தெரிவார் என்கிறார்கள். வரலட்சுமியும், “சண்டக்கோழி 2-ல் பல சவாலான காட்சிகளில் நடித்திருக்கிறேன். வெயிலில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்ததால் எனக்கு முகம் மற்றும் உடலின் நிறம் கறுத்துவிடும் அளவுக்குக் கடினமாக உழைத்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.ஹன்சிகாவின் ஆசிரமம்

ஹன்சிகாவின் ஆசிரமம்

மிக பிஸியான கதாநாயகியாக வலம் வந்துகொண்டிருந்த ஹன்சிகா, தற்போது கதாநாயகியை முதன்மைப்படுத்தும் கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத்  தொடங்கியிருக்கிறார். இவரது 50-வது படமாக உருவாகிவரும் ’மஹா’,  ‘துப்பாக்கி முனை’, ‘100’ ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் ஹன்சிகா தனது ஒவ்வொரு பிறந்தநாளின்போது ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால், தற்போது தத்தெடுப்பதை நிறுத்திவிட்டதாகக் கூறும் ஹன்சிகா, இதுவரை தத்தெடுத்த குழந்தைகளுக்காகப் பள்ளியுடன் கூடிய ஆசிரமம் ஒன்றை அமைக்க முடிவுசெய்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறாராம்.பாகுபலி வில்லனுடன்...  

பிரபுதேவா குங்ஃபூ மஸ்டராக நடித்துவரும் ‘எங் மங் சங்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. ஒரு இடைவெளிக்குப் பின் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் பிரபுதேவாவின் அப்பாவாக நடிக்கிறார் இயக்குநர் தங்கர்பச்சான். இவர்களுடன் ஆர்.ஜே.பாலாஜி, கும்கி அஸ்வின், காளிவெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளது. தற்போது ‘பாகுபலி’ படத்தின் வில்லன் பிரபாகர் இந்தப் படத்திலும் வில்லன் வேடம் ஏற்றிருக்கிறார். அர்ஜுன் எம்.எஸ். இயக்கிவரும் இந்தப் படத்துக்கு இசை அம்ரீஷ்.

SCROLL FOR NEXT