நடிகர் திலகத்தின் படப் பட்டியலில் வைரமாய் ஜோலிக்கும் கிளாசிக்குகளில் ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்துக்கு மாற்று கிடையாது. அந்தப் படம் வெளியாகி 50 ஆண்டுகள் கடந்தோடிவிட்டதை சிவாஜியின் ரசிகர்கள் கூட நம்பமாட்டார்கள். திரும்பத் திரும்ப தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் படமாகவும் யூடியூபில் அதிகம் பார்க்கப்படும் படமாகவும் உயிர்ப்பு குறையாமல் வலம் வந்துகொண்டிருக்கிறது.
பொன்விழா ஆண்டில் அடி எடுத்து வைக்கும் அந்த இசை, நடன, நடிப்புக் காவியத்துக்கு, அப்பாஸ் கல்சுரலும் ஒய்.ஜி.மகேந்திராவும் இணைந்து நவம்பர் 3-ம் தேதி சென்னையில் கோலாகல விழா ஒன்றை நடத்துகிறார்கள்.
சிவாஜியின் ரசிகர்களுக்கு மறக்கமுடியாத நிகழ்வாக இதை அமைக்கத் திட்டமிட்டிருக்கும் இந்தக் கூட்டணியுடன் ‘இந்து தமிழ்’ நாளிதழ் மீடியா பார்ட்னராக கரம் கோர்த்திருக்கிறது.
சென்னை தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் அமைந்துள்ள வாணி மஹால் அரங்கில், நவம்பர் 3-ம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்கி, இரவு 10 மணி வரை நான்கு மணிநேரக் கொண்டாட்டமாக இந்த நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.
சிவாஜி ரசிகர்களின் நினைவுகளைக் கிளறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில், ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகளைத் திரையிட இருக்கிறார்கள். அது மட்டுமல்ல; திரையிடப்படும் காட்சிகள் படமாக்கப்பட்டபோது நடந்த சம்பவங்களையும் அவற்றின் பின்னணியில் உள்ள சுவாரசியமான தகவல்களையும் ஒய்.ஜி.மகேந்திராவும், படத்தின் உருவாக்கத்தில் பங்குகொண்ட கலைஞர்கள் மற்றும் படக் குழுவினரும் பார்வை யாளர்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள்.
கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் உங்கள் காதுகளுக்கும் விருந்துண்டு. இசைக் காகவும் நடனத்துக்காகவும் கொண்டாடப்பட்ட ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தின் பாடல்கள் அனைத்தும் மேடையில் ‘லைவ் ஆர்கெஸ்ட்ரா’ கொண்டு இசைக்கப்பட இருக்கின்றன.
ஏ.ஆர்.ரஹ்மான் அழைப்பிற்காக வெயிட்டிங்! - 'சூப்பர் சிங்கர்' செந்தில் கணேஷ்