இந்து டாக்கீஸ்

சுதந்திர ‘பாகுபலி’

மிது கார்த்தி

இந்தியக் காப்பியங்களை நினைவூட்டிய கதையம்சத்துடன் வெளியானது ‘பாகுபலி’. ஆனால், இந்தியச் சுதந்திர வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு பாகுபலிக்கு இணையான பிரம்மாண்டத்துடன் வெளிவர உள்ளது ‘தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்’ (Thugs of Hindostan). சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

இந்திப் பட உலகின் சூப்பர் ஸ்டார்கள் அமிதாப்பச்சன், ஆமிர்கான் இணைந்து நடிக்கும் படம் இது. பட அறிவிப்பு 2016-ம் ஆண்டில் வெளியானபோதே படத்துக்கு எதிர்பார்ப்பு உருவானது. உண்மையான சரித்திரப் பின்னணி கொண்ட படமாக விஜய் கிருஷ்ண ஆச்சாரியா இயக்கியிருக்கிறார். பிரிட்டிஷ் கிழக்கிந்திய படைகளைத் தீரத்துடன் எதிர்த்து போர் புரியும் ஆசாத் கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்திருக்கிறார். பிரிட்டிஷ் படை வீரராக ஆமிர்கான் நடித்திருக்கிறார். கத்ரீனா கைஃப், பாத்திமா சனா ஷேக் ஆகியோர் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள்.

சுமார் 300 கோடி ரூபாய் செலவில் ‘பாகுபலி’ போல மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் ஒளிப்படங்கள் கடந்த மாதம் இணையத்தில் வைரலாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் படத்தின் ட்ரைலர் காட்சியைக் கடந்த வாரம் படக்குழு வெளியிட்டது. இணையத்தில் ட்ரைலர் காட்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஒரே நாளில் இரண்டரை கோடிப் பேர் இந்த ட்ரைலரை இணையத்தில் பார்த்திருக்கிறார்கள். அக். 3 நிலவரப்படி 5.12 கோடிப் பேர் பார்த்திருக்கிறார்கள்.

இணைய உலகைக் கலக்கிவரும் இந்தப் படம் வரும் தீபாவளி நாளில் திரைக்கு வருகிறது.

SCROLL FOR NEXT