அரைமனதாக ஜெயலலிதாவின் அம்மா சம்மதிக்க, முதன்மைக் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானார் ஜெயலலிதா. கதைப்படி மனநிலை குன்றிய இளம் கைம்பெண்ணாக நடித்த அவருக்கு வைத்தியம் செய்யும் டாக்டராக ஸ்ரீகாந்த் நடித்தார்.
ஸ்ரீகாந்தின் காதலியாக நடிக்க பொருத்தமான மற்றொரு இளம்பெண்ணத் தேடிக்கொண்டிருந்தது சித்ராலயா. அப்போது ஒரு பெண்ணின் புகைப்படம் சித்ராலயா நிறுவனத்தை நாடி வந்தது. அந்த பெண் மிக அழகாக இருந்தார். அவர்தான் ஹேமமாலினி.
இரண்டாவது கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
அடுத்து நகைச்சுவை கதாபாத்திரம் ஒன்றுக்காக மூர்த்தி என்ற இளம் வழக்கறிஞர் ஒருவர் ஸ்ரீதரைச் சந்தித்தார். கோபுவின் சிபாரிசு. மூர்த்தியை கோபுவுக்கு பிடித்து போனாலும், ஸ்ரீதர் அவரது முகத்தை பார்த்ததும் யோசிக்கத் தொடங்கினார். “உங்க முகம் ரொம்ப அழகா இருக்கே. நகைச்சுவை வேடத்துக்கு எடுபடுமா தெரியல. வேறு ஏதாவது ரோல் இருந்தால் சொல்லி அனுப்புறேன்'' என்று ஸ்ரீதர் சொல்ல, மூர்த்தி பதில் பேசாமல் திரும்பி சென்றார்.
வெளியே பத்தடி தூரம் நடந்துசென்றவர் திரும்ப வந்து, ஸ்ரீதரின் அறைக்கதவைத் திறந்து தலையை மட்டும் நீட்டி.“என்னோட அழகான முகமே எனக்கு வில்லனாக மாறும்னு எதிர்பார்க்கல.'' என்று ஒரு வசனத்தைச் சொல்ல, அப்போது மூர்த்தியின் பாடி லாங்குவேஜை கவனித்த ஸ்ரீதருக்கு அந்தக் கணமே அவரைப் பிடித்து போய்விட்டது. அன்றே மூர்த்தி ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னாளில் ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி என்ற பெயரில் பிரபலமானார்.
ஜெயலலிதாவின் திறமை
‘வெண்ணிற ஆடை’யின் படப்பிடிப்பு மதுரை வைகை அணையில் தொடங்கியது. விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்த ‘கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்ல சொல்ல’ என்ற பாடல் காட்சியில்தான் முதலில் நடித்தார் ஜெயலலிதா. வைகை அணைக்கு உல்லாச பயணம் வந்திருந்த பயணிகள், அக்கம்பக்கத்து கிராம மக்கள் என்று ஆயிரம்பேர்வரை கூடிவிட்டார்கள்.
அவ்வளவு பெரிய கூட்டத்துக்கு நடுவே கூச்சம் துளியும் இன்றி, டான்ஸ் மாஸ்டர் சொல்லித்தந்த அசைவுகளை சரியான வேகத்தில் ஆடி, நாகரா சாதனத்தில் ஒலிக்கும் பாடல்வரிகளுக்கு மிகத்துள்ளியமாக வாயசைத்து ஒரே டேக்கில் ஓகே செய்தார். பாடல் காட்சிதான் என்றில்லை, வசனக்காட்சியில் இன்னும் ஷார்ப்! கோபுதான் அவருக்கு வசனங்களைப் படித்து காட்டுவார்.
அதை ஒருமுறை மட்டும் கவனமாக கேட்கும் ஜெயலலிதா, ஏற்ற இறக்கம், மாடுலேஷன் என எதுவும் மிஸ் ஆகாமல் பேசி நடித்து அசத்திவிடுவார். முதல்நாள் படப்பிடிப்புக்கு எப்படி வந்தாரோ, அப்படியேதான் கடைசிநாள்வரை வந்து, தான் தேர்ந்துகொண்ட கலைத்தொழிலுக்கு முழு சிரத்தையுடன் இருந்தார்.
ரத்தான ஒப்பந்தம்
வைகை அணைப் பாடல்காட்சிக்குப்பின் வசனக் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டன. பின்னர் ஹேமமாலினியை வைத்து ஒரு டூயட் பாடல் காட்சி எடுக்கப்பட்டது. ஸ்ரீதருக்கு ஏனோ மனதில் ஒரு சஞ்சலம். “கோபு, எடுத்தவரைக்கும் ஒரு ரஷ் பார்க்கணும், ஏற்பாடு செய்” என்றவுடன் திகைத்துப்போனார் கோபு. ஸ்ரீதர் என்றுமே இம்மாதிரி கேட்டதில்லை.
ரஷ் பார்த்த ஸ்ரீதருக்கு பகீர் என்றது. ஹேமமாலினி அழகாக இருந்தாலும் ஒட்டடைக்குச்சிபோல மிகவும் ஒல்லியாக தெரிந்தார். லாங் ஷாட்களில் அவரது உருவம் சிரிப்பை வரவழைத்தது. படத்தைப் பார்த்த பல வியாபார முக்கியஸ்தர்கள், “என்ன இவர் இவ்வளவு ஒல்லியாக இருக்காரே'' என்று கமெண்ட் அடிக்க ஸ்ரீதர் குழம்பி போய் விட்டார். அவ்வளவுதான், “கோபு, அந்தப் பெண்ணை கேன்செல் செய்து திருப்பி அனுப்பிடு'' என்று கூலாகச்சொல்லிவிட்டுப் போய்விட்டார் ஸ்ரீதர்.
திரண்டு வந்த கோபத்தை அடக்கிக்கொண்டார் கோபு. “அக்ரிமெண்ட்ல கையெழுத்துப்போடுறது நீ. கேன்சலுக்கு மட்டும் நானா” என்று கோபு கேட்க, “நீதாண்டா இதை ஹேண்டில் பண்ணுவே” என்று தோளில் தட்டிக்கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.
மறுநாள் படப்பிடிப்பில் மகிழ்ச்சிபொங்கும் முகத்துடன் மே-அப் போட்டுக்கொண்டிருக்கும் ஹேமமாலினியை நோக்கிச் சென்றார். அவரது பக்கத்திலேயே அமர்ந்து மகளுக்கான மேக் -அப் திருத்தங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார் அம்மாவான ஜெயா சக்ரவர்த்தி. அவர் முன்பாக போய் அமர்ந்த கோபுவைப் பார்த்ததுமே ஏதோ பிரச்சினை என்பதைப் புரிந்துகொண்ட ஜெயா சக்ரவர்த்தி, “என்ன கோபு சார்?” என்றார்.
நடந்த விஷயத்தைக் கோபு சொல்ல,ஜெயா சக்கரவர்த்தி ஆக்ரோஷத்துடன் கோபுவை பார்த்தார். “யு ஹவ் வேஸ்டட் அவர் டைம்'' என்று மட்டும் கூறி விட்டு, விருட்டென்று மகளை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார். ஆனால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்திப் படவுலகம் தனது சிவப்புக் கம்பளத்தை விரித்து அவரை வரவேற்று, கனவு கன்னியாக முடிசூட்டியது.
இவர் போய் அவர் வந்தார்
பின்னர் ஒருமுறை இதே ஹேமமாலினியைச் சந்தித்துக் கால்ஷீட் கேட்பதற்காக ஸ்ரீதரும் கோபுவும் மும்பையில் அவரது வீட்டுக்குச் சென்றனர். ஜெயா சக்கரவர்த்தியின் கோபமான முகம் கோபுவின் மணக்கண்ணில் நிழலாடியது. அவர் வளர்க்கும் கன்றுக்குட்டி உயர நாய்களை இவர்கள் இருவரின் மீதும் அவர் ஏவி விடுவதுபோல் நினைத்துப் பார்த்து கொண்டார் கோபு.
ஆனால், ஜெயா சக்கரவர்த்தியும் ஹேமமாலினியும் இருவரையும் அன்போடு வரவேற்று உபசரித்தனர். ‘இந்தியில் மிகவும் பிஸியாக இருப்பதால், தமிழ்ப் படங்களை இப்போதைக்கு ஒப்புக்கொள்ள முடியாது என்று ஹேமா கூறிவிட்டார். கிளம்பும்போது, ஜெயா மட்டும் கோபுவின் காதருகில் வந்து கிசுகிசுத்தார். “கோபு சார்.. இப்ப என்னோட பெண் ஒல்லியா இல்லையே? '' என்றார். கோபுவுக்கு சுருக்கென்று தைத்தது.
‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் முதலில் நடிக்க வைத்து, பள்ளி மாணவிபோல் இருக்கிறார் என்று சில நாள் படப்பிடிப்புக்குபின் நீக்கப்பட்ட சாந்தி என்ற நிர்மலாதான் ஹேமமாலினி ஒப்பந்தம் செய்யப்பட்ட டாக்டரின் காதலி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப்பட்டார். இவரது பெயருக்கு முன்னாளும் பின்னர் ‘வெண்ணிற ஆடை’ ஒட்டிக்கொண்டது.
தணிக்கையில் சிக்கல்
‘வெண்ணிற ஆடை’ படத்துக்கு யாரும் எதிர்பாராத வண்ணம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கிவிட்டது மண்டல தணிக்கைக் குழு. மனநிலை பாதிக்கப்பட்ட கதாநாயகி, தனக்கு மருத்துவம் பார்க்கும் டாக்டரிடம் தனது ரவிக்கையின் ஹூக்கை மாட்டிவிடச் சொல்வார்.
இந்த காட்சி இடம்பெற்றதால் ஏ சான்றிதழ் கொடுத்து விட்டார்கள். “ஹூக்கை அவிழ்த்தாதான் தப்பு. ‘ஏ’ சர்டிஃபிகேட் கொடுக்கலாம். நம்ம ஹீரோ மாட்டத்தானே செய்யறான்?'' ஸ்ரீதர் கேட்டார். “விட்டு தள்ளு, ஸ்ரீதர் கூட அடல்ட்ஸ் ஒன்லி படம் எடுத்தார்னு சொல்லிக்கலாம்.” என்றார் கோபு. ‘ஏ’ சான்றிதழ் கொடுத்தும் படம் ஹிட்!
ஜெயலலிதா பார்க்க முடியாத படம்
வழக்கம் போல் இந்த படத்துக்கும் ஸ்ரீதர் ப்ரிவியூ காட்சி வைக்கவில்லை. அதனால் தனது பதினெட்டு வயது வரை ஜெயலலிதாவால் இந்தப் படத்தை பார்க்க முடியுவில்லை. தனது கான்வெண்ட் தோழிகளுடன் தான் நடித்த முதல் தமிழ் படத்தை காண ஒரு திரை அரங்குக்குச் சென்றபோது கதாநாயகியான ஜெயலலிதாவை திரையரங்க நிர்வாகம் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
மகள் ஏமாந்துவிடவேண்டாம் என்று அம்மா சந்தியா ஒரு ப்ரிவியூ காட்சிக்கு ஏற்பாடு செய்தார். ஆனால் அதற்கு ஜெயலலிதா மட்டும் படத்தைக் காண மறுத்துவிட்டார். “சட்டப்படி எனக்குப் பதினெட்டு வயது ஆனபிறகு படத்தைப் பார்த்துக்கொள்கிறேன்” என்று கூறிய ஜெயலலிதா இதை அவர் அளித்த பேட்டி ஒன்றில் நினைவு கூர்ந்திருக்கிறார். ‘வெண்ணிற ஆடை’ படத்தை பார்ப்பதற்கு முன்பாக ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் வெளியாகி அவர் பிரபலக் கதாநாயகி ஆகியிருந்தார். இந்தப் படத்துக்குப் பின் கோபுவின் வாழ்க்கையிலும் ஒரு திருப்புமுனை வந்தது.
(சிரிப்பு தொடரும்)
தொடர்புக்கு: tanthehindu@gmail.com
படங்கள் உதவி: ஞானம்