“அடுத்த விநாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகில் ஏராளம். உங்களைச் சந்தித்ததுகூட அப்படிப்பட்ட ஓர் ஆச்சரியம்தான். ஆச்சரியம் நிறைந்த இந்த உலகத்தின் மேல் நம்பிக்கை வைத்துப் பயணிக்கிறேன்.” இது ‘அன்பே சிவம்’ படத்தின் இறுதியில் நாயகன் சிவம் எழுதிய கடிதத்தின் வரிகள்.
பயணங்கள் படைப்பாளிக்கு தரும் கதைகளும் கதை மாந்தர்களும் அறியாத புதிய இடங்களும் புனைவை விட ஆச்சரியம் அளிப்பவை. பயணம் சம்மந்தப்பட்ட படங்கள் இந்திப் படவுலக்கு புதிதல்ல. ‘நவ் தோ க்யாரா’, ‘பாம்பே டு கோவா’ என அந்தக் காலம் முதல் ‘தில் சாத்தா ஹை’, ‘ஹைவே’, ‘ஜப் வீ மெட்’, ‘பிக்கு’என இந்தக்காலம் வரை சுவாரசியமான பட்டியல் உண்டு.
இன்னொரு விதத்தில், தென்னிந்தியாவிலிருந்து பாலிவுட்டுக்கு பயணப்படும் நடிகர்களின் பட்டியலும் முடிவில்லாதவை. இம்முறை அப்படிப் படையெடுத்திருப்பவர் மலையாள முன்னணி நடிகர் துல்கர் சல்மான். அற்புதக் கலைஞன் இர்பான் கான் உடன் அவர் சேர்த்து நடித்து வெளிவந்துள்ள படம்தான் ‘கார்வான்’.
மனமாற்றம் தரும் நிகழ்வுகள்
புகைப்படக் கலையில் இருந்த ஈடுபாட்டைத் தொலைத்துவிட்டு, சலிப்பானதொரு கணினி வேலையிலிருக்கிறார் அவினாஷ். ஒரு நாள், அதிகம் நெருக்கமில்லாத அவன் தந்தையைப் பற்றிய ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அதைத் தொடர்ந்து அவினாஷுக்கு நேரெதிர் குணாதிசயம் கொண்ட அவனது நண்பன், வாடகைக்கார் தொழில் நடத்தும் ஷவுக்கத்தோடு மேற்கொள்ளும் பயணமும் அந்தப் பயணத்தில், இன்னொரு முரணான கல்லூரி மாணவி தான்யா சேர்வதும், அவர்கள் செல்லும் இடங்களும் சந்திக்கும் மனிதர்களும் வழியில் நிகழும் சுவாரசியமான சம்பவங்களும் அவை தரும் மனமாற்றங்களும்தான் கதை.
கதாபாத்திரங்களாக மாறி..
ஊட்டி மலைச்சரிவில் செல்லும் பேருந்தில் அறிமுகமில்லாத இரு வயதானவர்களின் உரையாடலில் தொடங்கி வெவ்வேறு விதமான பயணங்களில் கதை ஒரு நதிபோல பயணிக்கிறது. படத்தின் முதல் ஆச்சரியம், மலையாள வாடை அதிகம் கலக்காமல் வெகு இயல்பாக இந்தியில் பேசி அவினாஷ் கதாபாத்திரத்தின் இறுக்கத்தை அழகாக வெளிப்படுத்தியிருக்கும் துல்கர் சல்மானை பூங்கொத்துக் கொடுத்து பாலிவுட் வரவேற்கும். அபிஷேக் பச்சன் விலகியதால் துல்கருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துவிட்டது. திரையில் தோன்றிய சில விநாடிகளிலேயே அவரது கதாபாத்திரத்தை நமக்கு உணர்த்திவிடுகிறார் ஆற்றல் மிக்க நடிகரான இர்பான்.
துள்ளலும் எள்ளலும் கலந்த கல்லூரி மாணவி கதாபாத்திரத்தில் மிதிலா பால்கர் உணர்வு பூர்வமாக கலந்துவிடுகிறார். அமலா அக்கினேனி( ஆம் அவரே தான்!) கீர்த்தி கர்பன்டா, மற்றும் அவினாஷின் அப்பாவாக ஆகாஷ் குரானாவும் தேர்ச்சிமிக்க நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
பிரதிக், அனுராக், இமாத் இவர்களின் இசை, பயணத்தையும் உணர்வுகளையும் பதிய வைத்த அவினாஷ் அருணின் ஒளிப்பதிவு படத்தின் மற்றொரு முக்கிய கதாபாத்திரம் போல் பங்காற்றியிருக்கிறது. பிரபல மலையாள இயக்குநர் பிஜோய் நம்பியார் எழுதிய கதை. அதற்கு ஆகர்ஷ், ஆதிர் பட் ஆகிய இருவர் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். ஹுசைன் தலால் உரையாடல் எழுதியிருக்கிறார். திரைக்கதையின் வேலைகளை இப்படிப் பிரிந்துகொண்டதால் இயக்குநர் ஆகர்ஷ் குரானாவின் வேலை எளிதாகி இந்தப் படம் முழுமை அடைகிறதோ என்று எண்ண வைக்கிறது.
ஓர் எளிமையான ஓவியம் போல மென் உணர்வுகளை இந்தப் படம் எளிதாகப் பார்வையாளர்களுக்கு கடத்திவிடுகிறது. கார்வான் என்னும் உருதுச் சொல்லுக்கு கூட்டமாகப் பயணிப்பவர்கள் எனவும் ஒரு பொருள் உண்டு. இவர்கள் பயணிக்கும் வேனின் மேல் இந்தி பாடலாசிரியர் மஜ்ரு
சுல்தான் பூரியின் வரிகளான ‘என் பயணம் தனியாகத் தொடங்கியது; ஆனால் மேலும் பலரும் வழியில் சேர, அது ஒரு யாத்திரையாக மாறியது” எழுதப்பட்டிருக்கிறது. இந்த மெல்லிய, அழகான படத்தின் பயணம் நமக்குச் சொல்வதும் அதையேதான்.
தொடர்புக்கு: tottokv@gmail.com