இந்து டாக்கீஸ்

அஞ்சலி: படைப்பாளிக்குள் ஒரு போராளி

ஆர்.சி.ஜெயந்தன்

பத்திரிகைப் பணிதான் கலையுலகில் அடிவைக்கக் கலைஞருக்கு முதல் படிக்கட்டாக அமைந்தது. தனது ‘நெஞ்சுக்கு நீதி’ நூலில் திரையில் தாம் நுழைந்த தருணத்தை கலைஞர் இப்படி நினைவு கூர்ந்திருக்கிறார்.

 “ஓராண்டு காலம் ’குடியரசு’  அலுவலகத்தில் பணியாற்றி, பெரியாரிடம் கல்வி கற்கும் மாணவனாக இருந்தேன். அதற்குப் பிறகு கோவையிலிருந்து எனக்கு ஒரு அழைப்பு. திரைப்படத்துக்கு வசனம் எழுத வேண்டும் என்ற அழைப்பு. அதை அனுப்பியவர் இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி. என்னுடைய நண்பர் துணையுடன் கோவை சென்று சாமியைச் சந்திந்தேன். ‘கோவை ஜுபிடர் நிறுவனம் எடுக்கவிருக்கும்  ‘ராஜகுமாரி’ என்ற படத்துக்கு வசனம் எழுத வேண்டும்’ என்றார்.

இதை உடனடியாக பெரியாரிடம் தெரிவித்தேன். “போய் வா” என்று விடைகொடுத்தார்.” - இப்படி நீண்டு செல்கிறது கலைஞரின் முதல் திரையுலக அனுபவம். அந்தப் படத்தின் பாட்டுப் புத்தகத்தின் பழைய பிரதியை இப்போது புரட்டிப் பார்த்தால் அதில்,  ‘கதை, வசனம், டைரக்‌ஷன்’ ஏ.எஸ்.ஏ.சாமி பி.ஏ., ஹானர்ஸ் என்றும் ‘உதவி ஆசிரியர்’ – மு.கருணாநிதி என்றும் அச்சிடப்பட்டிருக்கிறது.

அதுவரை சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துவந்திருந்த எம்.ஜி.ராமச்சந்தர், கலைஞரின் வசனத்தில் முதன்முதலாகக் கதாநாயகன் ஆன படம்தான் 1947-ல் வெளியான ‘ராஜகுமாரி’. அதையடுத்து, எம்.ஜி.ஆர். சிறிய வேடத்தில் நடித்த ‘அபிமன்யு’ படத்துக்கும் கலைஞர் வசனம் எழுதியிருந்தார். படத்தில் துரோணாச்சாரியாரை குறிப்பிடும் வகையில், அன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்ப “அங்கேதான் இருக்கிறது ஆச்சாரியாரின் விபீஷண வேலை’’ என்பதுபோன்ற அரசியல் பொடிகளை கலைஞர்  ஆங்காங்கே தூவியிருப்பார்.

anjali 2jpg

அந்தப் படத்திலும் வசனம் - கருணாநிதி என்ற பெயர் இடம்பெறவில்லை.  இதுபோன்ற பல இருட்டடிப்புகளை எல்லாம் நீந்திக் கடந்து வெற்றி பெற்ற எழுத்துப் போராளி கலைஞர்!

‘ராஜகுமாரி’ படத்தில் மந்திரவாதி ஆலகாலனால் ஜாலத் தீவுக்குத் தூக்கிச் செல்லப்படுகிறாள் ராஜகுமாரி மல்லிகா. அவளை மீட்கப் புறப்படும் கட்டழகன் சுகுமாரனாக எம்.ஜி.ஆர்! வழியில் சர்ப்பத்தீவின் ராணி விஷாராணியிடம் மாட்டிக்கொள்கிறார். அப்போது விஷாராணி, “காலையிலே ஜாலத் தீவுக்குப் போக கப்பல் தருகிறேன், இன்றிரவு நீ என்னை காமக் கப்பலில் ஏற்றிக்கொண்டு போ” என்கிறாள்.

விஷாராணி பேசும் இந்த ஒரு வசனம் அந்தக் கதாபாத்திரத்தின் குணத்தை மொத்தமாகச் சொல்லிச் சென்றது. கலைஞர் இந்தப் படத்துக்கு வசனம் எழுதியபோது 23 வயது இளைஞர். இதே துடிப்பான இளைஞர்தான் திரைப்படம் எனும் ஊடகம் பாடல்களால் நிரம்பிக் கிடந்த காலத்தில் வசனங்களால் அதை மடைமாற்றினார்.  ‘ராஜகுமாரி’க்கு கலைஞர் பேனா பிடிக்கும் பத்தாண்டுகளுக்கு முன்னர் 1937-ல் வெளிவந்தது ‘அம்பிகாபதி’.

அந்தப் படத்தின் மூலம் திரைப்பட வசனத்தைச் செம்மைப்படுத்தி சீர்செய்யும் வேலையை வசனகர்த்தா இளங்கோவன் தொடங்கிவிட்டாலும் கலைஞருக்குப் பிறகே திரைத் தமிழ், பாமர மக்களுக்கும் புரியும்விதமாகப் பகுத்தறிவைப் பேசியது. வரலாற்றுக் கதைகளின் வசனங்களில் சமகாலத்தின் சமூகத்தைப் பிரதிபலித்தது. சாமானியர்களாகிய குடிமக்களைப் பற்றிக் கவலைப்பட்டது.

கதை, வசனத்துக்குக் கௌரவம்!

மாடர்ன் தியேட்டர்ஸில் கலைஞர் நுழைந்த பிறகு டி.ஆர்.எஸ் தேர்ந்தெடுத்த கதைகள் கலைஞரின் வசனத்தால் காவியங்களாக மாறிய சாதனைகள் நிகழ்ந்தன. தமிழ் சினிமாவில் அதுவரை இல்லாதபடி நெருக்கமான காதல் காட்சிகளை ‘பொன்முடி’ படத்துக்காகப் படமாக்கியிருந்தார் எல்லிஸ் ஆர்.டங்கன். எடுத்தவரை அதைப் போட்டுப்பார்த்த டி.ஆர்.சுந்தரத்துக்குத் திருப்தியில்லை. பின்னால் இன்னும் கொஞ்சம் கதையைச் சேர்க்கலாம் என்று முடிவுசெய்தார் சுந்தரம். அந்த நேரத்தில் கவி.கா.மு.ஷெரீப்பின் பரிந்துரையுடன் மாடர்ன் தியேட்டர்ஸில் அடியெடுத்து வைத்தார் கலைஞர்.

‘பொன்முடி’ படத்தின் பின்பகுதி கதையை எழுதும்படி கலைஞரிடம் சுந்தரம் கேட்டுக்கொள்ள, அவரும் எழுதிக்கொடுத்தார். அதுதான் ‘பொன்முடி’யில் ‘கபாலிகர்கள்’ வரும் பகுதி. கலைஞர் கூடுதல் கதையை எழுதி சத்தூட்டியதால் படம் வெற்றிபெற்றது. அதன்பிறகு மாடர்ன் தியேட்டர்ஸில் ரூபாய் ஐநூறு மாதச் சம்பளத்தில் வசனம் எழுத நியமிக்கப்பட்டார் கலைஞர்.

அது மட்டுமல்ல. ஒரு திரைப்படத்தின் எழுத்தாளனே தலையானவன் என்ற கௌரவத்தையும் மாடர்ன் தியேட்டர்ஸில் பெற்றுக்கொடுத்த திரை ஆளுமையாகத் தனது 26-ம் வயதிலேயே விஸ்வரூபம் எடுத்தார்..

பழம்பெரும் காவியமான குண்டலகேசியைத் தழுவி கலைஞர் எழுதியிருந்த நாடகம்தான் ‘மந்திரிகுமாரி’. அதை தேவி நாடக சபா கும்பகோணத்தில் நடத்திக்கொண்டிருந்தபோது, அதை டி.ஆர்.சுந்தரம் பார்க்கும்படி செய்தார் கவி.கா.மு.ஷெரீப். அதைப் படமாக்க முடிவு செய்துவிட்ட சுந்தரம் அதற்குத்  திரைக்கதை, வசனம் எழுதும்படி கலைஞரைக் கேட்டுக்கொண்டார். பட முதலாளிகளைக் கண்டு நடிகர்களே அஞ்சும் அந்தக் காலகட்டத்தில் கலைஞர் கம்பீரமாக சுந்தரத்திடம் ஒரு நிபந்தனை விதித்தார்.

“நான் உரையாடல் எழுத வேண்டும் என்றால் எம்.ஜி.ஆர். முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்க வேண்டும்” என்பதுதான் அந்த நிபந்தனை. அதைத் தட்டாமல் ஏற்றுக்கொண்டார் சுந்தரம். சினிமா வரலாற்றில் முதன்முறையாக ‘மந்திரிகுமாரி’ படத்தின் போஸ்டரில் கதை வசன கர்த்தாவுக்கு இடங்கொடுக்கப்பட்டது. ‘கதை, வசனம்’ மு.கருணாநிதி என்று அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டது. கலைஞர் மாடர்ன் தியேட்டர்ஸில் நுழைந்தபின் எழுத்தாளனுக்கு உரிய கௌரவம் மட்டுமல்ல, அங்கே வசனப் புரட்சியும் தொடங்கிவிட்டது.

“சிங்கங்கள் உலாவும் காட்டிலே சிறுநரிகள் திரிவதுபோல இன்று நம் நாட்டைச் சுற்றி அலைகிறது ஒரு சோதாக் கும்பல். எண்ணிக்கையிலே குறைந்த அந்த இதயமற்ற கூட்டம் வஞ்சகத்தால் வாழ்கிறது. நிரபராதிகளின் சொத்துகளைச் சொந்தமாக்கிக் கொள்கிறது. அனாதைகளின் ரத்தத்தை அள்ளிக் குடிக்கிறது. நாட்டிலே ஆட்சி நடக்கிறதா என்று கேள்வி கிளம்புகிற அளவுக்கு அவர்களின் அட்டகாசம்.. இனியும் பொறுமையில்லை… அந்தக் கொள்ளைக் கூட்டத்தை விட்டுவைக்க இனி உத்தேசமுமில்லை. கொதித்துக் கிளம்புங்கள்” - ‘மந்திரி குமாரி’யில் தளபதி வீரமோகனாக எம்.ஜி.ஆர். கர்ஜிக்கும் இந்த வசனம் இன்றைய நாட்களுக்கும்கூட எப்படிப் பொருந்திப்போகிறது!

விட்டுக்கொடுக்காத கலைஞர்!

கலைஞர் விதித்த நிபந்தனை ஒருபக்கம் இருந்தாலும் ‘மந்திரிகுமாரி’க்கு யாரைக் கதாநாயகனாகப் போடுவது என்னும் சர்ச்சை இயக்குநர் டங்கனால் திடீரெனத் தலைதூக்கியபோது, எம்.ஜி.ஆர். ஜுபிடர் பிக்சர்ஸ் படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் கலைஞரின் எழுத்தில் உருவாகிவந்த ‘மருதநாட்டு இளவரசி’ படத்தில் அவர் நடித்துக்கொண்டிருந்தார். அந்தப் படத்துக்கு எழுதி முடித்த பிறகே சேலம் வந்த கலைஞர், எம்.ஜி.ஆரின் தாடையில் இருக்கும் அழகான குழி இயக்குநர் டங்கனுக்குப் பிடிக்கவில்லை என்ற காரணத்தைக் கேட்டு அதை ஏற்க மறுத்தார்.

பிறகு எழுத்தாளர், இயக்குநர் ஆகிய இருவரையுமே சமாதானம் செய்யும்விதமாக எம்.ஜி.ஆரின் தாடையில் இருந்த அழகான குழியில் சிறிய தாடியை ஒட்டிக்காட்டி பிரச்சினையை முடித்தார் சுந்தரம். தன் நண்பரை விட்டுக்கொடுக்காத எழுத்தாளர் கலைஞரின் ஆளுமைக்கு மாடர்ன் தியேட்டர்ஸ் எனும் மாபெரும் நிறுவனத்தில் கிடைத்த வெற்றி இது.

முழுமையான திரைக்கதை

வசனங்களோடு மட்டும் கலைஞர் நின்றுவிடவில்லை. நடிப்பைப் பற்றியும் கேமரா கோணங்கள் அவற்றின் நகர்வுகள், காட்சியின் சூழ்நிலை விவரிப்பு ஆகியவற்றையும் வசனத் தாள்களின் ‘மார்ஜின்’பகுதியில் எழுதுவதை வழக்கமாக்கிக்கொண்டார். இப்படி முழுமையான திரைக்கதை எழுதுவதில் கலைஞருக்கு இருந்த தேர்ச்சியைக் கண்ட டி.ஆர்.சுந்தரம் அதைப் பாராட்டினார். கதை, வசனம் எழுதியதுடன் எழுத்தாளனின் வேலை முடிந்துவிட்டது என்று வீட்டில் இருந்துவிடாமல் ‘மந்திரிகுமாரி’ படத்தின் படப்பிடிப்பு நடக்கும் தளத்துக்கு இயக்குநரின் அனுமதியுடன் செல்லும் பழக்கத்தை உருவாக்கிக்கொண்டார்.

அதற்குக் காரணம் தனது வசனம் வேறு யாராலும் கூட்டவோ குறைக்கவோ படக்கூடாது என்ற தவிப்பு. அதன் முழுமை குலைந்துவிடக் கூடாது என்ற கவலை. ‘மந்திரிகுமாரி’ படப்பிடிப்பில் பல காட்சிகளில் இயக்குநர் கேட்டுக்கொண்டபடி ‘ஸ்பாட்’டிலேயே வசனங்களைக் குறைத்தும் நீட்டியும் கொடுத்தார். நடிகர்களுக்கு வசனத்தை வசனகர்த்தாவே ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுவதிலும் ஈடுபாடு காட்டினார். வசனத்தை ஏற்ற இறக்கத்தோடு பேசும்போது நடிப்பு தானாக வந்துவிடும் என்ற எண்ணத்தை இயக்குநர்களுக்குப் புரியவைத்தார்.

வசன கர்த்தா படப்பிடிப்புத்தளத்துக்கு வருவதும் வசனம் சொல்லிக்கொடுப்பதுமான வழக்கம் அதன் பிறகுதான் தமிழ் சினிமாவில் இடம்பிடித்தது. கதை, வசன கர்த்தாதான் ஒரு படத்தின் அடிப்படை என்பதை இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் கலைஞர் புரிய வைத்தார்.

‘மந்திரிகுமாரி’யின் வெற்றி எம்.ஜி.ஆருக்கு மட்டுமல்ல, எம்.என். நம்பியாருக்கும் பெரும் திருப்பத்தைக் கொண்டுவந்து சேர்த்தது. கலைஞரின் கலைவாழ்வும் ‘மந்திரிகுமாரி’யால் உயர்ந்தது. அவர் எழுதும் படங்களின் வசனப் புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் விற்றுத் தீர்ந்தன. பாட்டுப் புத்தகங்கள் மட்டுமே என்றிருந்த சந்தையில் கலைஞரின் திரைப்பட வசனப் புத்தகங்கள் பெரும் கருத்துப் புரட்சியாக மாறின.

‘பராசக்தி’ எனும் திராவிடத் திரைப்படம் அதை அரசியல் சக்தியாக மாற்றும் ஆச்சரியத்தை நிகழ்த்தியது. அதன்பின் கலைஞர் எனும் படைப்பாளிக்குள் இருந்த போராளி முழுவீச்சில் வெளிப்பட்டு நின்றது கலைஞரின் வாழ்க்கை வரலாற்றுடன் இணைந்த திரைப்பட வரலாறு! 

படங்கள் உதவி:ஞானம்

SCROLL FOR NEXT