லிங்குசாமி இயக்கத்தில் விஷால், ராஜ்கிரண் ஆகியோருடன் கீர்த்தி சுரேஷ் நடித்துவந்த ‘சண்டக்கோழி 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. வழக்கமான கமர்சியல் கதாநாயகி கதாபாத்திரம் என்றில்லாமல் இதில் கீர்த்தி சுரேஷை வைத்துத்தான் கதையை நகர்த்துகிறார் இயக்குநர். படப்பிடிப்பு முடிந்ததும் வழக்கமாக கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடுவது வழக்கம். ஆனால் கடைசிநாள் படப்பிடிப்பில் படக்குழுவில் இடம்பெற்ற 150 பேருக்கும் தலா ஒரு கிராம் தங்க நாணயம் கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். “ குழுவினர் அனைவரும் உங்களுக்குத் தங்கமான மனசு” என்று வாழ்த்தியிருக்கிறார்கள்.
இசைப்புயலின் தேடல்
தற்சமயம் ரஜினியின் ‘2.0’, பின்னணி இசைக் கோர்ப்பு, விஜயின் ‘சர்கார்’, மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’, சிவகார்த்திகேயன் நடிக்கத் தொடங்கியிருக்கும் அறிவியல் புனைவுப் படம் என ஏ.ஆர்.ரஹ்மானின் கைவசம் வரிசையாகப் பல படங்கள் உள்ளன. இதில் ‘2.0’ படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகின்றன. இத்தனை பிஸிக்கு நடுவிலும் ‘இசைப்புயல்’ என்ற பட்டத்துக்கு ஏற்ப இந்தியா முழுவதும் பல மாநிலங்களுக்குப் பயணித்து, சிறந்த இசைக் கலைஞர்கள் பலரைத் தேடிக் கண்டடைந்து, அவர்களைச் சந்தித்து, அவர்களுடன் இணைந்து இசையை வாசித்தும் சுவாசித்தும் கொண்டாடித் தீர்த்திருக்கிறார் ரஹ்மான். ஸ்ருதி ஹரிஹர சுப்ரமணியம் இதை மியூசிக் வீடியோ சிரீஸாக இயக்கியிருக்கிறார்.
தற்போது பிரபலமைந்துவரும் டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் சந்தைகளில் ஒன்றான அமேசானில் ப்ரைம் வீடியோ பிரிவில் மியூசிகல் சீரிஸாக இதை கவிதாலயா நிறுவனம் வழங்கத் தொடங்கியிருக்கிறது. ‘ஹார்மோனி வித் ஏ.ஆர்.ரஹ்மான்’ என தலைப்பில் நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த சீரிஸ், ரஹ்மான் ரசிகர்களுக்கு மாறுபட்ட இசைவிருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியின் பாராட்டு!
நேசம் முரளி இயக்கியிருக்கும் ‘கபிலவஸ்து’ என்ற படத்தை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு பிரத்தியேகமாக திரையிட்டுக் காட்டியிருக்கிறார்கள். திரைப்படத்தைப் பார்த்த அவர் “சாலையோர மக்களின் வாழ்க்கையை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது. இந்திய சினிமாவில் இது ஒரு புதிய முயற்சி” என்று இயக்குநர் உள்ளிட்டப் படக்குழுவைப் பாராட்டியிருக்கிறார்.
பெற்றோர்களுக்காக...
பாடலாசிரியர் பா.விஜய் தனது ‘வில் மேக்கர்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பில் எழுதி, இயக்கி, தயாரித்து நடித்துள்ள படம் ‘ஆருத்ரா’. விரைவில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்துக்கு இசை வித்யாசாகர். சமீபத்தில் நடந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பா.விஜய் படம் குறித்துப் பேசும்போது, “கருவறைக்குள் இருக்கும் பெண் குழந்தைக்குக்கூட பாதுகாப்பில்லாத வெறியர்கள் பெருகியிருக்கும் சமூகத்தில் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பெற்றோர்களாகிய நாம் மாறினால்தான் இந்த அவலத்தை மாற்ற முடியும் என்பதை இப்படத்தின் மூலம் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறேன். கொல்லிமலை என்ற பகுதியில் நடைபெற்ற ஓர் உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள கதைதான் ‘ஆருத்ரா’. ”என்றார். படம் தணிக்கையில் பல வெட்டுக்களுக்குப்பின் யு/ஏ சான்றிதழைப் பெற்றிருக்கிறது.
மூழ்காத காதல்!
‘கயல்’ பட நாயகி ஆனந்தி நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் ‘டைட்டானிக்’. சி.வி.குமார் தயாரிப்பில் கலையரசன் நாயகனாக நடித்திருக்கும் படம். கடந்த ஆண்டு ‘ரூபாய்’, ‘பண்டிகை’, ‘என் ஆளோட செருப்பக் காணோம்’ என்று மூன்று படங்களில் நடித்திருந்தார் ஆனந்தி. ஆனால் எந்தப் படமும் ஓடியமாதிரி தெரியவில்லையே என்றதும் சுருக்கென்று கோபம் வந்தது ஆனந்திக்கு. “நீங்கள் சொன்ன மூன்று படங்களுமே தோல்விப் படங்கள் இல்லை.
ஆனால் இந்த ஆண்டு இறுதிக்குள்ள எனது நடிப்பில் வெளியாக இருக்கும் இரண்டு படங்களும் நிச்சயம் வெற்றி பெறும். முதலில் ‘டைட்டானிக்’ வெளிவர இருக்கிறது. பாலா சார், சுதா கொங்கரா மேடம் ஆகியோரின் உதவி இயக்குநர் ஜானகிராமன் இயக்கி இருக்கிறார். ‘காதலும் கவுந்து போகும்’ன்னு அவர் டேக் லைன் சொல்லிட்டு கதை சொன்னப்போ அவ்ளோ அழகா இருந்தது. ஆனால் இது மூழ்காத காதல். அப்புறம் ‘பரியேறும் பெருமாள்’ படமும் இதேமாதிரி அசத்தும் பாருங்க.” என்கிறார்.