தேவர் மகன்’ படத்தில் ‘போற்றிப் பாடடி பெண்ணே’ பாடலைப் பாடி ஆறு வயது மழலைப் பாடகியாகத் திரைக்கு அறிமுகமானார் ஸ்ருதிஹாசன். பின்னர் ‘ஹே ராம்’ படத்தில் குழந்தை நட்சத்திரம். ‘ஏழாம் அறி’வில் கதாநாயகி என பத்து ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டார். இதுபற்றி அவர் பேசுகையில், “சினிமாவில் நான் அறிமுகமாகி இது பத்தாவது ஆண்டு. இதுவரை நான் நடித்த படங்கள் அனைத்தும் நான் விருப்பப்பட்டுத் தேர்வு செய்து நடித்தவைதான். இந்தப் பத்தாண்டு கால திரையுலக வாழ்க்கை நன்றாகவே இருந்தது.
இதைப் போலவே எதிர்காலத்திலும் எனக்குப் பிடித்த கேரக்டர்கள், கதைகளிலும் மட்டுமே நடிப்பேன். தற்போது மகேஷ் மஞ்சரேக்கரின் இயக்கத்தில் இந்தி படம் ஒன்றில் நடித்துவருகிறேன். அப்பாவுடன் இணைந்து நடித்து வரும் ‘சபாஷ் நாயுடு’வின் பணிகள் விரைவில் தொடங்கும்.” என்று கூறியிருக்கும் ஸ்ருதிஹாசன் நியூயார்க்கில் நடைபெற்ற இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டம் ஒன்றில் அப்பா கமலுடன் கலந்துகொண்டு அதில் தேசபக்திப் பாடல் ஒன்றைப் பாடி பாராட்டுகளை அள்ளி வந்திருக்கிறார்.சிம்புவின் காதலி
சிம்புவின் காதலி
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் இடம்பெறும் எந்தக் கதாபாத்திரத்தில் எந்த நடிகர் நடிக்கிறார் என வரிசையாக அறிமுகப்படுத்தி பரபரப்பைக் கிளம்பிக்கொண்டிருந்தார்கள். அறிமுகப் படலம் அருண் விஜய், அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, ஜோதிகா எனத் தொடர்ந்துகொண்டிருக்க, சிம்புவின் காதலியாக நடித்திருப்பது யார் என்பது அதிகாரபூர்வமாகத் தெரியாமல் இருந்துவந்தது. எதி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் சிம்புவின் காதலி ‘சாயா’ என்ற கதாபாத்திரத்தில் டயானா எரப்பா நடிக்கிறார் என்று தற்போது அறிவித்துவிட்டார்கள். கடந்த 2016 மிஸ் இந்தியா இறுதிப் பட்டியலில் இடம்பிடித்த டயானா எரப்பா இந்தப் படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமாகிறார்.நடிகர்களின் கருணை
நடிகர்களின் கருணை
கேரளம் வெள்ளத்திலிருந்து மீண்டு எழ, தமிழ் நடிகர், நடிகைகளில் பலர் அதிக அக்கறையுடன் நன்கொடை அளித்துவருகிறார்கள். நடிகர்கள் அளித்துவரும் நன்கொடைத் தொகையின் அளவு அவர்களது சந்தை நிலவரத்தையும் கூறுவதாக இருக்கிறது. தமிழ் நடிகர்களில் எல்லோருக்கும் முன்பாக நிதியுதவி அளித்த கமல், ரஜினி, சூர்யா, கார்த்தி, விஷால் தொடங்கி கோலிவுட்டின் உதவிக்கரம் நீள்கிறது. நடிகர்களில் விஜய் கொஞ்சம் வித்தியாசமாக நிதியை வழங்கியிருக்கிறார் என்கிறார்கள். கேரளத்தில் அதிக ரசிகர்களைக் கொண்ட விஜய் சுமார் 70 லட்சம் ரூபாயை அங்குள்ள தனது மன்ற நிர்வாகிகளின் வங்கிக்கணக்கிற்கு அனுப்பி, தேவையான பொருட்களைத் தேவைப்படும் மக்களுக்கு வாங்கிக் கொடுக்கும்படி கூறியிருக்கிறாராம்.அமலா பால் அடுத்து..
அமலா பால் அடுத்து..
கையில் அடிபட்டிருந்தபோதும் சொந்த ஊர் மீதான பாசம் குறையாமல், கேரள மக்களுக்கு உதவி வருகிறார் அமலா பால். இதற்கிடையில் தனது அடுத்த படத்தையும் அறிவித்திருக்கிறார். ‘மேயாத மான்’ படத்தை இயக்கிய ரத்னகுமாரின் அடுத்த படத்தில் இவர்தான் கதாநாயகி. ‘ஆடை’ எனத் தலைப்பு சூட்டப்பட்டிருக்கும் இந்தப் படம் ஒரு பெண் மையத் திரைப்படம் எனக் கூறியிருக்கிறார்.மீண்டும் விஷால் அணி!
மீண்டும் விஷால் அணி!
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தவில்லை என்று அரசியல் செய்யப்பட்டது. ஆனால், அதைவிடச் சூடான செய்தியை அறிவித்தார் நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால். தனது அணி வெற்றிபெற்றபோது உறுதியளித்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகவும் மீண்டும் நடிகர் சங்கத் தேர்தலில் தனது அணி போட்டியிடுவது உறுதி என்பதையும் மேடையிலேயே சூசகமாகக் கூறிவிட்டார். ஆனால், தற்போது இருக்கும் செயற்குழுவில் மீண்டும் தலைவர் பதவிக்குப் போட்டியிட நாசர் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.