நூற்றாண்டு கடந்த வரலாறு கொண்டது ஜப்பானிய சினிமா. அது அமெரிக்க சினிமாவின் போக்கையே மாற்றிய புதிய பாணி திரைப்படங்களை உருவாக்கி இருக்கிறது. அவற்றில் சிறுவர்களை மையமாக வைத்து எடுக்கப்படும் ‘தி ரிங்’, ‘டார்க் வாட்டர்’ போன்ற ஜப்பானீஸ் ஹாரர் (J-Horror) என அழைக்கப்படும் திகில் திரைப்படங்கள் நம்மூரிலும் பிரபலம்.
அதேபோல, ஹைக்கூ கவிதை மட்டுமல்ல பூதாகரமான காட்ஜில்லா மிருகத்தையும் கலை உலகுக்குத் தந்தது ஜப்பானிய மண்தான். இருபதாம் நூற்றாண்டின் திரைச்சிற்பிகளில் ஒருவரான அகிரா குரோசாவா வழியாக ஹாலிட்டின் திரைக்கதை சூத்திரத்துக்கு சவால்விடும் சாமுராய் பாணித் திரைப்படங்களைத் தந்ததும் ஜப்பான்தான்.
இந்நிலையில் ஜப்பானின் கலை நுட்பம் மிகுந்த திரைப்படங்களில் சிலவற்றை உலகத் திரை ரசிகர்களுக்குக் கொண்டு சேர்க்கவிருக்கிறது ‘சென்னை ஜப்பான் திரைப்பட விழா 2018’.
ஆண்டுதோறும் சென்னை சர்வதேசப் படவிழாவை ஒருங்கிணைத்துவரும் ‘இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன்’ திரைப்படச் சங்கம், சென்னையில் உள்ள ஜப்பான் தூதரகத்துடன் இணைந்து மூன்று நாள் ஜப்பானியத் திரைப்பட விழாவை நடத்துகிறது. சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தாகூர் திரைப்பட மையத் திரையரங்கில் செப்டம்பர் 6 முதல் 8 வரை மாலைப் பொழுதுகளில் இந்தத் திரையிடல் நடைபெற இருக்கிறது.
குருவின் குரல்
பணியிடத்தில் மிக மோசமாகச் சீண்டப்படுகிறான் சடகிச்சி. விரக்தியில் வேலையில் இருந்து சில காலம் விலகி வீட்டிலேயே முடங்கிவிடுகிறான். தங்களுடைய மகனை மீண்டும் சகஜ நிலைக்குத் திருப்புவதற்கான முயற்சியில் இறங்குகிறார்கள் சடகிச்சியின் குடும்பத்தினர்.
தைஹை என்ற கதைசொல்லியைத் தங்களுடைய வீட்டுக்கு அழைக்கிறார்கள். அவருடைய கதைசொல்லும் பாணியால் ஈர்க்கப்பட்டு அவருடைய சீடராக முடிவெடுக்கிறான் சடகிச்சி. விரைவில் அவனுக்கு அந்தக் கலை கைவரப்பெற அவனுடைய வாழ்க்கைத் தடம் முற்றிலுமாக மாறுவதைத் திரையில் வடித்திருக்கும் படம் ‘ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்’ (His Master’s Voice).
வாழ்க்கையின் எல்லைவரை
1907-ம் ஆண்டில் நடக்கும் சம்பவத்தில் தொடங்குகிறது ‘ஓஷின்’ (Oshin) என்ற திரைப்படம். ஏழு வயது சிறுமி ஒஷின், 60 கிலோ அரிசிக்கு விற்கப்படுகிறாள். அவளை வாங்குபவர் ஒரு மரக்கடையில் உதவியாளராக அவளை அமர்த்துகிறார். அவளை விற்கும்போது ஒரு 50 சென் நாணயத்தை மட்டும் அவளுக்குப் பரிசாகத் தருகிறது ஓஷினின் குடும்பம்.
அந்த நாணயத்தை அவள் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறாள். திடீரென ஒரு நாள் மரக்கடையின் கல்லாப்பெட்டியில் இருந்து ஒரு 50 சென் நாணயம் திருடுபோகிறது. ஓஷின் சந்தேகிக்கப்படுகிறாள். தான் களவாடவில்லை என்றாலும் கடையை விட்டுத் தப்பித்து ஓடிச் சென்று மலைப்பகுதி ஒன்றில் பதுங்குகிறாள். பனிப்புயலில் சிக்கித் தவிக்கும் அவளை, பெண் சிப்பாயான ஷன்சக்கு காப்பாற்றித் தன்னுடனேயே ஓஷினைத் தங்கவைத்துக்கொள்கிறார்.
ஆனால், திடீரென ஒரு நாள் அவர் ராணுவ போலீசாரால் சுட்டுக்கொல்லப்படுகிறார். மீண்டும் நிர்க்கதியாகிறாள் ஓஷின். ஆனாலும் அவள் ஏதோ ஒரு நம்பிக்கையோடு வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கிறாள்.
பூனைக்குக் குறிவைக்கும் சாமுராய்
சாமுராய்க்குப் பயம் அழகல்ல என்பதால் பதவியில் இருந்து வெளியேற்றப் படுகிறார் கியூடரோ என்ற சாமுராய். கை செலவுக்குக்கூடப் பணம் இல்லாமல் குடும்பத்துடன் திண்டாடுகிறார். தன்னுடைய வாளைப் பயன் படுத்தாமல் வாழ்க்கையில் என்ன செய்ய முடியும் என்பதே அவருக்குப் புலப்படவில்லை. ஒரு நாள் அவரைத் தேடி ஒரு வேலை வருகிறது.
பூனை ஒன்றைக் கொல்ல வேண்டும் என்பதுதான் அந்த வேலை. ஒரு சாமுராய்க்கு இது முட்டாள்தனமாகத் தோன்றினாலும் பணத்துக்காக அந்த வேலையை ஒப்புக்கொள்கிறார். தான் கொலைசெய்ய வேண்டிய இலக்கைக் குறிவைக்கும்போது அவர் கண்முன்னால் தோன்றுகிறது ஒரு அழகிய வெள்ளைப் பூனை. இன்றைய சாமுராயின் பிரதிபலிப்பு இந்த ‘நெகொ சாமுராய்’ (Neko Samurai) படம்.
ஜப்பானியத் திரைப்படவிழா குறித்துக் கூடுதல் விவரங்கள் அறிந்துகொள்ள விரும்பும் திரை ஆர்வலர்கள் 044 2821 2652 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.