படப்பிடிப்பு இடைவேளையில் பிரபுதேவாவின் கேரவனுக்குள் நுழைந்தால் உதவியாளருடன் சதுரங்கம் ஆடிக்கொண்டிருப்பார், அல்லது மனதுக்குப் பிடித்த நடனப் பாடல்களை கேட்டுக்கொண்டிருப்பார், இந்தமுறை அவரைச் சந்திக்கச் சென்றபோது சதுரங்கத்தில் இருந்தார். அவரது நடிப்பில் நடனத்தை மையமாகக் கொண்ட ‘லக்ஷ்மி’ திரைப்படம் இன்று வெளியாகிறது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘சார்லி சாப்லின் 2’, ‘எங் மங் சங்’, ‘ஊமை விழிகள்’, ‘பொன் மாணிக்கவேல்’, ‘தேவி 2’ - என நாயகன் பிரபுதேவாவின் நடிப்புப் பயணம் வேகமெடுத்திருக்கிறது. சதுரங்க ஆட்டத்தை நிறுத்திவிட்டு வந்தவருடன் உரையாடியதிலிருந்து…
ஒரு நடனப் படம் தமிழில் கொடுக்க வேண்டும் என்பது உங்களது நீண்ட நாள் விருப்பமா?
ஆமாம். இந்த மாதிரி ஒரு டான்ஸ் படம் இங்கே வந்து ரொம்ப நாள் ஆச்சு. இந்தப் படம் டைரக்டர் படம். இயக்குநர் விஜய் இதுவரைக்கும் எடுத்த படங்கள்ல பெஸ்ட் படம்னே ‘லக்ஷ்மி’யைச் சொல்வேன்.
இயக்குநர் அப்படி என்ன செய்திருக்கிறார்?
குரு – சிஷ்யை இருவருக்குமான களம் இது. அதை நடனப் பின்னணியில எமோஷனோட இந்தப் படம் காட்டும். விஜய், கதை சொல்ல வந்தப்போ, ‘ஒரு டான்ஸ் படம் பண்ணலாமா, சார்?’னு கேட்டார். நான் அவர்கிட்ட, ‘அது கஷ்டமாச்சே. பெரிய லெவல்ல பண்ணனுமே. வேண்டாம் விஜய்’ன்னு சொன்னேன். அப்போ அவர், ‘இந்தியா லெவல்ல பண்ணுவோம் சார்’ன்னு நம்பிக்கையா சொன்னார்.
அதேமாதிரி மும்பை, லக்னோ, அசாம் இப்படிப் பல இடங்கள்ல இருந்து நடனத்துக்காகச் சின்ன பசங்களைத் தேடி, தேர்வு செய்தார். படத்துல என்னோட சிஷ்யையா தித்யா நடிச்சிருக்காங்க. மகாராஸ்டிரா பொண்ணு. அவங்களோட டான்ஸை ஆடியன்ஸ் ரொம்ப ரசிப்பாங்க. அப்படி ஒரு மெச்சூரிட்டியான சிறுமி.
படத்துல இசை, பாடல் வரிங்க இல்லாம வசனத்தாலேயே ஒரு பாட்டு இருக்கு. உதாரணமா சொல்லணும்னா, ‘நீங்க இதை நடனம்னு சொல்றீங்க, ஆனா, நான் மூச்சு என்பேன்’ இந்த மாதிரியான வசனங்களாக அந்த நடனப் பாட்டு நகரும். இந்திய அளவுல யாரும் செய்யாத ஒரு முயற்சி. அதோட, கடைசி 25 நிமிடம் உணர்வுபூர்வமான காட்சிகளை வைத்து இயக்குநர் கலக்கியிருக்கிறார்.
உங்களுடைய நடன குரு பற்றிய அம்சங்களைப் படத்தில் எதிர்பார்க்கலாமா?
எனக்கு ரெண்டு குரு. ஒருத்தர் தர்மராஜ் மாஸ்டர். பயங்கர கோபக்காரர். இன்னொருத்தர் லஷ்மி நாராயணன் மாஸ்டர். பயங்கர சாஃப்ட். இந்தப் படத்துலக்கூட கதைக்காகத்தான் ஒரு குருவா நடித்திருக்கேன். அதனால அவங்க பற்றிய அம்சங்கள் படத்தில் இல்லை. ஆனா இப்பவும் என் மனசுல எங்க மாஸ்டர்ஸ் ரெண்டு பேரும்தான் குருவாக இருக்காங்க.
ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் ‘சார்லி சாப்லின் 2’ -ல் நடிப்பதைப் போல, உங்களை வைத்து முன்பு படங்கள் இயக்கிய பல இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறீர்களாமே?
‘எங் மங் சங்’ பட இயக்குநர் அர்ஜூன், ‘குலேபகாவலி’ கல்யாண் மாதிரி இப்போ வர்ற இயக்குநர்கள்கிட்டயும் கதை கேட்கிறேன். பழைய ஆட்கள்கிட்டேயும் கதை கேட்கிறேன். ’ஊமை விழிகள்’னு ஒரு படத்துல நடிக்கிறேன். 20 வயது பையன் இயக்குநர். புதியவர்களையும், முன்பு படம் செய்த இயக்குநர்களையும் பேலன்ஸ் செய்து படங்கள் பண்ண வேண்டும் என்பது என் ஆசை.
தமிழ், தெலுங்கு, இந்தி எனத் தொடர்ச்சியாகப் படங்கள் இயக்குகிறீர்கள் அல்லது அப்படியே விட்டுவிட்டு முழு நேர நடிகராகிவிடுகிறீர்கள். ஏன் இப்படி?
அப்படியில்லையே. அடுத்து இந்தியில சல்மான் கான் நடிப்பில் ‘தபாங்க் 3’ இயக்கப்போறேனே. நடிகனா, இயக்குநரா எப்படி ஓடினா பந்தயம் இன்னும் பெட்டரா இருக்கும்? இப்படி நான் எப்பவுமே திட்டம் போட்டுக்கிறதில்ல. இங்கு எதுவுமே நம்ம கையில இல்ல. எல்லாமே அதுவா அமையணும். அப்படி அமையுற வேலையைத் தெளிவா, முழு ஈடுபாட்டோட செய்யணும். அவ்வளவுதான்.
’பொன் மாணிக்கவேல்’ படத்தில் முதன் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறீர்கள். அந்த அனுபவம் எப்படி?
இப்போ வரைக்கும் 4 போலீஸ் படங்கள் இயக்கியிருக்கேன். அது ஒவ்வொண்ணுலயும் என்னோட ஸ்டைல்னு ஒண்ணு இருக்கு. என்கூடவே ரொம்ப வருஷம் இருக்குறதால அந்த ஸ்டைல் என்னென்னு ‘பொன் மாணிக்கவேல்’ இயக்குநர் முகிலுக்குத் தெரியும். இதுஒரு நல்ல கதை. இதுக்கு தகுந்தமாதிரி பிட்னெஸ் எல்லாம் ரொம்ப முக்கியம். அதெல்லாம் இப்போ சரியா அமைஞ்சுது. அப்படியே படப்பிடிப்புக்குக் கிளம்பிட்டேன்.
விக்ரம் முதல் ஜெயம் ரவி வரைக்கும் பல நடிகர்களின் வாரிசுகள் நடிக்க வந்துவிட்டார்கள். உங்களது பிள்ளைகள் எப்போது வருவார்கள்?
அவங்க சினிமாவுக்குத்தான் வரணும்னு என் மைண்ட்ல தோணியதில்ல. அவங்களுக்கும் டான்ஸ் ரிகர்ஸல் ரூம்னா என்னென்னு கூடத் தெரியாது. என்ன பிடிக்குதோ அதைச் செய்யட்டும். இப்போ இந்த வயசுல நல்ல பசங்கன்னு பேர் வாங்கினா போதும். அதுவே பெரியவங்களா வளர்ந்ததும், ‘அவர் நல்ல ஆளுப்பா’ன்னு பேர் வாங்கினா போதும். அவ்வளவுதான்.
திடீரென ’மாரி 2’ படத்தில் தனுஷுக்காக ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துக் கொடுத்திருக்கிறீர்களே?
கேட்டாங்க. பண்ணினேன். அவ்ளோதான்.
‘தபாங்க் 3’ எப்போது தொடங்கப் போகிறீர்கள்?
அது பெரிய படம். இப்போ சல்மான் கான் அங்கே ‘பாரத்’னு ஒரு படம் பண்றார். அதை முடிச்சுட்டு அவர் வரணும். ஜனவரியில படத்தைத் தொடங்கலாம்னு இருக்கேன். ‘தபாங்க் 1, 2’ சீரியஸ் என்ன மாதிரியான பாணின்னு எல்லாருக்கும் தெரியும். அந்த கலர்ல வேறொரு கமர்ஷியல் டோன்ல படம் இருக்கும். இயக்குநர் என்ற பொறுப்பும், அந்த டைம்ல இருக்குற டென்ஷனும் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அந்த டென்ஷனுக்காக நான் வெயிட்டிங்.