பூமிக்கு வெளியிலிருந்து தொடுக்கப்படும் மனித இனத்தின் மீதான தாக்குதலும், அதை முறியடிப்பதற்கான அமெரிக்க முயற்சிகளுமாக மற்றுமொரு அறிவியல் புனைவு ஆக்ஷன் திரைப்படமாக வெளிவருகிறது ‘த பிரிடேட்டர்’.
1987-ல் அர்னால்டு ஸ்வார்ஸ்னேகரை ஆக்ஷன் சூப்பர் ஸ்டார் நாற்காலியில் அமர வைத்த திரைப்படம் ‘பிரிடேட்டர்’. அடர் வனத்தினுள் பணயக் கைதிகளை மீட்கப்போய், கொடூரமான அயல்கிரகத்து ஜந்துவிடம் சிக்கும் ராணுவ வீரர்களின் சாகசமாக விரிந்த படம். அது வெளியாகி 30 வருடங்களாகிறது. இந்த இடைவெளியில் 20-க்கும் மேற்பட்டத் திரைப்படங்களில் பிரிடேட்டரை வைத்து ஹாலிவுட்டில் ரசிகர்களை மிரட்டினார்கள். இவற்றில் முதல் படத்தின் தொடர்ச்சியாக ‘பிரிடேட்டர்-2’ (1990), ‘பிரிடேடர்ஸ்’ (2010) ஆகியவை மட்டுமே அடையாளம் காணப்படுகின்றன. இந்த வரிசையில் நான்காவதாக செப்டம்பர் 14 அன்று வெளியாக உள்ளது புதிய ‘த பிரிடேட்டர்’.
முதலிரண்டு படங்களின் தொடர்ச்சியாக இந்த நான்காவது படத்தின் கதை நடைபெறுகிறது. நவீன எலெக்ட்ரானிக் விளையாட்டுப் பொருட்களை இயக்கும் சிறுவன் ஒருவனின் முயற்சி, பூமிக்கு வெளியே சுற்றிக்கொண்டிருக்கும் பிரிடேட்டர் விண்கலத்துக்கான அழைப்புச் சமிக்ஞையாகி அது விபரீதமாகிறது.
இம்முறை பிரிடேட்டர் வருகையின் நோக்கம் பூமியை கைப்பற்றுவதும் அதற்குத் தடையான மனித இனத்தை அழித்தொழிப்பதாகவும் இருக்கிறது. இதற்கு எதிராக ராணுவ வீரர் குழுவுடன் அறிவியல் ஆசிரியை ஒருவரும் கைகோர்க்கிறார். மனித குலத்தைக் காப்பாற்றும் அமெரிக்கர்களின் வழக்கமான யுத்தம் தொடங்குகிறது. மரபணுப் பாய்ச்சலாக புதிய பிரிடேட்டர்கள் உருவாவதும், பிரமாண்டமான சூப்பர் பிரிடேட்டர் களமிறங்குவதுமாக முந்தைய படங்களில் இருந்து வித்தியாசம் காட்டுகிறார்கள்.
பிரிடேட்டர் வரிசையில் ஒரே நேரத்தில் 3 புதிய திரைப்படங்களை அறிவித்து அதன் முதல் தவணையாக ஷேன் பிளாக் இயக்கியிருக்கும்
‘த பிரிடேட்டர்’ படத்தை தற்போது வெளியிடுகிறார்கள்.