இமயமலைத் தொடரில் வசிப்பதாகச் சொல்லப்படும் ராட்சத பனி மனிதனே ‘எட்டி’ (Yeti). இந்த எட்டியைப் பயங்கர ஜந்துவாகச் சித்தரித்த திரைப்படங்களுக்கு மத்தியில், அதனைக் குழந்தைகளின் கனவுலக் கதாபாத்திரமாக வரிந்துக் கொண்டு வரும் அனிமேஷன் திரைப்படம் ‘ஸ்மால்ஃபுட்’(Smallfoot).
மேகங்கள் விளையாடும் பனிமலையின் உச்சியில் ஓர் ‘எட்டி’ சமூகம் வசிக்கிறது. ‘மைகோ’ என்ற சிறுவயது எட்டி, தான் கதையாகக் கேட்டு வளர்ந்த மனித ஜீவராசிகளை அறிந்துகொள்ளும் ஆவலில் தவிக்கிறான். ஒரு நாள் அந்தப் பகுதிக்குமேலே கடந்துசெல்லும் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாக அதிலிருந்து பாராசூட்டில் குதிக்கும் மனிதப் பிறவியைத் தரிசிக்கிறான்.
அதற்கு முன்பாக எட்டிகள் யாரும் மனிதனைக் கண்டதில்லை என்பதால், மைகோ சொல்வதை எட்டி சமூகத்தில் யாரும் நம்ப மறுக்கிறார்கள். எனவே, மனிதனைக் கண்டறியும் சாகசம் ஒன்றை ரகசியமாக மைகோ தொடங்குகிறான். தொடர்ந்து மலைச்சரிவில் இருக்கும் ஊர் ஒன்றில் உலவும் மனித ‘ஜந்துக்களை’ மைகோ சந்திப்பதும் அதனைத் தொடரும் களேபரமுமே கதை.
குழந்தைகளின் கற்பனை உலகில் அரிய உயிரினங்கள் ஊடாடும் கதையை அப்படியே மாற்றி யோசித்திருக்கிறார்கள். மனித வாண்டுகள் பனிமலையில் ஆடலும் பாடலுமாய் விளையாடிக் களிப்பதையும், பிரமாண்ட எட்டிக்கு முன்னால் மனிதர்கள் குட்டி பொம்மையாக உலவுவதையும் 3டி அனிமேஷனில் குழந்தைகள் ரசிப்பதற்காக மெனக்கெட்டிருக்கிறார்கள்.
கேரி கிர்க்பாட்ரிக் இயக்கிய திரைப்படத்தில் சானிங் டேடம், ஜேம்ஸ் கார்டன் உள்ளிட்ட பலர் பின்னணிக் குரல் கொடுத்துள்ளனர். வார்னர் நிறுவனத்தின் அனிமேஷன் பிரிவு தயாரித்திருக்கும் இந்தப் படம் செப்டம்பர் 28 அன்று திரைக்கு வருகிறது.