முன்னணி இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் எனப் பல முகங்கள் உண்டு பாலிவுட் ரசிகர்களால் கேஜோ என அழைக்கப்படும் கரண் ஜோஹருக்கு. வெற்றிகளைத் திட்டமிட்டு ருசிக்கும் இவர், மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரை ‘தடக்’ படத்தைத் தயாரித்து அறிமுகப்படுத்தினார்.
கடைசியாக ‘ஏ தில் ஹாய் முஷ்கில்’, ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ படங்களை இயக்கியிருந்த இவர், ‘தக்த்’ என்ற தலைப்பில் தற்போது ஒரு வரலாற்றுக் கதையைக் கையில் எடுத்திருக்கிறார்.
ரன்வீர் சிங், கரீனா கபூர், அலியா பட், விக்கி கவுசல், புமி பெட்னேகர், அனில் கபூர் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்தை இந்தப் படத்துக்காக ஒப்பந்தம் செய்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். அதேநேரம் ஜான்வி கபூருக்கு இந்தப் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரம் அளித்திருக்கிறார்.
“முகலாய பீடத்துக்கான காவியப் போராட்டம் இந்தக் கதை, அன்புக்கான போர்” என தனது ட்விட் செய்திருக்கிறார் கரண் ஜோஹர். பிரம்மாண்ட தயாரிப்பு என்பதால் 2020-ல் வெளியீட்டை எதிர்பார்க்கலாமாம்.