முதலில் குழந்தை நட்சத்திரம் பின்னர் கதாநாயகி என ஹன்சிகா நடிக்க வந்து 15 ஆண்டுகள் ஓடிவிட்டன. இதுவரை 49 படங்களில் நடித்திருக்கும் அவரது 50-வது படத்தை இயக்குகிறார் யூ.ஆர்.ஜமீல். ‘மஹா’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப் படம் ஒரு க்ரைம் த்ரில்லர். கதாநாயகியை மையப்படுத்திய கதையில் முதல்முறையாக நடிக்கும் ஹன்சிகா, கதாபாத்திரத்துக்காகத் தன்னை முழுவீச்சில் தயார்படுத்திக்கொண்டிருக்கிறார். இதில் அவருக்கு ஹாலிவுட் பாணியிலான ஆக்ஷன் காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஜிப்ரான் இசையில் மஹா கதாபாத்திரத்துக்கான பாடல்களை எழுதியிருக்கிறார் தாமரை.
தடம் பதிக்கும் படம்?
‘தடையற தாக்க’ படத்தின் இயக்குநர் மகிழ்திருமேனியும் நடிகர் அருண் விஜயும் மீண்டும் கூட்டணி அமைத்திருக்கும் படம் ‘தடம்’. அந்தப் படத்தின் ட்ரைலர் தற்போது யூடியூபில் ஹிட் அடித்திருக்கிறது. மகிழ்திருமேனி இயக்கத்தில் இம்முறை அருண் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம். அருண் விஜய் - தன்யா ஹோப் ஜோடியின் அதிரடியான காதல் காட்சிகளை ட்ரைலரில் பார்த்து உற்சாகம் அடைந்திருக்கிறார்கள் ரசிகர்கள். ஒரு கொலையை மையமாகக்கொண்ட கதையில், காவல் துறையை முந்திக்கொண்டு கொலையாளியைக் கதாநாயகன் நெருங்குவதுதான் திரைக்கதை.
இந்தியன் 2-ன் ஒளிப்பதிவாளர்!
ரஜினி, ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள ‘2.0’ நவம்பர் 29-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து கமல், ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன்-2’ பட வேலைகளைத் தொடங்கிவிட்டார் இயக்குநர். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ஷங்கர் யாரைத் தேர்வு செய்வார் என நெட்டிசன்கள் விவாதித்து வந்தனர். அதற்குத் தற்போது விடையளித்து விட்டார் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன். இயக்குநர் ஷங்கருடன் இணைந்து ‘இந்தியன்-2’ படத்துக்கான படப்பிடிப்பு லொக்கேஷன்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள ஓர் ஒளிப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளி யிட்டுவிட்டார்.
திரண்டுவந்த கோலிவுட்!
இயக்குநர் விஜயின் சகோதரர் உதயா, கதாநாயகனாக நடித்துத் தயாரித்திருக்கும் படம் ‘உத்தரவு மகாராஜா’. அறிமுக இயக்குநர் ஆசிஃப் குர்ஷி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் பிரபு, மனோபாலா, கோவை சரளா, ஸ்ரீமன் உட்பட உதயாவுடன் பலர் இணைந்து நடித்துள்ளனர். நரேன் பாலகுமார் இசை அமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு கோடம்பாக்கமே திரண்டு வந்திருந்தது, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார் நடிகர் கார்த்தி.
“ரொம்பவும் ரிஸ்கான கதையைத் தேர்வுசெய்து, சிறப்பாக நடித்துத் தயாரித்திருக்கிறார் உதயா. இங்கு வந்திருக்கிறவர்கள் எல்லோரும் உதயாவுக்காக வந்தவர்களாகத்தான் இருப்பார்கள். காரணம், உதயா அவ்வளவு நட்பு வட்டத்தை வைத்திருப்பவர். அப்படிப்பட்டவரின் கதைத் தேர்வும் உழைப்பும் அவருக்கு வெற்றியைத் தேடித்தரும்” என்று பாராட்டினார்.
நான் இன்னும் பேசவே இல்லை!
மணிவண்ணன், தங்கர்பச்சான், சீமான் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் சண்முகம் முத்துசாமி. இவரது இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சரத்குமார் இணைந்து நடித்திருக்கும் ‘அடங்காதே’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அனல்தெறிக்கும் அரசியல் வசனங்களுடன் வகுப்புவாதம் மற்றும் மதவாத அரசியலைச் சாடும் படமாக இதை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். ஆல் இந்தியா பீப்பிள் சேவா பார்ட்டி என்ற கட்சியின் தலைவராக நடித்திருக்கிறார் சரத்குமார்.
எதிர்பாராதவிதமாக இவரது காரில் பயணிக்கும் கார் மெக்கானிக்காக ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கிறாராம். ஜி.வி.பிரகாஷின் நண்பனாக நடித்திருப்பவர் யோகிபாபு. இசை வெளியீட்டு விழாவில் அவரைப் பேச அழைத்ததும் அரங்கம் கரவொலியால் அதிர்ந்தது. அவர் எழுந்துவந்து மைக் பிடித்ததும் மீண்டும் அரைநிமிடம் கரவொலி. அவர் பேச வாயெடுத்தபோது மறுபடியும் கரவொலி. ஒருவழியாக அவர் பேச ஆரம்பித்தார். “ நான் பேசவே இல்ல, அதுக்குள்ள கை தட்டுறீங்க.” என்று நெகிழ்ந்துபோனார். தற்போது அதிக படங்களில் நடித்துவரும் நகைச்சுவை நடிகர் இவர்தான்.
ட்ரைலர் தந்த விறுவிறு!
என்னதான் அழகும் திறமையும் இருந்தாலும் ஏற்கும் கதாபாத்திரங்கள்கூடக் கதாநாயகிகளுக்கு புதிய வாய்ப்புகளைக் கொண்டுவந்து சேர்க்கும். அதிதி ராவுக்கும் தற்போது அதுதான் நடந்துவருகிறது. ‘சிருங்காரம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ படம்தான் அவருக்கு அடையாளம் கொடுத்தது. மீண்டும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் அதிதிக்கு அதிரடியான கிளாமர் கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்.
இந்தப் படத்தின் ட்ரைலரில் அதிதி தோன்றும் காட்சிகளைப் பார்த்து ரசிகர்கள் உருகத் தொடங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் ஷாந்தனு பாக்யராஜ் நடிக்க மிஷ்கின் இயக்கவிருந்த படத்தில் தற்போது ஷாந்தனுவுக்கு பதிலாக உதயநிதி நடிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் இந்தப் படத்தில்தான் உதயநிதிக்கு ஜோடியாக அதிதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மிஷ்கின் தயாரித்த ‘சவரக்கத்தி’ படத்தில் தாடியுடன் நடித்த இயக்குநர் ராம், தாடியை எடுத்துவிட்டுக் காவல் அதிகாரியாக முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் இதில் நடிக்கிறார். படத்துக்கு ஒளிப்பதிவு ஸ்ரீராம்.