இந்து டாக்கீஸ்

தலைக்கு மேல் கத்தி

செய்திப்பிரிவு

விரும்பியோ விரும்பாமலோ கடந்த நான்கு வாரங்களாக ஊடகங்களுக்குத் திகட்டும் அளவுக்குத் தீனி கொடுத்துக் கொண்டிருக்கிறது லைக்கா நிறுவனச் சர்ச்சை. ஆனால் இதில் தெரியாமல் விஜய் சிக்கிக் கொண்டதாகக் கூறுகிறார்கள் விஜய்க்கு நெருக்கமான வட்டத்தில். இதிலிருந்து எப்படி விடுபடுவதென அவர் விழிபிதுங்கிக் கொண்டிருந்த நேரத்தில், இலங்கை பாதுகாப்புத் துறையின் இணையதள அவதூறுக் கட்டுரை வெளியானது.

அதற்குக் கண்டனம் தெரிவிக்கும், திரையுலகின் கூட்டத்தில் விஜயின் பேச்சு தமிழக முதல்வருக்கு உவப்பானதாகக் கண்டிப்பாக இருந்திருக்கும். இதனால் கத்தி சர்ச்சைக்கு அம்மாவே முற்றுப்புள்ளி வைத்து விஜயைக் காப்பாற்றிவிடுவார் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் கத்தி விவகாரத்தில் முதல்வரின் பார்வையே வேறு என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.

இதனால் கத்திக்கான நெருக்கடி முற்றிக்கொண்டிருக்கிறது. இயக்குநர்களையும் அவர்கள் சொல்லும் கதைகளையும் மட்டுமே நம்பும் கதாநாயகர்கள், சம்பந்தப்பட்ட இயக்குநர் சொல்லும் நிறுவனத்திற்காக நடிக்கிறார்கள். அந்த நிறுவனத்தின் பின்னணியில் பிரச்சினை இருக்குமென்றால் அதற்குப் பாவம் விஜய்தான் என்ன செய்வார் . இதற்காக ஏதோ தேசத் துரோகியைப் போல விஜயைச் சித்தரிப்பது சரியா என்பது விஜய் ரசிகர்களின் கேள்வி.

இதற்கிடையில் விஜயின் நீலாங்கரை வீட்டை மாணவர்கள் முற்றுகையிடப் போவதாக அறிவித்தார்கள் அல்லவா? அந்த இக்கட்டான நேரத்தில்கூட விஜய் சார்பாகக் காவல் துறையில் பாதுகாப்பு கோரப்படவில்லையாம். காவல் துறைக்குப் போனது லைக்காவின் சென்னைக் கிளைதான் என்கிறார்கள். “நாங்கள் தயாரிக்கும் படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்கிறார். எனவே அவரது வீட்டிற்குப் பாதுகாப்பு தாருங்கள் “ என்று கேட்டுக்கொண்டார்களாம்.

இதையடுத்துத்தான் அவரது வீட்டிற்குப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால் ஒரே ஒரு நாள் மட்டும் குவிக்கப்பட்டிருந்த போலீஸ் இப்போது முற்றிலும் வாபஸ் பெறப்பட்டுவிட்டது.

இப்போது பிரச்சினை அதுவல்ல. கத்தி படத்தைத் தயாரித்திருப்பது லைக்கா என்ற சிங்கள நிறுவனத்தினர் என்பது தெரியாமல் விஜய் நடித்திருக்க வாய்ப்பே இல்லை; இதனால் கத்தியை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று இந்தப்பட விவகாரத்தை ‘ தமிழுணர்வுப் பிரச்சினை’யாக மாணவர்கள் கையிலெடுத்திருப்பதுதான் ‘கத்தி’யின் வெளியீட்டைச் சிக்கலாக்கி விட்டது. இதிலிருந்து கத்தியை எப்படி மீட்கப் போகிறார்கள் என்பதுதான் கோலிவுட்டின் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

SCROLL FOR NEXT