பத்தொன்பது வருடங்களுக்கு முன்பு வெளியான 'மேட்ரிக்ஸ்' திரைப்படம், உலகம் முழுவதும் சலனத்தை உருவாக்கியது. கணினிகளால் உருவாக்கப்பட்ட மாய பிம்ப உலகிற்குள், அதை அறியாமல் வாழும் மனிதர்களைக் காப்பாற்றுவதே அப்படத்தின் கதை. அப்படியான மாய உலகிற்குள் அறிந்தே நம்மை அழைத்துச் சென்றால் அதுதான் 'மெய்நிகர்த் தோற்றம்' என்று அழைக்கப்படும் ‘வெர்சுவல் ரியாலிட்டி’ (Virtual Reality). இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் திரைப்படங்கள் எடுக்கத் தொடங்கிவிட்டார்கள்.
தற்போதைக்குக் குறும்படங்கள் பிரபலமாகிவருகின்றன. திரையில் நாம் பார்ப்பது வழக்கமான திரைப்படம் என்றால், எல்லா திசைகளில் இருந்தும் மாயத் திரை ஒன்று நம்மைப் பார்த்துக்கொண்டிருப்பதுதான் வெர்சுவல் ரியாலிட்டி திரை. கதை நடக்கும் உலகிற்குள் ஒரு பார்வையாளனாக உங்களை எல்லாத் திசைகளிலும் அழைத்துச் செல்லும் களம்தான் 'மெய்நிகர் சினிமா' (Virtual Reality Cinema) எனும் அற்புதம்.
360 டிகிரி மாய உலகம்
‘வி.ஆர் கியர்’ (VR Gear) என்று அழைக்கப்படும் கருவியைக் கண்ணாடி அணிவதைப் போல அணிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகு 360 டிகிரியிலும் மேலும் கீழுமாக, முதுகுப்புறம் வரையிலுமாக பக்கவாட்டிலும் ஒரு மாய உலகம் உங்களைச் சூழ்ந்து கொள்ளும். முதல்முறையாக சினிமாவைப் பார்த்தபோது மனிதர்களுக்கு உண்டான கிளர்ச்சிக்கு நிகரானது இந்த அனுபவம். இந்தத் தொழில்நுட்பம் மிகவும் கிளர்ச்சியூட்டக் கூடியதாக இருந்தாலும் இதனைக் கொண்டு எப்படி ஒரு கதை சொல்வது என்ற விவாதம் எழுந்தபோது திரையுலகம் திகைத்து நிற்கவில்லை.
ஆனால், ஒரு பெரும் சவால் காத்திருந்தது. அந்தச் சவால், வி.ஆர். காட்சி அனுபவத்தால் கதாபாத்திரங்களின் உலகிற்குள் பார்வையாளனும் மௌன சாட்சியாக உலவிக்கொண்டிருப்பான் என்பதே. இந்த முக்கிய சவாலை மூன்றரை நிமிடக் குறும்படம் வழியாக வென்றுகாட்டியிருக்கிறது டிஸ்னி பிக்சர்ஸ் நிறுவனம்.
‘சைக்கிள்ஸ்’ திரையிடல்
வான்கூவர் (கனடா) நகரத்தில் சென்ற வாரம் நடைபெற்ற 'கிராஃபிக்ஸ் மற்றும் அனிமேஷன்' தொடர்பாக நடைபெற்ற சர்வதேசத் தொழில்நுட்பக் கருத்தரங்கத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோவில் இருந்து அவர்கள் முதல்முறையாகத் தயாரித்திருக்கும் வி.ஆர் குறும்படம் ஒன்றைப் பங்கேற்பாளர்களுக்காக பிரத்யேகமாகக் காண்பித்தார்கள். ‘சைக்கிள்ஸ்’ (CYCLES) என்று பெயரிடப்பட்ட மூன்றரை நிமிடத் திரைப்படத்தைக் காண பல நாடுகளிலிருந்து கருத்தரங்கிற்கு வந்திருந்த பார்வையாளர்கள் ஆர்வமாகப் பல மணி நேரம் பொறுமையுடன் வரிசையில் நின்றார்கள்.
ஒரே வீட்டில் நடக்கும் கதையாக அமைக்கப்பட்டிருக்கும் இக்குறும்படத்தை டிஸ்னியின் ‘மோனா’, ‘ஃப்ரோசன்’ போன்ற படங்களுக்கு லைட்டிங் ஆர்ட்டிஸ்ட்டாக பணிபுரிந்த ஜிப்ஸன் என்பவர் இயக்கியிருக்கிறார். லெஜன்டரி ஸ்டுடியோ ஒன்றின் முதல் முயற்சி எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே இருந்தது. கலாபூர்வமாக வி.ஆர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் உள்ள சவால்களையும் சாத்தியங்களையும் மனத்தில் நிறுத்தி ஆர்வத்துடன் படத்தைப் பார்த்தேன். ஆனால் மிக எளிமையாக, ஓர் உணர்வுப்பூர்வமான கதையைச் சொல்லிக் கண்களைப் பனிக்கச் செய்துவிடுகிறார்கள்.
ஒரு வீட்டிற்குள் குடிவந்து செல்லும் பல குடும்பங்களின் மகிழ்ச்சியான மற்றும் நெருக்கடி மிகுந்த தருணங்கள்தாம் கதை. அன்பாலானதே இல்லம் என்ற எளிமையான விஷயத்தைச் சொல்லும்போது, புத்திசாலித்தனமாக வி.ஆர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அன்பின் வலிமையை உணர்த்தும்போது கதையே எழுந்து நிற்கிறது.
தொழில்நுட்பத்தில் கலாபூர்வமாக விளையாடும் வித்தையை டிஸ்னி நன்றாக அறிந்து வைத்திருக்கிறது. காட்சி ஊடகத்தில் மெய்நிகர் தோற்றத்தின் சாத்தியங்களை நினைக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. பார்வையாளனைத் தட்டையான திரை எனும் ஒருமுக காட்சி அனுபவத்துக்குள் திரைப்படம் அழைத்துச் செல்கிறது என்றால் 360 டிகிரி எனும் மாயத் திரையில் கதாபாத்திரங்களின் உணர்வுகள் வெளிப்படும் நகர்வுகளைக் காணும் புதிய படைப்புலகமாக வெர்சுவல் ரியாலிட்டி காட்சிமொழியின் புதிய வாசலைத் திறந்திருக்கிறது.
தனபால் பத்மநாபன், திரைப்பட இயக்குநர்
தொடர்புக்கு: pdhanapal@gmail.com