இந்து டாக்கீஸ்

 ‘அதர்ஸ்’ திரைப் பார்வை | ஓர் ஆபத்தான ஆட்டம்! 

செய்திப்பிரிவு

புறநகரில் நடக்கும் ஒரு கொள்ளை முயற்சியில் விபத்துக்குள்ளாகும் ஒரு வேன் வாகனத்தில் இருந்த நான்கு பேர் இறந்துவிடுகிறார்கள். ஓட்டுநர் மட்டும் தப்பி ஓடிவிட, இறந்த நால்வரில் 3 பெண்கள் பார்வையற்றவர்கள் என்பதும், அவர்கள் ஏற்கெனவே கொல்லப்பட்டு சடலங்களாகத்தான் அந்த வேனில் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள் என்பதும், கொலைகளை விபத்தாக மாற்றும் முயற்சியே அது என்பதை ஆதித்தியா கண்டுபிடிப்பதிலிருந்து தொடங்குகிறது படம்.

பின்னர் அவரது பியான்சி கௌரி கிஷன் மருத்துவராகப் பணிபுரியும் செயற்கை கருத்தரிப்பு மைய மருத்துவமனையின் ஆய்வகம் ‘டார்கெட்’ செய்யப்பட்டதால் உருவாகும் சிக்கல், முதலில் நடந்த விபத்துடன் எப்படி தொடர்பு கொள்கிறது என்பதை கண்டறிந்து, சதியின் பின்னாலிருக்கும் முகத்தை நாயகன் நெருங்குவதே கதை.

முதலில் இயக்குநர் அபி ஹரிஹரன் தேர்வு செய்துகொண்ட கதைக்கருவைப் பார்ப்போம். ‘மருத்துவத் துறை குற்றங்கள்’ என்பதை மையமாகக் கொண்ட படங்கள் பெரும்பாலும் உறுப்புத் திருட்டையும் போலி மருந்துகளையும் தாண்டி பெரிதாகச் சிந்தித்ததில்லை. இதில், சோதனைக் குழாய் வழியே குழந்தை பெற்றுக்கொள்ள முன்வரும் பெற்றோருக்காக, நிராதாரவான பெண்களிடமிருந்து திருடப்படும் கரு முட்டைகள், அவற்றை கையாழும் மருத்துவ ஆய்வங்களின் பாதுகாப்பு அடுக்கில் இருக்கும் பலகீனம் ஆகிவற்றுடன் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட ஸ்டீராய்டு மருத்துகளை இப்படியும் பயன்படுத்த முடியும் என ஒரே கதைக் களத்துக்குள் இணைந்த விதம் பாராட்டும்படி இருகிறது.

ஆனால், இப்படிப்பட்ட மருத்துவக் குற்றங்கள் நடக்க இயக்குநரே எதற்காக வழிகாட்ட வேண்டும் என்ற அதிர்ச்சியும், அதில் சமூக விடுதலை நோக்கி நகர்ந்துவரும் திருநர் சமுகத்தை சினிமேட்டிக் ‘சட்டகம்’ என்கிற சட்டகத்துள் அடைத்ததும் இயக்குநர் மீது கோபம் கொள்ள வைக்கிறது. ஆனால், திரைக்கதை நெடுகிலும் நிறைய திருப்பங்களை அவர் நிறைத்து வைத்திருப்பதாலும் மாற்றுப் பாலினத்தவரை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து முரணான கதாபாத்திர வடிவமைப்பின் மூலம் அவர் காட்டியிருக்கும் நேர்மையான அக்காறையாலும் அவரை நாம் மன்னித்துக் கடந்து படத்தின் ஓட்டத்தில் கரைந்துவிடும்படி செய்திருக்கிறார்.

அறிமுகப் படத்திலேயே, பிரபலமான கதாநாயகர்கள் ஏற்று நடிக்க வேண்டிய ஒரு புலன் விசாரணை உயர் காவல் அதிகாரி கதாபாத்திரத்தை, ‘நான் குழந்தை நடிகன் இல்லை’ என்று தன்னுடைய இயல்பான, ‘மேன்லி’யான நடிப்பால் காட்டிவிடுகிறார் ஆதித்யா மாதவன். கௌரி கிஷனுடன் திருமணம் நிச்சயமான நிலையில், அவருக்கும் ஆதித்யாவுக்கும் இடையில் இருக்கும் இணக்கமான காட்சிகளின் அளவைக் குறைத்து, அவர்களது உறவை கதையின் நகர்வில் பொருத்தியது நன்று என்றாலும் பாடல் காட்சி கதையோட்டத்துக்கு அவசியமற்ற திணிப்பாகவே இருக்கிறது.

நாயகியாக வரும் கௌரி கிஷன், தான் மருத்துவராகப் பணிபுரியும் தனியார் மருத்துவமனையில் கண்டறியும் சிக்கலின் முகம், அதன் தொடர்ச்சி எங்கே யாரால், எதற்காக செய்யப்பட்டது என்பது புரியாமல் திகைப்பதில் தொடங்கி, தன்னைச் சூழ்ந்துகொள்ளும் வஞ்சகர் உலகம் துரத்தும் தருணத்தில் உயிர் பிழைக்க ஓடும்போதும், நாயகனுடன் கல்யாண வாழ்க்கையின் கனவுகளை அசைபோடும்போதும் என அளவாக நடித்திருக்கிறார்.

ஆதித்யாவுக்கு விசாரணையில் உதவும் சக காவல் அதிகாரியாக வரும் அஞ்சு குரியனும் நடிப்பில் குறை வைக்கவில்லை. பணியடுக்கில் காவல் ஆய்வாளராக வரும் முனீஷ்காந்தை நகைச்சுவை பங்களிப்பாளர் என்ற கோணத்தில் பயன்படுத்தாமல் குணச்சித்திரமாகப் பயன்படுத்தியிருப்பதும் ஓகே.

அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவும் ஜிப்ரானின் பின்னணி இசையும் த்ரில்லர் களத்துக்கான தேவையை உணர்ந்து காட்சிகளை தூக்கிப் பிடிக்கின்றன.

ஓர் அறிமுக இயக்குநர் அல்லது அறிமுக நாயகன் தங்களுடைய முதல் படமாக ஒரு த்ரில்லரை தேர்ந்தெடுப்பது விபரீதமான விளையாட்டு என்பதே என் பார்வை. ஆனால், தேர்ந்தெடுக்கும் கதைக் கருவும் அதை மெல்ல மெல்ல விடுவித்துக் காட்டும் சுவாரசியமான திரைக்கதை அமைப்பில் கோட்டை விடாமலும் இருந்தால் ரசிகர்கள் ஆதரவு நிச்சயம்.

‘அதர்ஸ்’ படத்தின் இயக்குநர் + நாயகன் + மற்ற முதன்மை நடிகர்கள் + தேர்ச்சி மிக்க தொழில்நுட்பக் குழு என்கிற கூட்டணி, பார்வையாளர்களின் பணத்தையும் நேரத்தையும் மதித்திருக்கிறார்கள். அதேநேரம், இதுபோன்ற கதைகளை த்ரில்லராகத்தான் சொல்லவேண்டும் என்கிற கட்டாயத்தை ரசிகர்கள் ஒருபோதும் எதிர்பார்க்க மாட்டார்கள் என்பதையும் அறிமுக இயக்குநர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

SCROLL FOR NEXT