‘முள்ளும் மலரும், ஜானி, எங்கேயோ கேட்ட குரல் போன்ற படங்களிலெல்லாம் தலைவரின் நடிப்பைக் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம். அவர் நம்ம தமிழ்நாட்டின் பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர் என்று அவரது 80களின் படங்களைப் பார்க்கும் போது பெருமையாக எண்ணத் தோன்றும்.
பட்! அவர் சூப்பர் ஸ்டார் ஆனதும் ஸ்டைலும் ஸ்பீடாக வசனம் பேசுவதும்தான் நடிப்பு என்று அவரை இயக்குநர்கள் பிராண்ட் பண்ணி விட்டார்கள். ஆனா கமல் சார்! ‘விக்ரம்’ மாதிரியான கமர்ஷியல் மசாலா படத்தில்கூட கேரக்டருக்கான நடிப்பைக் கொடுக்க நினைக்கிற அவரோட பிடிவாதம் நமக்குப் பொறாமையா இருக்கும்.
அந்தப்படத்தில், கமல் வீட்டின் கூடத்தில் கிடத்தியிருக்கும் கொலைசெய்யப் பட்ட அவருடைய மகனின் சடலத்தைச் சுற்றி அமர்ந்து உறவினர் பெண்கள் அழுதுகொண்டிருப்பார்கள். அப்போது எதுவும் பேசாமல், ‘எல்லாரும் எழுந்து கொஞ்சம் வெளிய போறீங்களான்னு வசனத்துல சொல்றதுக்குப் பதிலா, பாடிலாங்குவேஜ் மூலமா ஒரு முகபாவம் காட்டுவார் பாருங்க.
அய்யோ.. ! அந்த நொடியில் நமக்கு அப்படியொரு பெயினைக் கடத்துவார் மனுஷன்! ஒரு தொழில்முறை திரை நடிக ரால், தன் வாழ்நாளில் ஏற்ற கதா பாத்திரங்களுக்கு இவ்வளவு முகபாவங்களைக் காட்ட முடியுமா என்று ஆசிய சினிமாவில் ஒருவரைத் தேடினால் அது நிச்சயமா கமல் மட்டும்தான்.
எப்போதும் நான் செல்ஃப் ஷேவிங் செய்பவன். அதற்காகக் கண்ணாடி முன்னால் போய் நிற்கும்போதெல்லாம் ‘பேசும் படம்’ திரைப்படத்தின் அறிமுகக் காட்சியில் மூக்குத் துவாரங்களில் உள்ள முடிகளை வெட்டும் கமலின் அஷ்ட கோணல் முகபாவம் ஒருமுறை நினைவுக்கு வந்துவிட்டுப்போகும். யோவ்…! நீ உண்மையி லேயே ரஜினி ரசிகன்தானா என்றுகூட நீங்கள் என்னிடம் கேட்கலாம்.
என்றைக்கும் ரஜினி ரசிகனாகவே இருக்க விரும்புகிற எனக்கோ, என் தலைவருக்கோ கமலைக் கொண் டாடுவதில் எந்தச் சிக்கலும் இல்ல.’ - முகநூலில் ஒரு சீனியர் ரஜினி ரசிகரின் பதிவு இது. ரஜினியை ஆழமாக நேசித்தாலும் கமலின் மீதும் அவரது கலையின் மீதும் அபார மதிப்பு வைத்திருக்கும் இவரைப் போன்ற லட்சக்கணக்கான ரஜினி ரசிகர்கள் கமலுக்கும் ரசிகர்களாக இருப்பதுதான் அவருடைய 65 ஆண்டு காலக் கலைப் பயணத்தின் வெற்றி.
கே.பாலசந்தரின் மாணவனாகத் திரையில் வளர்ந்திருந்தாலும் தன் மனதுக்கு நெருக்கமான படைப் பாளிகளுடன் மீண்டும் மீண்டும் இணைந்து தரமான பொழுது போக்குப் படங்களைக் கொடுத்துக் கொண்டே இருந்தவர் கமல்.
அவர்கள் எல்லாம் இன்று முதுமையிலும் காலத்தின் மடியிலும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கமல், தனக்கோ தனது கலைக்கோ ஓய்வில்லை என்பதை நிரூபித்தபடி தங்குதடையில் லாமல் ஆனால் நிதானமாக வெற்றிக் கோட்டைக் கடந்து அதற்குப் பிறகும் ஓட்டம் இருக்கிறது என்று ஓடிக்கொண்டிருக்கிறார்.
வற்றாத ஆற்றல்: வெற்றிகளையும் புகழையும் தன்னுடையதாக மட்டும் வைத்துக் கொள்ளாமல், சக நடிப்புக் கலைஞர் களையும், புதிய தலைமுறைத் திறமை களையும் தன்னுடைய படங்களில் பங்கேற்க வைத்து திரை வெளியிலும் வாய்ப்புகளை அவர்களுக்குப் பகிர்ந்துகொடுப்பதில் கமல் எனும் கலைஞன் தாய் மனம் கொண்டவர். இன்று ‘பான் இந்திய சினிமா’ என்கிற வியாபார எல்லையை விரிக்கும் நோக்கம் கொண்ட படங் களில், பிரபலமான பிராந்திய மொழிக்கலைஞர்களை நடிக்க வைக்கிறார்கள்.
ஆனால், 80களிலேயே இந்த எல்லையைக் கடந்தவர் கமல்ஹாசன். அவர் நினைத்திருந்தால் பாலிவுட்டின் நட்சத்திர வானில் நிரந்தரமான ஓர் அரியணையை உருவாக்கிக் கொண்டிருக்க முடியும். ஆனால், பாலிவுட்டின் பணி முறையை கமல் ஏற்கவில்லை. ‘ஒரு இந்தி படம் முடிவடைய ஒரு வருடத்துக்குமேல் ஆகலாம்; அந்த நேரத்தில் நடிகரின் தோற்றம், ஃபேஷன் எல்லாம் மாறி விட்டிருக்கும்,’ என்று தன் பயணம் எங்கேயும் எதற்காகவும் முடங்கிவிடக் கூடாது என்பதைச் சொல்லி வரிசைக் கட்டி வந்த பாலிவுட் வாய்ப்புகளை மறுத்தவர்.
ஓர் உச்ச நட்சத்திரமாக உயர்ந்த பிறகு, தான் ஏற்ற, எழுதிய புதுமையான கதாபாத்திரங்களுக்காகத் தன் தோற்றத்தை எவ்வளவு கேலிக்குரிய தாகவும் மாற்றிக்கொள்ளத் தயங்காத தோற்ற நடிப்பில் ஜீனியஸ். அது ‘அன்பே சிவம்’ படத்தில் விபத்தில் முகம் நசுங்கிய நல்லசிவம், ‘அபூர்வ சகோதரர்கள்’ குள்ள அப்பு, ‘தசாவதாரம்’ கிருஷ்ணவேணிப் பாட்டி, தற்கால புதிய தலைமுறை அறிவியல் புனைவான ‘கல்கி 2898’இன் சுப்ரீம் யாஸ்கின் எனப் பார்வையாளர்களைத் தன் தோற்றத்தின் வழியே ஈர்த்து, அந்தத் தோற்றங்களில், தன் கதாபாத்திரங்களை மட்டும் நடிப்பால் உணர வைக்கும் அபூர்வ வெளிப்பாட்டுத் திறன் கொண்டவராகத் தன்னைத் தக்கவைத்திருக்கிறார்.
காலத்துக்கே சவால்! - சினிமாவை ஒரு பொழுதுபோக்குக் கலையாகக் காணும் கமல், பொழுது போக்கு என்கிற அம்சத்துக்கு அப்பால், அதில் சமகாலச் சமூகத்தின் கதாபாத்திரங்களை அதிகமும் பிரதி நிதித்துவம் செய்வதில், அவற்றின் வழி இந்தியாவின் மனசாட்சியை ஒலிக்க வைப்பதில் ஒரு பொறுப்பு மிக்க திரைக்கதை எழுத்தாளர். உருவாக்கத்திலோ, உலகத்தர இயக்குந ராகத் தன்னுடைய அழுத்தமான முத்திரைகளை ‘விஸ்வரூபம்’ வரையிலும் பதிந்து வந்திருக்கிறார். அவருடைய ‘குருதிப் புனல்’, ‘ஹே ராம்’, ‘விருமாண்டி’ ‘உத்தம வில்லன்’ உள்ளிட்ட பல படங்கள் தமிழ் சினிமாவின் தேடலை மீறி எழுந்த படைப்புகள்.
இடையறாத இலக்கிய வாசிப்பும், எழுத்தாளர்கள் உடனான அவரது தொடர்ச்சியான நட்பும் அவர்களுடனான தொடர்பும் கொண்டதுதான் இத்தகைய படைப்பாளியாக மாற இயக்குநர், எழுத்தாளர் கமல், கவிஞர் கமலுக்கு ஊக்க சக்தி அளித்தன என்பதை, புதிய தலைமுறை தமிழ் சினிமா கலைஞர்கள் கவனித்துக் கற்றுக்கொள்ளலாம். தொழில்நுட்ப வளர்ச்சியின் புதியபுதிய பரிமாணங்களை எல்லாக் காலத்திலும் முதல் முன்னோடியாகத் துணிந்து தன் படங்களில் பயன்படுத்தி முன்மாதிரி காட்டுவதில் கமலின் கலையார்வம் வற்றாத ஒன்று.
அவரது பார்வை இப்போது செயற்கை நுண்ணறிவைக் கற்பதில் திரும்பியிருக்கிறது. அவருடைய 70வது பிறந்தநாளான இன்று, ‘நாயகன்’ திரைப்படம் டிஜிட்டல் முறையில் புத்தாக்கம் பெற்று வெளியாகிறது. ‘பத்ம விருதுகளால் அவர் கௌரவம் செய்யப்பட்டிருந் தாலும் பால்கே விருது இந்நேரம் அவரை அடைந்திருந்தால் இந்த அசல் நாயகனின் பெருமை மேலும் கூடியிருக்கும்.
ஆனால், தான் இன்னும் ஓய்வு பெறவில்லை என்பதையே அவரது சமீபத்திய பேச்சு எடுத்துக் காட்டுகிறது: இந்திய மனம் தோல்வி என்பதை ஒரு தண்டனையாகப் பார்த்துப் பழக்கப்பட்டிருக்கிறது. நான் பலமுறை தோல்வியடைந்துள்ளேன், பொதுவாகவும், தனிப்பட்ட முறையிலும்.
சில படங்கள் தோல்வியடைந்தன, சில படங்கள் புரிந்து கொள்ளப்படவில்லை, சில உண்மைகளை மக்கள் காண விரும்பவில்லை. நீங்கள் பாராட்டும் என்னுடைய வெற்றிப் படங்கள் பலவும் நீங்கள் காணாததோல்விகளின் நீண்ட தொகுப்பே! நீங்கள் அதிகம் தோல்வியடைந்தால், அதே அளவுக்குக் கல்வியும் பெறுகிறீர்கள்” என்கிறார். இதனால்தான் கமல் திரையுலகில் ஆசிரியராகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார்.
- jesudoss.c@hindutamil.co.in