போர் என்பது இரு நாடுகளுக்கு இடையே மட்டும் நடப்பதில்லை. ஏற்றுக்கொண்ட கொள்கைகள், ஆதிக்கத்தின் அத்துமீறல்கள், அதிகாரத்தில் படிநிலை உயர்வை அடைவது மற்றும் பதின்பருவக் குழந்தை வளர்ப்பு கூட ஒரு விதத்தில் போர் தான். இப்படியான பல்வகை போர்களின் பின்னணியில் வெளிவந்திருக்கும் அட்டகாசமான திரைப்படம் தான் ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ (One Battle After Another).
புலம்பெயர் அகதிகளைக் காக்கும் போராளிகள் குழுவொன்று அதிகார வர்க்கத்தை எதிர்த்துப் போரிடுகிறது. இக்குழுவின் தலைவியான கறுப்பினப் பெண் தலைவி பெர்ஃபிடியாவும் அவளின் வெள்ளைக்காரத் துணைவனும் ஆன பாப் பல்வேறு தாக்குதல்கள் நிகழ்த்துகின்றனர். இதனிடையே பெர்ஃபிடியாவிற்கு ஒரு பெண் குழந்தை பிறக்கின்றது. பின்னர், பெர்ஃபிடியா ராணுவத்திடம் பிடிபட, பாப் குழந்தையுடன் தப்பித்து செல்கிறான். இவர்களை பழி தீர்க்கவும், அதிகாரத்தின் படி நிலையில் மேலேறவும் விரும்பும் கர்னல் லாக்ஜா இவர்களைத் தேடுகிறார். 16 வருடங்கள் கழித்து இந்தத் தேடுதல் வேட்டை என்னவாகிறது என்பதைச் சுவாரசியமாகப் படைக்கப்பட்டிருக்கிறது.
உலகளாவிய திரைப்பட ரசிகர்களால் PTA என்று கொண்டாடப்படுபவர் எழுத்தாளர், தயாரிப்பாளர் இயக்குநர் பால் தாமஸ் ஆண்டர்சன் [ PAUL THOMAS ANDERSON ]. இது வரை எடுத்த 9 படங்களுக்கு 11 ஆஸ்கர் பரிந்துரைகள் 3 கோல்டன் க்ளோப் 1 பாப்டா விருது என இவருடைய திரை சாதனைகள் பட்டியல் பெரிது. 1990-இல் வெளியான தாமஸ் பிஞ்ச்சனின் வைன்லாண்ட் என்கிற நாவலை அடிப்படையாகக் கொண்டு, எழுதி, தயாரித்து, இயக்கியிருக்கிறார் பால் . போராளிகள் குழுவின் உளவியல், அதிகாரத்தின் வீச்சு, மத ரீதியான ரகசிய குழு, புலம்பெயர் அகதிகளின் நிலையற்ற வாழ்வு ஆகிய எனத் தீவிரமான கருப்பொருட்களை நகைச்சுவை கலந்து இலகுவாக ஒரு வணிக சினிமாவின் உள்ளடக்கத்தில் வெகு அழகாக கட்டமைத்திருக்கிறார் இயக்குநர் பால்.
வழமையான சாகச நாயகனாக இல்லாமல், போதைக்கு அடிமையாகி, கடவுச்சொல்லைக் கூட மறந்து விடும் அசாதாரண நாயகனாக லியனார்டோ டிகாப்ரியோ , போர்க்குணத்தை ரத்தத்திலேயே கொண்டிருக்கும் மகள் ’வில்லா’வாக பின்னியெடுத்திருக்கும் சேஸ் இன்ஃபினிட்டி மிகப் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். மிகவும் குறிப்பிட்டுப் பாராட்டப்பட வேண்டியவர் படத்தில் மறக்கமுடியாத வில்லனாக இறுக்கமான முகம் மற்றும் வினோதமான உடல்மொழியுடன் நம்மைப் பல காட்சிகளில் சிரிக்க வைத்துவிடும் லாக்ஜா வேடத்தில் பிரமாதப்படுத்தியிருக்கும் நடிகர், இயக்குநர் ஷான் பென்.
அதிகார வர்க்கத்தை எதிர்த்து குண்டுவெடிப்பு செய்த ஒரு போராளி, பிற்காலத்தில் ஒரு தந்தையாகத் தன் பதின்பருவ மகளின் வளர்ப்பில் திண்டாடும் காட்சி வெகு பிரமாதம். ஜெர்மானிய நாஸிக்கு இணையான ஒரு வெள்ளை மீயுயர்வுக் குழுவை பின்புலமாக வடிவமைத்திருப்பது சமகால அரசியலில் வெகுவாய் பொருந்திப்போகிறது. மற்றொரு முக்கிய அம்சமாக , இறுதியில் அலைகள் போல அமைந்திருக்கும் பாலைவனச் சாலைகளில் நடக்கும் கார் துரத்தல் காட்சிகளுக்காக ஒளிப்பதிவாளர் மைக்கேல் பாவ்மேன் குறிப்பிட்டுப் பாராட்டியே ஆக வேண்டும். இனிவரும் காலங்களில், மிகச் சிறந்த கார் துரத்தல் காட்சிகள் பட்டியலிலும், மிகச்சிறந்த வில்லன் நடிகர் பட்டியலிலும் இத்திரைப்படம் தவறாது இடம்பெற்றே தீரும்.
எடுத்துக்கொண்ட தீவிரமான கருப்பொருட்களின் அரசியலை எந்த விதத்திலும் நீர்த்துப் போகாமல், தனிமனித அகச்சிக்கல்களையும் சமகால அரசியலையும் மனித உறவுகளையும் எல்லாக் காலங்களிலும் அரசியலை ஆளும் மத அமைப்புகளின் அரசியலையும், மனித உறவுகளின் மேன்மையையும் நகைச்சுவை கலந்து வணிகத் திரைமொழியின் வரம்புகளுக்குள் சொல்லி வெகுஜனத்தை ரசிக்க வைக்கலாம் என்பதற்கு இத்திரைப்படம் ஒரு ஆகச்சிறந்த உதாரணம்.