இந்து டாக்கீஸ்

மிராய்: திரைப் பார்வை - கைவிடப்பட்டவனுக்கு காத்திருக்கும் வேலை!

டோட்டோ

கலிங்கத்துப் போரில் வெற்றிபெற்ற மாமன்னர் அசோகர், தனது சக்திகளை ஒன்பது ரகசியப் புத்தகங்களில் ஒளித்து வைக்கிறார். அவை உலகின் வெவ்வேறு பகுதிகளில் பாதுகாக்கப்படுகின்றன. சில யுகங்கள் கடந்து, அந்தப் புத்தகங்களைக் கைப்பற்றிச் சாகாவரம் பெறத் துடிக்கிறார் தீயசக்தியான மஹாபீர் லாமா. ஒன்பதாவது புத்தகத்தை வைத்திருக்கும் யோகினியான அம்பிகா, அகத்திய முனிவரின் வழிகாட்டுதலின்படி, தன்னுடைய மகன் வேதாவை (தேஜா சஜ்ஜா) வாராணசியில் கைவிடுகிறார்.

அவன் அங்கேயே வளர்ந்து 24 வயதை எட்டும்போது, அவன் யார் என்பதையும் அவனுக்கு இந்த உலகில் கொடுக்கப்பட்ட வேலை என்ன என்பதையும் திரையில் பிரம்மாண்டமாய் விரிக்கிறது கதை. அதுவும் ‘லைவ் ஆக்‌ஷன் - 3டி அனிமேஷன்’ கலந்த காவியத் திரைக்கதை அமைப்பு. அதற்கான காட்சியமைப்புகள் பிரம்மாண்டத் திரை அனுபவமாக நம்மை இருக்கையிலேயே அமரவைத்து அசரடிக்கிறது, தமிழிலும் வெளியாகியிருக்கும் இந்த அக்கட தேசத்தின் ‘மிராய்’.

முதலில் பாராட்டப்பட வேண்டியது, திரைக்கதையை எழுதி, ஒளிப்பதிவு செய்து, இயக்கியிருக்கும் 37 வயதே நிரம்பிய கார்த்திக் கட்டம்நேனியை (கார்த்திகேயா 2, ஈகிள் படங்களின் கதாசிரியர்). படத்தின் ஜீவனாக இருப்பவர் இந்தியாவின் தலைசிறந்த படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத். அவரின் வழிகாட்டுதலை இயக்குநர் தனது பேட்டிகளில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.

2024இல் ‘ஹனுமான்’ திரைப்படத்தின் வழியாகப் புகழ்பெற்ற தேஜா சஜ்ஜா, ரித்திகா நாயக், ஸ்ரேயா சரண், ஜெகபதிபாபு ஜெயராம் எனப் பெரும் நடிகர் பட்டாளம். இவர்கள் அனைவரையும் மீறி வில்லன் மகாபீராக வரும் மனோஜ் மஞ்சு, தன் கதாபாத்திரத்தின் தனித்தன்மை, அதை வெளிப்படுத்திய விதம் ஆகியவற்றால் நம்மை ஆக்கிரமித்து விடுகிறார்.

கதாநாயகியை மிகவும் கண்ணியமாகக் காட்டியதுடன், மூன்று குறும் பாடல்களை மட்டுமே படத்தில் வைத்துள்ளது தெலுங்கு வெகுஜன சினிமாவின் முன்னேற்றத்தைக் காட்டுகிறது. ஒரு லைவ் - அனிமேஷன் படத்தின் காட்சிகளுக்கு கௌரா ஹரியின் பின்னணி இசைக் காவியத்தன்மையைக் கொடுப்பதில் கூடுதல் பங்கினை வகித்திருக்கிறது.

கிஷோர் திருமலாவின் நகைச்சுவை, ராமாயணத்தில் வரும் பறவைக் கதாபாத்திரமான சம்பாதி கழுகு (ஜடாயுவின் சகோதரப் பறவை) இடம்பெற்றுள்ள வி.எஃப்.எக்ஸ் காட்சிகள், அவற்றுடன் விரியும் பெரும் நிலப்பரப்புக் காட்சிகள் ஆகியவற்றுக்குத் திரையரங்கில் மீண்டும் மீண்டும் விசில்.

அதிகப் பொருள்செலவில் தயாராகித் தோல்வி அடையும் பெரும் படங்களுக்கு மத்தியில், ஒப்பீட்டளவில் மிதமான பொருள்செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் தெலுங்கு சினிமாவில் அருகிவரும் வெற்றிகளின் வெற்றிடத்தை நிரம்பியிருக்கிறது. மலையாளத்துக்கு ஒரு ‘லோகா’ என்றால், தெலுங்கு சினிமாவுக்கு ‘மிராய்’.

- tottokv@gmail.com

SCROLL FOR NEXT