இந்து டாக்கீஸ்

பெருமானி: ஒரு கலாட்டா கல்யாணம் | ஓடிடி விரைவுப் பார்வை

டோட்டோ

ஒரு மெல்லிய கோடு. கோட்டின் இந்தப் பக்கம் புனைவு. அந்தப் பக்கம் நிஜ வாழ்க்கைச் சம்பவங்கள். இந்த இரண்டு பக்கங்களையும் அதன் முகங்கள் தெரியாமல் ஒற்றைப் புள்ளி யில் இணைப்பதே ஒரு கலைப் படைப்பின் வெற்றி. அதைத்தான் அமேசானில் வெளியாகியிருக்கும் ‘பெருமானி’ என்கிற மலையாளத் திரைப்படம் செய்திருக்கிறது.

ஆர்.கே.நாராயணனின் மால்குடி போல் பெருமானி என்பது கேரளத்தில் ஒரு கற்பனையான ஊர். அந்த ஊருக்கென்று ஒரு பழங்கதையும் தனித்த இறைநம்பிக்கையும் இருக்கின்றன. அந்த ஊரில் நாசருக்கும் ஃபாத்திமாவுக்கும் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடக்காது என்று மர்மமாக ஒரு சுவரொட்டி ஒட்டப்படுகிறது.

அந்த ஊருக்கு வேறு சில வெளியூர் ஆள்களும் வந்து சேருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நிகழும் குழப்பங்கள், அவர்களின் இறை நம்பிக்கை ஆகியவற்றுடன் இவற்றிடையே மயிலிறகாக வருடும் ஒரு மெல்லிய காதலும் என்னவாகிறது என்பதை 135 நிமிட அங்கதச் சித்திரக்கதை போலச் சித்தரித்திருக்கிறார்கள்.

வெறும் வசனங்களாக மட்டுமல்லாமல் நிறைய இடைவெளிகள், உடல்மொழி மற்றும் பார்வைகளால் நகைச்சுவையின் பல வண்ணங்கள் அழகாக வெளிப்பட்டுள்ளன.

அதேநேரம், தான் சொல்லவந்த அரசியலையும், பெண் சுதந்திர கருத்து களையும் கதையின் போக்கை மீறாமல் அழகாகச் சொல்லி இருக்கிறார் எழுத்தாளர் இயக்குநர் மஜூ கே.பி. ஊரின் அத்தனை கதாபாத்திரங்களும் ஒன்று கூடிவிடும் அந்தக் கடைசி 20 நிமிடக் கல்யாண கலாட்டா சிரிப்புக்கு உத்தரவாதம்.

SCROLL FOR NEXT