இந்து டாக்கீஸ்

காயல்: திரைப் பார்வை | ஒரு கடலோரப் பயணத்தின் காதல் சுனாமி!

திரை பாரதி

கீழ்மைகளில் அதிகமும் புரண்டு, உருண்டுகொண்டிருந்த மனிதச் சமூகத்தைக் கைதூக்கி விட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைசிறந்த காதலர்கள் கார்ல் மார்க்ஸும் ஜென்னியும்.

அவர்களைப் போல், ‘மகிழ்ச்சி, சோகம், சிரிப்பு, கண்ணீர், வாழ்க்கை, மரணம்னு எல்லாத்துலயும் உன்கூட இருக்கணும்’ எனத் தன் காதலனைப் பார்த்துச் சொல்கிறாள் தேன்மொழி (காயத்ரி சங்கர்). காயல் நிலத்தோரம் தனக்கென ஒரு கூடுகட்டி, கடற் காற்றின் ஈரம் தழுவ அமைதியாக வாழ விரும்பும் அவளை ஒரு தேவதை (தேவதை என்பதைத் தூய உள்ளம் கொண்ட பெண் அல்லது ஆண் எனக் கொள்க) எனலாம்.

ஆனால், யமுனா (அனுமோள்) என்கிற நதியின் பெயரைக் கொண்டிருக்கும் அவளுடைய தாயின் ரத்த நாளங்களில் உள்நுழைந்த சாதி எனும் சாயக் கழிவு, மூளையின் இடுக்குகளில் கழும்பேறிக் கிடக்கிறது. தமிழ்ச் சமூகத்தில், சாதியின் அதிகாரத்தைச் சமமாகப் பங்கிட்டு வைத்திருக்கும் பெண்களின் பிரதிநிதியான யமுனாவிடமிருந்து தேன்மொழி தன் காதலைக் காப்பாற்றிக்கொண்டாளா, இல்லையா என்பது கதை.

‘செத்துப்போவதும் காணாமல் போவதும் ஒன்றுதான், அது தரும் வலி மட்டுமல்ல; அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை’ எனத் தேன்மொழியின் குடும்ப நண்பரான ஸ்ரீதர் (ரமேஷ் திலக்) சொல்கிறார். தன் சாதி உணர்வைப் பார்வையாளர் ஒருகணமேனும் உதறிவிடத் தூண்டும் மீட்சி, அந்தக் காட்சி.

‘உங்க அப்பா வேணும்னா பெரியார் அது இதுன்னு சொல்வாரு.. பெரியார் வந்தா வெங்காயம் உரிச்சுக் கொடுப்பாரு’ என்று கேட்கிற யமுனாவாக அனுமோள் தன் முந்தைய கதாபாத்திரங்களை முற்றாக மறக்கடித்திருக்கிறார். தமிழாக வரும் லிங்கேஷ், அந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாரா, வாழ்ந்திருக்கிறாரா என்பதே ஆச்சரியமூட்டும் சந்தேகமாக இருக்கிறது. காயத்ரி சங்கருக்கும் இப்படியொரு கதாபாத்திரம் அமைந்தது அபூர்வம்.

அதில் தன்னுடைய முகபாவனைகளாலும் உடல்மொழியாலும் தேன்மொழியை ஒரு தேவதையாகவே உணரவைத்திருக்கிறார். ஸ்வாகதாவின் நடிப்பிலும் குறையில்லை. ஆனால், இளங்கோவனாக வரும் ஐசக் வர்கீஸ் நல்ல நடிப்பைத் தந்திருந்தாலும், நிலப்பரப்புக்கு வெளியே நிற்கும் அந்நியத் தோற்றம் அவருடையது.

வாழ்க்கைக்கும் திரைப்படத்துக்குமான இடைவெளியை முற்றாகக் குறைத்து விடும் திரைப்பட முயற்சிகள் குறைந்து போயிருக்கும் நாள்களில் வந்திருக்கிறது இந்தக் ‘காயல்’. அதன் திரையாக்கம், சிலுசிலுவென கடற்காற்றாய் வருடும் நிலவெளி, இழப்பின் வலியை மர்மமாக உணர்த்தும் இசை ஆகியவற்றை ஒருங்கிணைத்து, மௌனத் தாக்குதல் தொடுக்கும் படைப்பைத் திரை வெளியிலும் தரமுடியும் என்பதைக் காட்டியிருக்கிறார் எழுத்தாளர் தமயந்தி.

SCROLL FOR NEXT