புத்தாயிரத் தமிழ் சினிமா இயக்குநர்களுடன் கடந்த 20 ஆண்டுகளாக நட்பு பாராட்டி வரும் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப். நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்திருந்த ‘மகாராஜா’ படத்தின் வெற்றியால் அவர், நல்ல நடிகராகவும் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியிருக்கிறார்.
அவர் நீண்டகாலம் படம் இயக்காமலிருந்த சூழ்நிலையில் தற்போது அமேசான் - எம்.ஜி.எம். ஸ்டுடியோஸ் இந்தியா தயாரிப்பில் ‘நிஷாஞ்சி’ என்கிற இந்திப் படத்தை இயக்கியிருக்கிறார். அது தமிழ்நாட்டில் ஆங்கில சப் டைட்டில்களுடன் வரும் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
அறிமுக நடிகர் ஆயிஷ்வர்ய் தாக்கரே (Aaishvary Thackeray) இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். பப்லூ - டப்லூ எனும் இரட்டைச் சகோதரர்களின் உண்மையான வாழ்க்கைக் கதையின் தாக்கத்துடன் கற்பனை கலந்த காதல், சாகசம், அம்மா பாசம் என முழு நீளப் பொழுதுபோக்குப் படமாக உருவாக்கியிருப்பதாகக் கூறியிருக்கிறார் காஷ்யப்.
கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் கூட்டணி! - ‘ஜெய் பீம்’ ‘பொன்மகள் வந்தாள்’ தொடங்கி தற்போது ஜி5 தளத்தில் வெளியான ‘சட்டமும் நீதியும்’ வரை மீண்டும் நீதிமன்ற விசாரணைக் காட்சிகளை முதன்மைப்படுத்தும் ‘கோர்ட் ரூம் டிராமா’ படங்களுக்கான வரவேற்பு கூடியிருக்கிறது. இந்த வரிசையில் கீர்த்தி எளிய மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞராக நடிக்கும் புதிய படத்தை ஸீ ஸ்டுடியோஸ் - டிரம்ஸ்டிக்ஸ் புரொடெக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இன்னும் தலைப்புச் சூட்டப்படாத இந்த ‘கோர்ட் ரூம் டிராமா’ வகைப் படத்தில் கீர்த்தி சுரேஷின் எதிர் வழக்கறிஞராக இயக்குநர் மிஷ்கின் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ்.விஜய் எழுதி, இயக்கு கிறார். படத்தின் தொடக்க விழாவில் படக்குழுவினருடன் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் ஆகியோருடன் இப்படத்தின் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்ஸும் கலந்து கொண்டார்.