முதன்முதலில், பெண் சூப்பர்ஹீரோ திரைப்படம் ஒன்று வெளிவந்தது இந்தியாவில். அதுவும், மேற்கத்திய உலகில் சூப்பர்மேன் , பேட்மேன் போன்ற சாகசக் கதாபாத்திரங்கள் காகிதத்தில் படைக்கப்படுவதற்கு முன்னரே. இதை உங்களால் நம்ப முடிகிறதா ? ஆம்.1935இல் வெளிவந்த முதல் பெண் சாகச நாயகி இந்தி திரைப்படம் "ஹண்டர்வாலி" தான் அது. சாகச நாயகியை முதன்மை கதாபாத்திரமாக கொண்ட படங்கள் கொஞ்ச காலம் நீடித்தாலும், பின்னர் வழக்கொழிந்து போயின. தற்காலத்தில், அபூர்வமாக வெளிவரும் பெண் சாகச நாயகி படங்களில் மிகவும் முக்கியமான மலையாளத் திரைப்படம் தான் "லூகா : சாப்டர் ஒன் : சந்திரா".
தற்கால பெங்களூர் நகரத்தில் சந்திரா என்கிற புதிய பெண் வந்து சேர்கிறார். யார் பார்வையிலும் அதிகம் படாமல் ஓர் இரவு நேர உணவு விடுதியில், ஒரு சின்ன வேலையும் பார்த்துக்கொள்கிறார். அவளின் எதிர் குடியிருப்பில் சன்னி மற்றும் வேணு என இரண்டு வாலிபர்கள் வசிக்கிறார்கள். அதில், சந்திராவின் மேல் கொண்ட ஈர்ப்பால் சன்னி அவளை பின்தொடர்கிறான். அதே ஊரில், காவல்துறையின் துணையோடு மனித உறுப்புகள் கடத்தல் நடக்கிறது. இதனிடையே , வேணுவின் துப்பறிதலில், சந்திராவை பற்றிய மர்மமான, அதுவரையில் சொல்லப்படாத ரகசிய விஷயங்கள் வெளிவர, இவர்கள் என்ன ஆகிறார்கள் என்பதே கதை.
இப்படிப்பட்ட கதையை எழுதி திரைப்படமாக மாற்ற அசாத்திய துணிச்சல் மட்டுமில்லாமல் அபரிதமான கற்பனைத் திறனும் தேவை. ஒரு நாட்டார் வழக்கியல் கதாபாத்திரம், அதை நவீன காலத்திற்கு ஏற்ற மாதிரியான மாற்று வடிவமைப்பு, இயல்பான நகைச்சுவை வசனங்கள், மனித உறுப்புகள் கடத்தும் நிழலுலக கொள்ளை கும்பல், அதற்கு உதவும் கறை படிந்த காவல்துறை இப்படி பல அடுக்குகளை கதை கொண்டுள்ளது. மேலும், இவற்றுக்காக ஒரு தனித்துவமான இரவு உலகையும் நிர்மாணிப்பதில் அபாரமான வெற்றி கண்டிருக்கிறார் எழுத்தாளர் மற்றும் இயக்குனர் டாமினிக் அருண். நம் காற்றில் தவழும் நாட்டார் கதை மாந்தர்களை கிட்டத்தட்ட மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் போல மாற்றி வடிவவமைத்த புத்திசாலித்தனம் பாராட்டுக்குரியது.
கதையின் முதல் பாதி, கதாபாத்திரங்களை நிறுவுவதிலும், அவர்களுக்கான தனி உலகத்தை கட்டமைப்பதிலும் செலவிடப்பட்டுள்ளது. கதையின் ஊடாக இயல்பாக பயணிக்கும் நகைச்சுவையும் பக்கபலமாக இருக்கிறது இரண்டாம் பாதியில், கதை வேகமெடுக்கும் சம்பவங்கள், அதன் பின்னணி காட்சிகள், சம்பவங்களை இணைக்கும் புள்ளிகள் என முழு திரைப்படமாக மாறும் மாய இரசவாதம் பிரமாதம். இதுவரையில், கல்லூரி பெண்ணாகவும், காதலிக்கப்படும் கதாபாத்திரமாகவும் வந்த கல்யாணி பிரியதர்ஷன் முதல் முறை அதீத சக்தி கொண்ட அழுத்தமான சூப்பர் உமன் கதாபாத்திரமாக நிறைவாக செய்திருக்கிறார்.
இவருடன், இணை நாயகனாக வரும் நஸ்லேனின் வழக்கமான நகைச்சுவை கதாபாத்திரம் மிகவும் குறிப்பிட்டு சொல்லப்படவேண்டும். மற்றுமொரு ஆச்சரியம், நடன இயக்குநரும் நடிகருமான சான்டியின் பாத்திரம் . இவரின் கூர்பார்வையும், உடல்மொழியும் இவர் ஏற்றுக்கொண்ட எதிர்மறை கதாபாத்திரத்திற்கு துணை சேர்க்கிறது. ஆனால் இவர் கதாபாத்திரத்தின் கன்னட பெயரான நாச்சியப்ப கௌடா, இவர் பேசும் தமிழோடு ஒட்டவில்லை. கதையின் பின்புலமாக சொல்லப்பட்டிருக்கும் பூர்வகுடிகளின் நீலி வழிபாடு, அதன் பின்னணி, அந்த நிலம் என மிக அழுத்தம்திருத்தமாக பதியப்பட்டிருக்கிறது. குறிப்பாக, சிறுமி நீலி அதீத சக்தி பெற்று யட்சியாக மாறும் தருணத்தின் காட்சி வடிவமைப்பும் இசையும் மிகச்சிறப்பு .
நிமீஷ் ரவியின் தனித்துவமான ஒளிப்பதிவும், ஜேக்ஸ் பிஜாயின் பொருத்தமான பின்னணி இசையும் சாமன் சாக்கோவின் நேர்த்தியான படத்தொகுப்பும் யானிக் பெண்ணின் சண்டைக்காட்சி வடிவமைப்பும் பாங்லெனின் தயாரிப்பு வடிவமைப்பும் கூடுதல் பலங்கள்.
ஆங்காங்கே சில குறைகள் தென்பட்டாலும் பெரிய பட்ஜெட் படங்கள் கூட செய்யமுடியாத ஒரு அழுத்தமான திரைக்கதையை, பின்புலக் காட்சியமைப்புகளை, திரையரங்க அனுபவத்தை செய்திருப்பது சிறப்பு. இரத்தம் சார்ந்த காட்சியமைப்புகள் குறைக்கப்பட்டிருந்தால் சிறார்களுக்கு இப்படம் அதிக அளவில் சேர்ந்திருக்கலாம். மேலும் படத்தில் வரும் பிரமாதமான சிறப்புத் தோற்றத்தில் வரும் கேமியோ கதாபாத்திரங்கள் அடுத்த பகுதிக்கு உண்டான ஆர்வத்தை பெரிய அளவில் தூண்டுகின்றன. அதிலும் ரோலக்ஸ் போல இறுதியில் வரும் படத்தின் தயாரிப்பாளரின் திடமான அறிமுகம் அதகளம். பெண் சாகச கதாபாத்திரங்களின் கதைகளை கையாள்வதில் து நமக்கு 90 ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரியம் இருப்பதால், இப்படத்தை ஒரு மீள் முயற்சியாகவும் திரையரங்க அனுபவத்தின் மைல்கல்லாகவும் கண்டிப்பாக கொண்டாடி வரவேற்கலாம்.